எட்டுவழி சாலைக்காக கதறக் கதற நிலத்தைப் பறிப்பது சமூகவிரோதம் – சீமான் ஆவேசம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர்
செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பயங்கரவாதிகள், நக்சல்கள் ஊடுருவி விட்டார்கள் என்று மத்திய மந்திரி சொல்கிறார். அதற்கு தமிழக அமைச்சர் ‘அப்படி எல்லாம் யாரும் ஊடுருவவில்லை என்று சொல்கிறார். இதில் யார் சொல்வதை நம்புவது என்று தெரியவில்லை.

சென்னை- சேலம் 8 வழி சாலைக்காக கதறக் கதற மக்களின் நிலத்தைப் பறிப்பது சமூக விரோதம். அதை யாரும் கேட்பதில்லை. கல்வி, மருத்துவம், குடிநீர் வினியோகம், சாலை அமைப்பது இதெல்லாம் நமக்கு சேவை. தொழில் செய்வது அரசின் வேலை அல்ல.

கோவையில் குடிநீர் வினியோகத்தை பிரான்சு கம்பெனிக்கு கொடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் கொடுத்து விடுவார்கள். அதுதான் தாராளமயம். உலகமயம். பாரம்பரியமான சிறப்புமிக்க சிறுவாணி குடிநீரை இளநீரை போன்ற குடிநீர் என்று சொல்கிறார்கள். அதனால் தான் இங்கு குறி வைக்கப்படுகிறது. இல்லை என்றால் தண்ணீர் இல்லாத சிவகங்கை, ராமநாதபுரத்துக்கு வரவேண்டியது தானே.

அன்றைக்கு இங்கிலாந்து நாடு ஒன்றுக்கு மட்டும் தான் அடிமையாக இருந்தோம். கப்பலில் வர்த்தகம் செய்ய வந்தவனை போராடி விரட்டி விட்டு விமானத்தில் வருபவர்களை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பது தான் இன்றைய பொருளாதாரக் கொள்கை. இது பேராபத்தை நோக்கிய பயணம். இந்தியாவை ஆளுகிற மத்திய அரசு தமிழர்களுடைய உணர்வு, உரிமை எதற்கும் துணை நின்றது இல்லை.

தமிழனுடைய மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, மலை, நீர்வளம், மண்வளம் போன்றவை கொள்ளை அடிக்கப்படுவது பற்றி கவலைப்படாது, தமிழ்நாட்டை திட்டமிட்டு பாலைவனமாக மாற்றவும் ராணுவ மயமாக மாற்றவேண்டும் என முடிவு எடுத்து விட்டனர்.

தமிழகத்தில் இந்த மண்ணை, மக்களை, நேசிக்கும் ஒரு நல்ல தலைமை இல்லை. தங்களுக்கு என்ன லாபம் என்று பார்க்கிறார்கள். ஓசூர், ராமநாதபுரம் நெய்வேலி ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்க விளை நிலத்தை பறிப்பீர்கள். சொந்த நிலத்திலேயே நிலமற்ற அகதிகளாக, கூலிகளாக மக்கள் மாற்றப்படுகிறார்கள். இதற்கு காரணம் பொறுப்பற்ற, நோக்கமற்ற, தலைமையிடம் அதிகாரம் இருப்பது தான். கண்டிப்பாக அது ஒருநாள் மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response