திருப்பூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா அவர்கள் விதி எண் 377 இன் கீழ் மக்களவையில் இன்று 18.07.2018 எழுப்பிய விஷயம்:
தானியங்கி தறிகள் மற்றும் சீனப் பொருட்களுடனான போட்டி காரணமாக நாட்டின் விசைத்தறி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைத்தறி தொழில் கூடங்கள் பல கடனில் சிக்கியும் இயங்க முடியாமலும் தவிக்கின்றன. தமிழ்நாட்டில் செயல்படும் 6 லட்சம் விசைத்தறி தொழில் கூடங்கள் மூலமாக சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் பெற்றுள்ளனர்.
ஜி.எஸ்.டி அமலாக்கத்துக்குப் பிறகு இத்தகைய தொழில் கூடங்கள் சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்புக்கு மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டித் தந்துள்ளன. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சுமார் 95 சதவிகித விசைத்தறி தொழில் கூடங்கள் உருப்படி அடிப்படையில் வெளிவேலைகளை எடுத்துச் செய்கின்றன. அவற்றில் பல வங்கிக் கடன்களாலும் பிற பிரச்சனைகளாலும் நலிவடைந்த நிலையில் உள்ளன.
இந்தச் சூழ்நிலையில், இத்தகைய தொழில்கூடங்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் வகையிலும் தொழில் நடத்தும் வகையில் அவை பெற்றுள்ள வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யவேண்டும் அல்லது அரசு சிறப்பு நிதித் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். ஜவுளி உற்பத்தியாளர்கள் நெசவுக்கான ஊதியங்களை குறைத்து தருவதால் ஏற்படும் இன்னல்களில் இருந்தும் இத்தகைய விசைத்தறி தொழில்கூடங்களைக் காப்பாற்றுமாறும் அரசை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன்.
விற்கப்படும் விலை ரீதியாக இந்தியப் பொருட்கள் போட்டிபோடும் வகையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளின் மீது சிறப்பு தீர்வை (Anti Dumping Duty) விதிக்கவேண்டும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜவுளிக்கான நூலிழைகள் மீது சிறப்பு தீர்வை (Anti Dumping Duty) விதிக்கவேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வழங்கி வரும் விசைத்தறி தொழில் பாதுகாக்கப்படும்.
கைத்தறி நெசவாளர்களாக உள்ள ஈரோடைச் சேர்ந்த 7000 பேரை தகுதியான தொழில் முனைவோர் பட்டியலில் சேர்த்து நிலை நிறுத்துமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இதனால் அவர்களின் தொழில் பாதுகாக்கப்படும். அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கி நேரடியாக வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் நெசவுத்தொழில் பயனாளிகளாக இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டு விடைபெறுகிறேன். நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.