விடாது காலா – ரஜினியின் உயரம் ரஞ்சித்துக்கு தேவைப்படுகிறது

காலா படத்தை பற்றி துண்டு துண்டாக பல பதிவுகள் எழுதியாகிவிட்டது. ஆனாலும் மனம் விட்டு படம் அகல மறுக்கிறது. பலர் பல கேள்விகளுடன் உலவிக் கொண்டிருக்கின்றனர். To spare them some peace 🙂 ,

காலா பற்றிய சில கேள்விகளும் பதில்களும்.

ஏன் காலா முக்கியமான படம்?

படம் பேசும் அரசியல்!

அந்த அரசியல் யாருக்கும் புரியவில்லையே?

உங்களுக்கு புரியவில்லையா.. அல்லது, யாருக்கும் புரியவில்லையா? உங்களுக்கு என்றால் உங்களுக்கு காலாவின் அரசியல் புரியவில்லையா, பிடிக்கவில்லையா? காலா படம் வெளியான நாள் முதலே முகநூல் அமளி துமளி படுகிறதே, அதெல்லாம் காலாவின் அரசியல் புரியாமல்தானா?

காலா புராணத்தை நிறுத்தவே மாட்டீர்களா?

மாட்டோம். ராமனுக்கு புராணம் இருக்கும் வரை ராவணனுக்கும் புராணம் இருக்கும். ஆதிக்கம் இருக்கும் வரை, எதிர்ப்பு இருக்கும். ஆதிக்கத்தை glorify செய்யும் சினிமாக்கள் எடுக்கப்படும் வரை, ஆதிக்கம் எதிர்க்கும் சினிமாவான காலாவை கொண்டாடிக் கொண்டே இருப்போம்.

காலா படம் பேசிய அரசியல் சரிதான். அதை இன்னும் தெளிவா மக்கள் விளங்குறா மாதிரி பேசிருக்கலாம்ல?

ஆட்டுக்காக ஓநாய் அழுத கதை தெரியுமா? எங்களுக்கு தெரியும். தெளிவாக எடுத்தால் எத்தனை சிக்கலுக்குள் படம் மாட்டப்பட்டு முடக்கப்பட்டிருக்கும் என்பதால்தான் படம் குறியீடுகள் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இங்கு தேவை ஓர் உரையாடல். அதை தொடங்கி வைத்திருக்கிறது காலா.

படத்தில் கம்யூனிஸ்ட்டுகளை தப்பா காண்பிச்சிருக்காங்க ப்ரோ?

ஹா ஹா.. அதை பத்தி நாங்க கம்யூனிஸ்ட்டுகளே கவலைப்படல.. உங்களுக்கு என்ன கவலை ப்ரோ.. நேச முரணுக்கும் பகை முரணுக்கும் வித்தியாசம் தெரியாத, இரண்டாம் தலைமுறை சொகுசு அரசியல் கும்பல் நாங்க இல்லை ப்ரோ. பொறுப்புக்கும் தன்முனைப்புக்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்கு தெரியும். முக்கியமா, விமர்சனத்துக்கு இடம் அளிக்காதவனோட நிறம் காவி ப்ரோ, சிவப்பு இல்லை.

என்ஜிஓ நடத்துறது தப்பா?

என்ஜிஓ மட்டுமே நடத்தறது தப்பு.

புரியலையே?

என்ஜிஓவுக்கு பின் ஒளிஞ்சுருக்கற கார்ப்பரேட்டையும் அதன் அரசியலையும் புரிஞ்சிக்காம இருக்கறது தப்பு. அரசியல் பேசாம நடத்தப்படற ஒவ்வொரு என்ஜிஓவும் மிகப்பெரிய லாபவேட்டை நடத்த விரும்பும் முதலாளித்துவ அரசியலோட பிரதிநிதிகள்தான். மக்கள், அரசை நேரடியாக கேள்வி கேட்பதை, ஆறுதல் வாழ்க்கைகளை அவர்களுக்கு கொடுத்து தடுப்பதுதான் என்ஜிஓ அரசியல். மக்கள் அரசியல்படுவதை தவிர்ப்பதே அவர்களுக்கு இடப்பட்ட வேலை. அவை அல்லாமல் பல அரசியல் அமைப்புகளும் என்ஜிஓவாக செயல்படுகின்றன. அவற்றை கூட நம்பலாம். எல்லாவற்றையும் அல்ல.

