தந்தை பெரியாரின் வயதை எட்டிய கலைஞர்

கலைஞர் வாழ்க என்றால்
களத்தில் அவர் பணி தொடருவோம் என்றே பொருள்!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை*

நமது இனமானத் தலைவரும், ஈரோட்டுக் குருகுலத்தின் இணையிலா மாணவரும் எம்மின ஏந்தல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் (மு.கருணாநிதி) அவர்கள் இன்று (3.6.2018) 95ஆம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறார்!

ஆம். தந்தை பெரியாரின் வயதை எட்டி விட்டார்!

அதற்கு முன்பே நம் இனமானப் பேராசிரியர் 97ஆம் ஆண்டிற்கு வந்து, நேற்று முன்தினம் (01.06.2018) திருவாரூர் விழாவுக்கு வந்திருந்து, சீரிய தலைமை ஏற்று, உற்சாகத்துடன் (இளமையாகி) சென்னை திரும்பினார்!

தன்னை *’மானமிகு சுயமரியாதைக்காரன்’* என்று ஒரு வரியில் விமர்சித்த வித்தகர் கலைஞர்! வாழ்நாள் எல்லாம் ஆவேச உரையாற்றி, ஆர்வத்துடன் எழுதி, எழுதிக்குவித்து, திரைப்படங்கள் மூலம், திக்கெட்டும் செம்மொழி புகழ் பரப்பி, திராவிடத்தின் எழுச்சியை முரசு கொட்டி, முழக்கி தனது மூத்த பிள்ளையாக *’முரசொலியை’* வளர்த்து, முக்காலம் உணர்ந்து செயல்பட்டு, முழு மூச்சாம் முற்றான உழைப்பைத் தந்து, பற்றான தொண்டர்களையும், தோழர்களையும் உடன்பிறப்புகளாகக் கொண்ட அந்த தொண்டறம் 95ஆம் அகவையில் இன்று!

*உடல்நலம் தளர்ந்து-குன்றி இருப்பினும், கோபாலபுரத்தில் கொள்கைத் தங்கமாக, மவுனத்தில் கூட மகத்தான உணர்வலைகளை நாட்டில் இன்று உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்!*

அவர் திராவிடத்துத் தீரர்களின் படை வரிசையில் 14 வயதில் தன்னை சிப்பாயாக இணைத்து, இன்று அப்படையின் தானைத் தலைவராக உயர்ந்து, திராவிட இனத்தின் உரிமை – மானங்காக்கும் மறவராய், மவுனத்தோடு நமக்கு வழிகாட்டி வருகிறார்!

ஓய்வறியா அவ்வீரரின் இன்றைய எஞ்சிய உழைப்பை நாம் எல்லோரும் பகிர்வோம்! படையின் பணியை தொய்வின்றித் தொடர்வோம்!

அரசியலில் அவர் அடையாளம் காட்டிய, அஞ்சாது, துஞ்சாது பணியாற்றும் தளபதி செயல் தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின் களத்தில் நின்று கடமையாற்றுகிறார், பேராசிரியர் வாழ்த்துகளோடு, தாய்க்கழகத்தின் துணையோடு! உயிரினும் மேலான உடன்பிறப்புகளின் உற்சாகத்தோடு!

களத்தில் கடமைகள் காத்திருக்கின்றன!
நிலத்தில் வெறுமனே நிற்க நேரமில்லை
*வாழ்க கலைஞர் என்ற முழக்கத்தோடு*
இனஎழுச்சி அறப்போரை தொடருவோம் வாரீர்! வாரீர்!

– கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்*
சென்னை,3.6.2018

Leave a Response