தமிழகத்தில் ஆண்டுதோறும் மூடப்படும் தமிழ்ப்பள்ளிகள் – அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியும் தமிழ் மொழிக்கல்வியும் வேண்டும் எனப் போராடும் அவலம் இன்னும் உள்ளது வேதனையாக உள்ளது.

ஆண்டுதோறும் அரசு தமிழ்வழிப் பள்ளிகளை மூடி வருகிறது.

2012-13 இல் 320 பள்ளிகளிலும்

2013-14 இல் 3200 பள்ளிகளிலும் ஆங்கில வழிப்பிரிவுகள்தொடங்கப்பட்டன.

இவ்வாறு ஆண்டுதோறும் ஆங்கில வழிப்பிரிவுகள் தொடங்கப் பட்டதால், 4.84.498 பேர் தமிழ்வழிக்கல்வியை இழந்தனர்.

இதைத் தொடர்ந்து 2017-2018 இல் ஆங்கிலவழிக் கல்வித் திணிப்பு அரங்கேறியுள்ள அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை 3.916.

இவ்வாண்டில் ஏறத்தாழ 890 பள்ளிகளை
மூடுவதாகச் செய்தி வந்தது. அரசு அப்படி எண்ணம் இல்லை என்று சொன்னாலும் நம்பிக்கை இல்லை.

ஏனெனில், இதனை எதிர்க்க வேண்டிய திமுக உறுப்பினர்களே ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்க வினா தொடுக்கிறார்கள்.

கல்வியமைச்சரும் நடவடிக்கையில் உள்ளதாகக் கூறுகிறார். தமிழ்வழிப்பள்ளி செயல்பட்ட இடங்களில் ஆங்கிலவழிக்கல்வி கொண்டு வர எண்ணுகிறார்கள். ஆங்கில வழிக்கல்வி என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்துவதுதான்.

ஆழமாகக் கற்க வேண்டிய மொழிக்கல்வியைச் சிதைக்கும் வகையில் அரசு. (தமிழ்)மொழித் தேர்வுத்தாள் இரண்டாக இருந்ததை ஒன்றாகக் குறைத்துள்ளது. பள்ளிக் கல்வியமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்தான். ஆனால் மொழி தொடர்பான முடிவுகளை ஆங்கில மையல் கொண்ட அதிகாரிகளின் கருத்திற்கேற்ப எடுக்கக்கூடாது.

தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி நிலைப்பதற்காகப் பின்வரும் நடவடிக்கைகளை மாண்புமிகு முதல்வர் எடுக்க வேண்டும்.

1. கூட்டுறவுக் கல்விநிலையங்கள் சட்டம் 2018’ என ஒன்றை உருவாக்க வேண்டும். இச்சட்டத்தின் அடிப்படையில் தாய்த்தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்கள், தமிழ் அமைப்புகள், பெற்றோர்கள், ஆசிரியர்களைக் கொண்டு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்திக் கூட்டுறவுக் கல்வி நிலையங்களை அமைக்க வேண்டும்.

2. மூடக்கருதியுள்ள கல்வி நிலையங்களையும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள கல்வி நிலையங்களையும் கூட்டுறவு அமைப்பில் இணைக்க வேண்டும்.

3.எல்லாத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளையும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளாக மாற்றித் தேவைப்படும் உதவிகளைப் புரிய வேண்டும்.

4, தமிழ்நாட்டில் கல்வி என்றால் தமிழ்வழிக்கல்விதான் என்னும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி உள்ளமைபோல் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி வேண்டும் எனத் தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம் மேற்கொண்டு இந்தியப்பாதுகாப்புச்சட்டத்தில் தளையிடப்பட்டார் தமிழ்ப்பேராசிரியர் சி.இலக்குவனார். இன்றைக்குப் பள்ளிகளில் உள்ள தமிழும் அகற்றப்பட்டு வருகிறது. எனவே, தமிழ்ப்புலவர்கள். தமிழாசிரியர்கள். தமிழன்பர்கள். தமிழ் அமைப்பினர். கல்வியாளர்கள், பிறர் என அனைவரும் ஒன்றுபட்டுத் தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி நிலைக்கவும் தமிழ்மொழிக்கல்வி சிறப்புறவும் ஆவண செய்ய வேண்டும்.

Leave a Response