ஆனா ரஜினிய வச்சு எந்த ஹீரோயிசமும் இல்லாம இப்படி படம் எடுக்கலாமா?

ஹீரோயிசம் காட்டுறவறா மாறுறதுக்கு முன்னாடி ரஜினி ஒரு ஆக்டர்தான். In fact நல்ல ஆக்டர். அதுக்கப்புறம்தான் அவர் glorified ஹீரோவாக வணிகத்துக்கும் தனிப்பட்ட அரசியல் விருப்பங்களுக்காகவும் மாறத் தொடங்கினார். அதற்கு பிறகு நடிகர் ரஜினியை எங்குமே பார்க்க முடியவில்லை. உங்களுக்கான படையப்பா, எஜமான் ரஜினிதான் கடந்த சில பத்து வருடங்களாகவே வருகிறார். எங்களை போன்றோருக்கான முள்ளும் மலரும், ஜானி ரஜினிகள் பார்த்தே பல வருடங்கள் ஆகியிருந்தன. கபாலியில்தான் மெல்ல கண்டோம். இப்போது காலாவில் பார்த்திருக்கிறோம். எங்களை போன்ற ரஜினி ரசிகர்கள் – சிறுபான்மையெனினும், இருக்கிறோமே! பெரும்பான்மையை மட்டும்தான் பொருட்படுத்த வேண்டும் என்பது அநீதிதானே!

சினிமால எண்டெர்டெயின்மெண்ட் எதிர்பார்த்துதான் மக்கள் வர்றாங்க.. அவங்கக்கிட்ட போய் அரசியல் பேசலாமா?

சினிமால எண்டெர்டெயின்மெண்ட் எதிர்பார்த்துதான் மக்கள் வர்றாங்கன்னு யார் சொன்னது? ‘இட ஒதுக்கீட்டுல வர்றவங்க திறமை இல்லாதவங்க’ன்னு திட்டமிட்டு பரப்பப்பட்ட விஷம பிரச்சாரம் மாதிரிதான் இதுவும். மக்களை பொறுத்தவரைக்கும் ரசனை மட்டும்தான் முக்கியம். சுவாரஸ்யமா இருக்கணும் என்பதுதான் தேவை. அந்த சுவாரஸ்யமும் கூட, தமிழ்சினிமால சொல்லப்படும் வேகம், விறுவிறுப்பு, மேக்கிங், மாஸ் மாதிரியான அம்சங்களால் உருவாக்கப்பட்டது அல்ல. சிறந்த திரைக்கதை மட்டுமே சுவாரஸ்யத்துக்கு தேவை என உலக இயக்குநர்கள் பலரும் எண்ணற்ற முறைகளில் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். மட்டும் அல்லாமல் சினிமா என்பது ஒரு வலிமையான ஆயுதம். பராசக்தி படமும் எடுக்கமுடியும். மொகஞ்சதாரோ என்ற ஹிந்தி படமும் எடுக்க முடியும். ஜெண்டில்மேன் படமும் எடுக்கமுடியும். காலாவும் எடுக்க முடியும். எப்போதுமே சொல்வதுதான். சினிமாவுக்காக சினிமா அல்ல. மக்களுக்காகவே சினிமா.

பட், ரஞ்சித் எல்லா படத்திலயும் ஒடுக்கப்பட்டவர்கள்னு அரசியல் பேசியே படம் எடுத்தா போர் அடிக்க ஆரம்பிச்சிடுமே ப்ரோ?

இதுதான் முதல் கேள்வியா இருக்கும். காலா படத்தை எதிர்த்து உங்க எல்லார்கிட்டயும் பேசுறவங்கக்கிட்டயும் இருக்கற ஒரே கேள்வி இதுதான். ஒரே கோபமும் இதுதான். ஒரே பயமும் இதுதான்.

