ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னையே வெல்லும் – அதிரடி கருத்துக்கணிப்பு

மூன்றுமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் இம்முறையும் வெல்லும் என்றும் ’கேப்டன் கூல்’ தோனிதான் ரசிகர்களின் பேரன்பிற்குரியவர் என்றும் மும்பையின் வான்கேடேதான் அனைவரின் விருப்பத்திற்குரிய மைதானமாகவும் தேர்வாகியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு ரசிகர்கள் குழுவான ”இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஃபேன்ஸ் (Indian Sports Fans)” இம்மாதம் 12ஆம் தேதி ஒரு கணக்கெடுப்பை துவக்கியது. இந்தியாவின் 10 நகரங்களில் 14, 000 விளையாட்டு ரசிகர்களை தொடர்பு கொண்டு, அவர்களில் தேர்வான 4, 802 ரசிகர்களின் கருத்தின் அடிப்படையில் இந்தக் கணக்கெடுப்பு நடைபெற்றது.

இந்தக் கணிப்பின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாகக் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அனைவரின் பெருமதிப்பைப் பெற்று விரும்பப்படுபவராக கேப்டன் தோனிதான் தேர்வாகியுள்ளார். மொத்தம் 12 விளையாட்டு வீரர்களில் 27.3% ஓட்டுகளைப்பெற்று தோனி முன்னிலையில் இருக்க, விராத் கோஹ்லி (22%), கேன் வில்லியம்ஸன் (20.11%) அவருக்கு அடுத்த நிலையில் இருக்கிறார்கள்.

கிரிக்கெட் போட்டிகளைக் காண, ரசிகர்களின் விருப்பமான மைதானமாக மும்பையின் வான்கேடே 30% ஓட்டுகளைப் பெற்று தேர்வாக, கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் 20.22% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்தக் கணக்கெடுப்பைப் பற்றி இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஃபேன்ஸ் அமைப்பின் தவல் தோப்ரானி, ”இந்தக் கருத்துக்கணிப்பானது இந்தியாவின் முதல் கணக்கெடுப்பு மட்டுமல்ல, மிகப்பெரியதும்கூட. விளையாட்டு ரசிகர்களின் சார்பற்ற, எவ்வித திணிப்பும் இல்லாத கருத்துகளைக் கொண்டு விருப்பமான விளையாட்டு வீரர், வர்ணனையாளர் என்று பல விஷயங்களை முன்னிலைப்படுத்துகிறோம்” என்று கூறினார்.

சென்னையைச் சேர்ந்த விளையாட்டு ரசிகரான கிங் விஸ்வா இதைப்பற்றிக் கூறும்போது, ”தோனியைப் பொறுத்தவரையில் அவர் என்ன அணிக்காக ஆடுகிறார், என்ன ஜெர்சி அணிந்து ஆடுகிறார் என்பதைவிட, மொழி, மாநில, தேச எல்லைகளைக் கடந்து ரசிக்கப்படும் ஆளுமையாக அவர் மதிக்கப்படுகிறார். விராத் கோஹ்லியும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று இரண்டாமிடத்தில் இருக்கிறார்” என்றார்.

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்பாக, விளையாட்டு ரசிகர்களின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு பல முக்கியமான விஷயங்களை முன்வைக்கிறது. ட்விட்டரில் 69, 000 ஃபாலோயர்களைக் கொண்ட ”இந்தியன் ஸ்போர்ட்ஸ் ஃபேன்ஸ்” அமைப்பு உருவானதே ஒரு வாட்ஸ்-அப் குழுவின் மூலமாகத்தான். இந்தக் குழுவில் இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி, இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங், காமன்வெல்த் போட்டிகளில் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற அகில் குமார், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல்-கீப்பர் பல்ஜீத் சிங் என்று பல பிரபல விளையாட்டு வீரர்களும், ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள். ஐபிஎல் என்றில்லாமல், அனைத்து விளையாட்டுகளைப் பற்றியும் அதுசார்ந்த பார்வையாளர்களின் ரசனையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் இந்தக்குழு தன்னை ஈடுபடுத்திகொண்டுள்ளது.

Leave a Response