கருப்புச் சட்டைக்குத் தடை, கோமாளிக்கூத்தை நிறுத்துங்கள் – கி.வீரமணி ஆவேசம்

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக வளாகத்திற்குள் கருப்பு உடை அணிந்து சென்றால், தடுக்கப்படுவதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் தெரிந்துதான் இது நடக்கிறதா? இதுகுறித்து முதலமைச்சர் தெளிவுபடுத்தவேண்டும் – ஆணையோ, வாய்மொழி உத்தரவோ இருந்தால், அதனை அகற்றிடவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு….

ஆங்கில நாளேடு ஒன்றில் (டைம்ஸ் ஆஃப் இந்தியா’, 5.7.2018) தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்குள் செல்லும் வருகை யாளர்கள் எவரும் கருப்புச் சட்டை, கருப்புடை அணிந்து வரக் கூடாது என்ற தடை உத்தரவு இருக்கிறது என்று கூறி, அங்குள்ள காவல் அதிகாரிகள் – காவல்துறையினர் கருப்புச் சட்டை அணிந்து வருவோரைத் தடுப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது மாத்திரமல்ல; பகுத்தறிவுக்கும், மனித உரிமை களுக்கும் விரோதமான மனித உரிமைப் பறிப்பும் ஆகும்.

முதலமைச்சருக்கும் – துணை முதலமைச்சருக்கும் தெரிந்துதான் இது நடக்கிறதா?

இது முதலமைச்சர், துணை முதலமைச்சர் போன்றவர்களுக்கு உடன்பாடானதா? அத்தகைய வாய்வழி ஆணையையோ, எழுத்து பூர்வ உத்தரவையோ போட்டிருக்கிறார்களா என்பது புரியவில்லை.

அதற்கு ஒரு பாதுகாப்பு தேடுவதுபோல கடந்த 3 ஆண்டுகளாக இது அமலில் இருப்பதாகக் கூறி, ஜெயலலிதா அரசையும் இழுத்துள்ளார்கள்!

எண்ணுவதற்கும், உண்ணுவதற்கும் உள்ள உரிமை அடிப்படை உரிமை; அதுபோல, உடை அணிவதும் – எந்த நிற சட்டை போடுவது என்பதும் அவரவர் உரிமை!

அதைத் தடுப்பது அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைப்படி தவறு மட்டும் அல்ல; சட்ட விரோதமும் ஆகும். இச்செயலுக்கு நாம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதுபற்றி தமிழக அரசு உடனடியாக ஒரு மறுப்பு – விளக்க அறிக்கை தரவேண்டும்.

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், மற்ற அ.தி.மு.க.வினர் தொடங்கி, அனைத்து அரசியல் கட்சியினரும் அவ்வப்போது தங்கள் கோரிக்கைகளை விளக்கும்போது கருப்புடை அணிந்துதானே வருகிறார்கள்? ஈழத் தமிழர் பிரச்சினையில், அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கருப்புச் சட்டை அணியவில்லையா?

காவிரிப் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தபோது முதல்வரிலிருந்து பலரும் கருப்புச் சட்டைப் போட்டனரே!

அ.தி.மு.க. கொடியில் உள்ள கருப்பு – சிவப்பு – திராவிடர் இயக்கத்தின் அடையாளத்தைக் காட்டுகிறது என்பதுகூடவா புரியவில்லை?

1946 – மதுரை கருப்புச் சட்டை மாநாட்டுப் பந்தலைக் கொளுத்திய மதுரை வைத்தியநாதய்யர் பரம்பரையா ஆட்சியில் இருக்கிறது?

அமைச்சர்களிடம் பல உரிமைகளுக்காக முறையீடு செய்ய வழக்குரைஞர்கள் தலைமைச் செயலகம் செல்லும்போது கருப்புடை அணிந்துதானே வருகிறார்கள்?

அவ்வளவு ஏன்? ஒன்றரை ஆண்டுகளுக்குமுன்பு நீட்’ தேர்வுக்கு விலக்குக்கோரி மசோதாவை தமிழக சட்டமன்றம் நிறை வேற்ற வேண்டும் என்று கூறி, அன்றைய முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்திக்க, தலைமைச் செயலகத்திற்கு நானும், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனும் சென்றோமே – அப்போது தடுக்கப்படாதபோது, இப்போது என்ன? அதுபோல, காவிரி நதிநீர்ப் பங்கீடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டியபோது, அங்கு சென்ற திராவிடர் கழகத்தினராகிய நாங்கள்வழமைபோல் கருப்புடைதானே அணிந் திருந்தோமே – எங்களை அமைச்சர்கள் உள்பட வரவேற்றார்களே!

எனவே, இப்படி தேவையில்லாத குழப்பத்தை, ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாச” தலைமைச் செயலக அதிகாரிகளோ, காவல்துறையினரோ மேற்கொள்ளும் இந்தச் செயலைத் தவிர்த்து உடனே தெளிவுபடுத்துதல் அவசரம் – அவசியம்!

வெள்ளைத் தலைமுடியை கருப்புச் சாயம் (டை) அடித்துத் தானே அமைச்சர்கள் உள்பட, அதிகாரிகள் உள்பட அங்கே செல்லு கின்றனர். எனவே, கருப்புக்கு மறுப்புச் சொல்வது நடைமுறைச் சாத்தியமா?

போராட்டங்களை ஒழுங்குபடுத்துவது வேறு; அதற்கு இம்மாதிரிக் கோமாளிக் கூத்தில் ஈடுபடக்கூடாது. உடனே தமிழ்நாடு அரசு ஓர் ஆணையைப் பிறப்பித்து இதற்குமுன் உள்ளதை வாபஸ் வாங்கவேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response