கால்பந்து திருவிழா, ரஷ்யாவில் இன்று கோலாகலமான தொடக்கம்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கால்பந்து ரசிகர்களின் தூக்கத்தை தொலைக்க வைக்கும் பிபா உலக்க் கோப்பை திருவிழா, இம்முறை ரஷ்யாவில் ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை 15ம் தேதி வரை நடைபெறறுகிறது.

மொத்தம் 32 அணிகள் 8 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள 4 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் போட்டியில் விளையாடிய பின்னர், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

கால் இறுதிக்கு முந்தைய சுற்று (ரவுண்ட் ஆப் 16), கால் இறுதி, அரை இறுதி, இறுதிப் போட்டி என்று நாக் அவுட் சுற்றில் அனல் பறக்க உள்ளது. கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள டாப் 5 அணிகளாக முறையே பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பெல்ஜியம், பிரேசில் அணிகள் கணிக்கப்பட்டுள்ளன.

இந்த அணிகளுடன் சூப்பர் ஸ்டார் வீரர்களான லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), முகமது சாலா (எகிப்து), லூயிஸ் சுவாரெஸ் (உருகுவே) ஆகியோர் தங்களின் தனித்துவமான திறமையால் மாயாஜாலம் நிகழ்த்துவார்களா? என்ற எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

தொடக்க விழா: மாஸ்கோ லஸ்னிகி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30க்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் ரஷ்யா – சவுதி அரேபியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கு முன்பாக, வண்ணமயமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் இங்கிலாந்தின் பிரபல பாடகர் ராபி வில்லியம்ஸ், ரஷ்ய பாடகி எய்டா கேரிபுல்லினா இருவரும் இசை மழை பொழிய உள்ளனர். கால்பந்து வீரர்கள் சார்பாக, பிரேசில் அணி முன்னாள் நட்சத்திரம் ரொனால்டோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இசையை மையமாகக் கொண்டு வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, அரை மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிகள் அனைத்தும் சோனி ஈஎஸ்பிஎன் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இதுவரை சாம்பியன்கள்: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக பிரேசில் முன்னிலை வகிக்கிறது. அந்த அணி 5 முறை உலக கோப்பையை முத்தமிட்டுள்ளது. ஜெர்மனி, இத்தாலி அணிகள் தலா 4 முறை உலக சாம்பியனாகி உள்ளன. அர்ஜென்டினா, உருகுவே அணிகள் தலா 2 முறை கோப்பையை வென்றுள்ளன. ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் தலா ஒரு முறை உலக்க் கோப்பையை கைப்பற்றி உள்ளன.

* உலக்க்கோப்பை தொடக்க போட்டியில் விளையாடும் முதல் ஆசிய அணி என்ற பெருமை சவுதி அரேபியாவுக்கு கிடைத்துள்ளது.
* ரஷ்ய அணி கடைசியாக விளையாடிய 7 நட்பு ரீதியிலான ஆட்டங்களில் ஒரு வெற்றி வெற்றி கூட பெறவில்லை.
* சவுதி அரேபியாவும் 3 பயிற்சி ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்றுள்ளது. எனினும் அந்த அணி நடப்பு சாம்பியன் ஜெர்மனி, பெரு, இத்தாலி ஆகிய வலுவான அணிகளுக்கு எதிராகவே தோல்வியை தழுவியுள்ளது.
* ரஷ்ய அணி கடைசியாக 2002 உலக கோப்பை லீக் ஆட்டத்தில் வெற்றியை ருசித்துள்ளது. சவுதி அணி 1994க்கு பிறகு உலக கோப்பை பிரதான சுற்றில் ஒரு ஆட்டத்திலும் வென்றதில்லை.

பிபா உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, முதல் பரிசாக ரூ.256 கோடியை தட்டிச் செல்ல உள்ளது. 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 188 கோடி, 3வது இடத்துக்கு ரூ.161 கோடி, 4வது இடத்துக்கு ரூ.148 கோடி காத்திருக்கிறது. கால் இறுதியில் தோற்கும் 4 அணிகளுக்கு தலா ரூ.107 கோடி, ரவுண்ட் ஆப் 16ல் வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ.80 கோடி, லீக் சுற்றுடன் மூட்டையை கட்டும் அணிகளுக்கு தலா ரூ.50 கோடி என, இந்த தொடரில் மொத்தம் ரூ.2697 கோடி வழங்கப்பட உள்ளது.

Leave a Response