கரை புரண்டோடி வரும் காவிரி – மக்கள் மகிழ்ச்சி

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

திறக்கப்பட்ட உபரிநீர் கர்நாடக – தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.

இன்று மதியம் 12 மணி நேர நிலவரப்படி ஓகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 37 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர் நீர் வரத்தால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. 120 அடி கொள்ளளவை கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழைக்காலத்தில் திறந்துவிடப்படும் உபரி நீர் என்றாலும் காவிரி கரை புரண்டோடுவது மகிழ்ச்சியாக இருக்கிறதென்று கரையோர மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Response