திருமுருகன்காந்திக்கு ஆபத்து – மே 17 இயக்கத்தினர் பதட்டம்

ஆகஸ்ட் 8 ஆம் தேதி அதிகாலையில் கைது செய்யப்பட்டார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. அதையொட்டி அவ்வமைப்பினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

பெங்களூரில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இன்று இரவு தமிழ்நாடு காவல்துறையினால் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளார். தமிழகம் அறிந்த ஒரு மனித உரிமை அரசியல் செயல்பாட்டாளரான திருமுருகன் காந்தியை அழைத்து வருவதற்கு, ஒரு பயங்கரவாதியை அழைத்து வருவதைப் போன்று 10க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான காவல்துறையினர் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஒரு மனித உரிமை செயல்பாட்டாளரை அழைத்து வருவதற்கு எதற்கு இத்தனை காவல்துறையினர் வரவேண்டியுள்ளது என்பது இயக்கத் தோழர்களாகிய எங்களுக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

பெங்களூரிலிருந்து புறப்பட்ட அடுத்த விநாடியிலிருந்து எங்கள் ஒருங்கிணைப்பாளரின் பாதுகாப்பு என்பது தமிழ்நாடு அரசின் கையில் உள்ளது என்பதனை தெரியப்படுத்த விரும்புகிறோம். எங்கள் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ எந்த பாதிப்பு நிகழ்ந்தாலும் அதன் முழுப்பொறுப்பு தமிழ்நாடு அரசினையும், காவல்துறையினையுமே சாரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து ஜனநாயக சக்திகள், பொதுமக்களிடம் இதனை நாங்கள் வெளிப்படையாக ஜனநாயகப்பூர்வமாக முன்வைக்கிறோம். ஊடகங்கள் இந்த செய்தியினை அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response