பழனி முருகனின் மூலிகைச் சிலை எங்கே? – சீமான் ஆவேசக் கேள்வி

புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மூலிகைச்சிலை இப்போது எங்கே? நாம் தமிழர் கட்சியின் துணை அமைப்பான வீரத்தமிழர் முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில்…

தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை முருகன் என்ற பெருமைக்குரிய தமிழர் மெய்யியல் அடையாளம். முருகன் ஆறுபடைவீடு கொண்டு தமிழகத்தில் வியாபித்து இருப்பது நாம் அறிந்ததே. அந்த ஆறுபடைவீடுகளில் சிறப்பிற்குரிய படைவீடு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி எனப்படும் திருஆவினன்குடி ஆகும். மேலும் அந்தக் கோவிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷணத்தில் (ஒன்பது மூலிகைகளால் ஆன கலவை) ஆன சிலை என்றும் அச்சிலைக்குத் திருமுழுக்கு செய்யும் போது சிலைப்பட்டு வரும் நீர் மருத்துவக்குணம் மிக்கது எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அச்சிறப்புமிக்க மூலிகை சிலை அமைந்துள்ள மூலவர் சன்னதி மூடப்பட்டு அதற்குப் பதிலாக ஐம்பொன் சிலை வைத்து வழிபாடு நடந்துவருகிறது. மாநிலம் முழுதும் நடக்கும் சிலைக்கடத்தலைத் தடுக்கும் பொருட்டு ஐ.ஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து விசாரணை நடந்துவருகிறது. அந்த வகையில் ஐஜி. பொன்.மாணிக்கவேல் அவர்களால் பழனியில் நடக்கும் மோசடிகளை ஆய்வுசெய்ய டிஎஸ்பி கருணாகரன் தலைமையில் ஒரு குழுவினர் விசாரணை நடத்திவந்தனர்.

2004 ஆண்டில் மூலவரின் மூலிகை சிலைக்குப் பதிலாக, ஐம்பொன் சிலை வைத்து வழிபடத் தொடங்கியதும், அந்த ஐம்பொன் சிலையைச் செய்வதிலும் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 2006 ஆண்டில் நடந்த கோவில் குடமுழுக்கு நிகழ்வின்போது கோவிலின் மூலவர் சன்னதி 21 நாட்களாக மூடப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டு இருப்பதும், அந்த நிகழ்வின்போது மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷண சிலை கடத்தப்பட்டு அதற்குப் பதிலாக வேறுஒரு சிலையை வைத்து இருப்பதும் டிஎஸ்பி கருணாகரன் அவர்களின் விசாரணை ஆய்வின் முடிவுகள் சந்தேகிக்கிறது.

இந்நிலையில் சிலை கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த கோவில் சபதி முத்தையா, கோவில் செயல்பாட்டின் இணைஆணையர் ராஜா, மேலும் இந்துசமய ஓய்வுபெற்ற அதிகாரிகள் தேவேந்திரன், மற்றும் புகழேந்தி ஆகியோர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணை குழுவினரால் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தக் குற்றப்பின்னணியின் முக்கியமான நபராக இருக்கும் இந்துசமய அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் திரு. தனபால் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவெடிக்கையை விசாரணை அதிகாரி முன்னெடுக்கும் போது, டிஎஸ்பி கருணாகரன் அவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி29.06.2018 அன்று திடீரெனக் கோவை மின்திருட்டுத் தடுப்பு பிரிவிற்கு அதிகார மையத்தினால் மாற்றப்பட்டு இருக்கிறார். இன்னும் 20 நாட்கள் கொடுத்தால் முழுவிசாரணையும் முடித்து அறிக்கை சமர்ப்பிக்கிறேன் என்று சொன்னபிறகும் உடனடியாகக் கருணாகரன் இடமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.

சமீபத்தில் ஐஜி பொன்.மாணிக்கவேல் இதுபோன்றதொரு மாற்றத்தை சந்தித்து உயர்நீதி மன்றத்தினால் மறுபடியும் மீள்பணியமர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிட தக்கது. இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் விவரங்களை ஆதாரங்களுடன் திரட்டியுள்ள கருணாகரன், அவர்களைக் கைது செய்ய ஆயத்தமான நிலையில் தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணைக்காகக் கடந்த 27.06.2018 அன்று உயர்நீதிமன்றத்தில் நேர் நின்ற பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் வழக்குகளின் விசாரணையில் தமக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், தமக்கும், உயர்நீதிமன்றத்திற்கும் தெரியாமலேயே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும் குற்றஞ்சாற்றியிருந்தார்.

அதனால் அதிர்ச்சியடைந்த உயர்நீதிமன்ற நீதிபதி,‘‘ உயர்நீதிமன்ற அனுமதி இல்லாமல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மாற்றப்பட்டால் காவல்துறை தலைமை இயக்குனரை நீதிமன்றத்திற்கு அழைக்க நேரிடும்’’ என எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதைச் சிறிதும் மதிக்காமல், அடுத்த இரண்டாவது நாளே, முக்கிய விசாரணை அதிகாரி மாற்றப்படுகிறார் என்றால், அதன் பின்னணியில் ஏதோ முக்கியத் தலைவரை காப்பாற்ற சதி நடப்பதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தல் மற்றும் மோசடிகளில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. சிலைக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காகத் தான் பொன்.மாணிக்கவேல் தலைமையில் செயல்பட்டு வரும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் அதன் தலைவருக்கே தெரியாமல் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாற்றை உறுதி செய்யும் வகையில் தான் அரசின் செயல்பாடுகள் உள்ளன.

அரசின் இத்தகைய செயலை நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி கடுமையாகக் கண்டிக்கின்றது. டிஎஸ்பி கருணாகரன் உடனடியாக மீண்டும் பழனி கோவிலின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படவேண்டும் எனவும் தவறினால், இப்பிரச்னையை வீரத்தமிழர் முன்னணி கையிலெடுத்து நீதிமன்றத்தை அணுகும் என்றும் தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Response