13 மாவட்டங்கள் 35 இடங்களில் விவசாயிகள் போராட்டத்துக்கு தடை – ஏர்முனை கண்டனம்

இன்று (25/06/18) உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தமிழகம் முழுக்க தடை விதித்துள்ளது.

இதைக் கண்டித்து ஏர்முனை இளைஞர் அணி தலைவர் என.எஸ்.பி.வெற்றி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைத்து விவசாய அமைப்புகளையும், ஆதரவு கொடுக்கும் அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து 35 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு காவல்துறை அனுமதி பெற்று துண்டறிக்கைகள் மூலமாகவும், சமூக வலைதளங்களின் மூலமாகவும் கடந்த ஒரு வார காலமாக பிரச்சாரம் செய்துவந்தனர்.

ஆனால் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் தமிழக அரசின் உத்தரவுபடி காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்து தடை செய்துள்ளனர்.

பாதிக்கபட்டுள்ள விவசாயிகள் ஜனநாயக முறையில் சட்டத்திற்கு உட்பட்டு அரசின் கவனத்திற்கு தமது பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் மூலமாக தெரிவிக்க கூட தமிழக அரசு அனுமதிக்க மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கோரிக்கைகளை பரிசீலித்து அதற்கான தீர்வுகளை கொடுப்பதே அரசின் கடமையாகும் அதைவிடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் போராட்டங்களை தடை செய்வது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசு அடக்குமுறையாகும்.

வாழ்வாதாரத்தை காக்க போராடும் உழவர்களின் உரிமைகுரலை ஒடுக்காதீர்கள்.
கருத்துரிமையை பறிக்காதீர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response