முக்கியமான விஷயமே என்னன்னா, ரஞ்சித் தன்னோட எந்த படத்துலயும் நாயகனையோ எந்தவொரு கதாபாத்திரத்தையோ ஒடுக்கப்பட்ட சாதியாக நேரடியாக காண்பிக்க மாட்டார். சூழலை மட்டுமே காட்டுவார். ஆனால் எல்லாருமே புரிந்து கொள்கிறோம் ஒடுக்கப்பட்ட சாதியினரை பற்றிய படங்களைத்தான் ரஞ்சித் எடுக்கிறார் என பேசுகிறோம். முற்போக்கு முகாமில் இருப்பவர்கள் சந்தோஷத்தில் பேசுகிறார்கள் எனினும், பெருவாரியான ரஞ்சித் எதிர்ப்பாளர்களிடையே இந்த எண்ணம் இருக்கிறது. என் கேள்வி அவர்களுக்கு ஒன்றே ஒன்றுதான்.

ஒடுக்கப்பட்ட சாதியை நேரடியாக காண்பிக்காத படத்தை ஒடுக்கப்பட்ட சாதியினருக்கான படம் என முடிவு செய்வது எப்படி சாத்தியம்?

குறியீடுகளால் ரஞ்சித் சொல்லும் விஷயத்தையே கண்டு, ஆராய்ந்து, சரியாக புரிந்து மொத்த படத்தையே ஒடுக்கப்பட்ட சாதியினருக்கான படமாக profile செய்யும் அளவுக்கு நம் மனங்களின் ஆழத்தில் சாதி விதைக்கப்பட்டிருக்கிறது. ரஞ்சித்தின் சாதியையும் வைத்து முடிவுக்கு வருகிறோம்.

உண்மையில் ரஞ்சித் எடுக்கும் படங்கள் ஆதிக்கத்தை எதிர்த்தும் ஒடுக்குமுறையை எதிர்த்தும்தான். ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறையையும் எதிர்த்து பேச வேண்டுமானால் நிச்சயமாக பெண்ணிலிருந்தும் ஒடுக்கப்பட்ட சாதியில் இருந்தும்தான் இந்த மண்ணில் தொடங்குவது சரியான நியாயமாக இருக்க முடியும். அதை எதுவும் பேசாமல், தேசப்பற்று, மதப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று எல்லாம் காட்டி ஆதிக்கம், ஒடுக்குமுறை ஆகியவற்றை பேசுவது அக்மார்க் போலித்தனம்.

ரஞ்சித் எடுக்கும் படங்கள் நம் அனைவருக்குமானதுதான். நாம் அனைவருமே ஒடுக்கப்படுபவர்கள்தான். சுரண்டப்படுபவர்கள்தான்.

ரஜினியின் மாஸ் சீன்கள் எல்லாம் மிஸ் ஆகுதே.. வேற யாரையாவது வச்சு கூட காலா எடுத்திருக்கலாமே?

Let’s accept the facts. ரஜினி என்கிற உயரத்தில் இருந்து பேசுவதால்தான் இத்தனை பெரிய திரளுக்கு ரஞ்சித் கேட்கப்படுகிறார். எவரும் பேச தயங்கும் விஷயங்களை ரஞ்சித் பேசுகிறார். எந்த படம் வெளிவந்தாலும் நிகழாத ஒரு மாபெரும் உரையாடல் ரஞ்சித்தின் ஒவ்வொரு பட வெளியீட்டிலும் நிகழ்கிறது. அது வெறும் ‘படம் நல்லாருக்கு’ பாணியிலான உரையாடல் அல்ல. அரசியல் புரிதல் நிகழ்வதற்கான உரையாடல். பல பேர் அடையாளம் காணப்படுகின்றனர். பலரின் லட்சணம் தெரிய வருகிறது. உண்மையில் யார் நண்பர்கள் எனவும் தெரிந்து கொள்கிறோம். தப்பான கருத்துகளை உள்வாங்கி இருக்கும் ஒரு பெரும் திரள், சரியான கருத்துகளை உள்வாங்கும் ஓர் அற்புதமான வாய்ப்பு நேர்கிறது. அதற்கு ரஜினியின் உயரம் ரஞ்சித்துக்கு தேவைப்படுகிறது. இனி அடுத்து அதற்கும் உயரமான இடத்துக்கு சென்று ரஞ்சித் பேசுவார்.

இயேசுக்கள் பேச, மலைகளை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் வசதி அல்ல; அதிக மக்களுக்கு அவர்களின் சேதிகளை கொண்டு சேர்க்கும் அவற்றின் உயரம்!

-ராஜசங்கீதன்ஜான்

Leave a Response