காலா பட தோல்விக்கு இதுதான் காரணமா?

ரஜினிகாந்த் படங்கள் வணிகத் தோல்வி பற்றிய செய்திகள் புதிதல்ல. அந்தப் படங்களின் உள்ளடக்கம் என்ன என்பதைப் பொறுத்து அவற்றை மக்கள் தள்ளுபடி செய்ததில் நான் வருத்தப்பட்டதுமில்லை.

ஆனால் ‘காலா’ வணிகச் சந்தையில் வெற்றிபெறவில்லை, பெரும் இழப்பையே தந்திருக்கிறது என்பதாகக் கேள்விப்படுகிறபோது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. இத்தகையதொரு படம் வெற்றிபெற வேண்டும் என்று இயக்குரை விடவும் தயாரிப்பாளரை விடவும் எதிர்பார்த்தவர்களில் ஒருவன் நான்.

ரஜினியின் முந்தைய சில படங்களை மக்கள் ஏற்காததற்குக் காரணம், அந்தப் படங்களில் அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் போனதால் இருக்கலாம். இளம் வயது ஹீரோயின்களுடன் நடித்ததுதான் காரணம் என்று அவரே சொன்னார். ஆனால் இந்தப் படம் என்ன சொல்லப்போகிறது என்பது பரவிவிட்டதால் அது மக்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்த நிலையிலேயே இப்படி நடந்திருக்கிறது.

படம் வெளியாவதற்கு முன்பாக அவசரத் தூத்துக்குடி பயணம் மேற்கொண்ட ரஜினி அங்கே உதிர்த்த கருத்துகள் படத்தின் தோல்விக்குக் காரணமாகிவிட்டதாக, தயாரிப்பாளராகிய அவரது மருமகன் ஏகக்கடுப்பில் இருக்கிறார் என்று ஒரு பத்திரிகை கூறுகிறது. ரஜினி அங்கே போய் அப்படிப் பேசியதால் இது ரஞ்சித் படம் என்பதும் நிறுவப்பட்டது. இதனிடையே படம் லாபகரமாகப் போகவில்லை என்று கூறப்படுவதை தனுஷ் மறுத்திருப்பதாகக் கடைசியாக வந்த செய்தி தெரிவிக்கிறது. ஒருவேளை, தனிமனித கார்ப்பரேட் கலைஞராகிவிட்ட ரஜினியின் படத்திற்குச் செய்யப்பட்ட முதலீடுகள், விளம்பரச் செலவுகள், தொடக்கத்திலிருந்தே கிளப்பப்பட்ட சர்ச்சைகள் மூலமாகவும் ஏற்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகள்… இவற்றோடு ஒப்பிடுகையில் அந்த விகிதத்திற்கு ஏற்ற வரும்படி அமையவில்லையோ என்னவோ. ஒருவேளை, தயாரிப்பாளருக்கு லாபம் கிடைத்தாலும் விநியோகிப்பாளர்களுக்கு எதிர்பார்த்த அளவு லாபமில்லை என்னவோ. அந்தச் சந்தை விவகாரங்கள் எளிய மூளைகளுக்குப் புரிபடுவதில்லை.

இந்தப் படம் பெரிய அளவில் வணிக வெற்றியைத் தொடாததற்கு வேறொரு முக்கியமான காரணம் இருப்பதை நான் காண்கிறேன். இது ரஞ்சித் படமாகவே அமைந்ததுதான் அந்தக் காரணம். அதாவது, அவர் முன்வைக்க விரும்பும் தலித் விடுதலை அரசியலை இந்தப் படம், அவரது முந்தைய படங்களை விட இன்னும் வெளிப்படையாகப் பேசுகிறது. சமூகத்தில் ஊறிப்போயிருக்கிற சாதியம் இந்த சமத்துவ அரசியலை வரவேற்கத் தயாராக இல்லை. சாதியச் சுவரை உடைப்பது இருக்கட்டும், அதில் ஒரு சிறு விரிசலை ஏற்படுத்துவதற்குக் கூட மிகப்பெரும் அரசியல் – சமுதாய இயக்கம் தேவை என்பது உறுதியாகிறது.

ரஜினி ரசிகர்களிலேயே கூட பெரும்பகுதியினர் இதை ஏற்கிற பக்குவத்தில் இல்லை என்றே கருதுகிறேன். வழக்கம்போல் சாகசம் செய்துகொண்டு, வழக்கம்போல் ஆண்டவனைப் பற்றிப் பேசிக்கொண்டு, வழக்கம்போல் பெண்களை மட்டம் தட்டி (தாய்க்கு மட்டும் விதிவிலக்கு) அறிவுரை கூறிக்கொண்டு என ரஜினியின் வழக்கமான படங்கள் தயார்ப்படுத்திவைத்திருக்கிற வழியிலேயே வந்திருந்தால் பெரிய வசூல் கொட்டியிருக்குமோ என்னவோ.

குறிப்பாகப் படத்தில் கறுப்பு, சிவப்பு, நீலம் என்ற மூவண்ண வானவில் முன்வைக்கிற சித்தாந்தத்தை ஆன்மீக அரசியல் தலைவரே கூட எந்த அளவுக்கு ஏற்கிறார் என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. எப்படியோ, ஒரு பெரும் நட்சத்திர நடிகரின் வணிக நோக்குப் படம் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்படுகிறபோது மாற்றத்திற்கான புதிய சிந்தனைகளும் அந்த மக்களிடையே செல்கின்றன என்ற என் போன்றோரின் எதிர்பார்ப்புக்கு இது ஒரு பின்னடைவுதான். சோர்ந்து ஓய்வதற்கான பின்னடைவல்ல. சற்றே கால்களைப் பின்னால் வைத்து இலக்கை நோக்கி முன்னேறிப் பாய்வதற்கான பின்னடைவு.

-குமரேசன்

Leave a Response