கலைஞர் நினைவிடத்தில் கலங்கி நின்ற ஸ்டாலின் – தொண்டர்கள் கண்ணீர்

முன்னாள் முதல் அமைச்சரும், தி.மு.க தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 7-ந்தேதி உயிரிழந்தார். அவரது உடல் இராணுவ மரியாதையுடன் மெரினா அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

கலைஞர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைச் சுற்றிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. பெரிய அளவில் கலைஞர் உருவப்படம் வைக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, விடிய விடிய தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று அதிகாலை முதலே கலைஞர் நினைவிடத்துக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அலை அலையாக திரண்டுவரத் தொடங்கினர்.

நேரம் செல்லச் செல்லக் கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது. இதனால் காவல்துறையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பிட்ட எண்ணிக்கை அடிப்படையில் அஞ்சலி செலுத்த பொதுமக்கள் வரிசையாக அனுமதிக்கப்பட்டனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11.41 மணிக்கு நினைவிடத்துக்கு வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் என ஏராளமானோர் வந்தனர்.

தளர்ந்த நடையுடன் வந்த மு.க.ஸ்டாலின் நினைவிடத்துக்கு முன்பு ஒரு நிமிடம் நின்றார். பின்னர் கைகூப்பி வணங்கினார். நினைவிடத்துக்கு மலர் மாலை அணிவித்தார். பின்னர் 3 முறை மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

நினைவிடத்தை சில வினாடிகள் தொட்டுக்கொண்டே இருந்தார். பின்னர் கண்ணீர் மல்கக் கையெடுத்து வணங்கினார். நினைவிடத்தை ஒருமுறை வலம்வந்த பின்னர் அங்கிருந்து சோகமாக காலை 11.53 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.

எப்போதும் சுறுசுறுப்புடனும், வேக நடையுடனும் உற்சாகமாக வலம் வரும் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முற்றிலும் மாறியிருந்தார். சோகத்தால் அவரது முகம் வாடியிருந்தது. முகத்தில் 2 நாள் தாடி பரவியிருந்தது. யார் முகத்தையும் ஏறெடுத்தும் பார்க்காமல் கனத்த இதயத்துடன் வலம் வந்தார்.

மேலும் நிருபர்களுக்கு சளைக்காமல் பேட்டி தரும் மு.க.ஸ்டாலின் நேற்று பத்திரிகையாளர்கள் இருந்த திசையைக் கூடப் பார்க்கவில்லை.

மு.க.ஸ்டாலின் முகத்தில் இதுவரை சோகத்தை பார்க்காத தொண்டர்கள் அப்போது அதிர்ச்சி அடைந்தனர். அஞ்சலி செலுத்தி தனது காரில் ஏறும் வரை அவரைத் தொடர்ந்து சென்று, ‘கலங்காதே தலைவா… நாங்கள் இருக்கிறோம்’, என்று தொண்டர்கள் குரல் எழுப்பி வழியனுப்பினர்.

கலைஞர் நினைவிடத்துக்குத் திரண்டு வந்த பொதுமக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி சென்றனர். பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். கைக்குழந்தைகளுடனும் பெண்கள் காத்திருந்து கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி சென்றனர்.

சில பெண்கள் சமாதி முன்பு சூடம் ஏற்றி வழிபட்டனர். கண்களில் கண்ணீருடன் ஏராளமானோர் காணப்பட்டனர். சிலர் துக்கம் தாங்காமல் அழுதனர். தி.மு.க. தொண்டர்கள் சிலர் நினைவிடத்துக்கு அருகே மொட்டை அடித்துக் கொண்டனர். பின்னர் நினைவிடத்துக்கு வந்து, கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கலைஞர் நினைவிடத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். வயது முதிர்ந்தவர்கள் கலைஞர் படத்தைக் கையில் ஏந்தியவாறு அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

கலைஞர் நினைவிடம் உள்ள இடத்தில் கூடாரம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கூட்டத்தால் நேற்று அண்ணா நினைவிட வளாகம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

இந்தநிலையில் நேற்று இரவு 7.15 மணிக்கு கலைஞர் குடும்பத்தினர் அனைவரும் அவரது சமாதிக்கு வந்தனர். அவர்களது வருகையையொட்டி கலைஞர் நினைவிடத்தில் உதயசூரியன் வடிவில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அப்போது திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து அண்ணா நினைவிடம் அருகே நிழற்குடையில் சிறிது நேரம் அனைவரும் தஞ்சம் அடைந்தனர். மழை நின்றபிறகு செல்லலாம் என்று நினைத்திருந்தனர். மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்ததால் குடைபிடித்தபடி கலைஞர் நினைவிடத்துக்கு இரவு 7.40 மணிக்கு வந்தனர்.

கலைஞர் நினைவிடத்தில் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து கலைஞரின் வாரிசுகள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, செல்வி, கனிமொழி ஆகியோர் கூட்டாக மலர் மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கலாநிதிமாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் நினைவிடத்தைச் சுற்றி வலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து இரவு 8 மணியளவில் சோகத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதியது. நள்ளிரவுக்குப் பின் மக்கள் பார்வையிடத் தடை விதிக்கப்பட்டது. பராமரிப்புப் பணிகள் காரணமாக மக்கள் தடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Response