சீமானைக் கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டுவது ஏன்?

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடந்த 19-ம் தேதி திருச்சிக்கு வந்தனர். அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.உளவுத்துறை திட்டமிட்டே இம்மோதலை உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

மதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு அளித்த புகாரின்பேரில் சீமான் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது. காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து, இரும்பு தடுப்புகளை உடைத்ததாக சீமான் உள்ளிட்ட 14 பேர், வெல்லமண்டி சோமு உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவானது.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சீமான் உள்ளிட்டோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சீமான் நேற்று மனு தாக்கல் செய்தார்.காவல்துறையினரின் பாதுகாப்பு குளறுபடியால் மோதல் சம்பவம் நடந்ததாக அம்மனுவில் சீமான் கூறியுள்ளார்.

மோடி அரசுக்கெதிராக சீமான் நடத்தும் போராட்டங்கள் மற்றும் கருத்துப் பரப்புரைகளை தடுத்து நிறுத்தவே கைது நடவடிக்கை என்கிறார்கள். கைது செய்தால் எதிர்ப்பு இன்னும் தீவிரமாகும் என்பதை உணர மறுப்பதாக நாம்தமிழர் கட்சியினர் கூறுகிறார்கள்.

Leave a Response