நீட் தேர்வுக்கு எதிராகப் பேசுகிறதா காலா?

கடந்த ஆண்டு தமிழகத்தை மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதை உலுக்கியது மாணவி அனிதாவின் தற்கொலை.

அதிக மதிப்பெண் பெற்றும்கூட நீட் தேர்வினால் மருத்துவப் படிப்புக்குச் செல்ல முடியாமல் போராடி மனமுடைந்து உயிர்விட்ட அனிதாவின் வாழ்க்கை திரைப்படமாகத் தயாராகி வருகிறது.

அனிதா கதாபாத்திரத்தில் ஜுலி நடித்து வருகிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திலும் அனிதா காட்சி இடம்பெறுகிறது. இந்தப் படத்தில் வரும் தெருவிளக்கு என்ற பாடலில் இந்தக் காட்சி வருகிறது.

தெருவிளக்கு வெளிச்சத்துல, நாங்க முன்னேறுவோம் என்று தொடங்கும் வரிகளுக்குப் பின்னணியில் அனிதா படம் காட்டப்படுகிறது. மும்பை தாராவி பகுதியில் அனிதாவின் சுவரொட்டியை ஒட்டி வைத்து ‘டாக்டர் அனிதா, தமிழர்கள், நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்’ என்ற வாசகத்தை அதில் குறிப்பிட்டு உள்ளனர். மும்பை விழித்தெழு இயக்கம் என்றும் அந்தச் சுவரொட்டியின் கீழ் எழுதி உள்ளனர்.

நெல்லையில் இருந்து சென்று தாராவி பகுதியில் தாதாவாக மாறி அங்குள்ள தமிழ் மக்களுக்காகப் போராடுபவர் பற்றிய படமாக காலா இருந்தாலும் தமிழர்களைப் பாதிக்கும் நீட் தேர்வு உள்ளிட்ட பல சமூக பிரச்சினைகளையும் படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். காலா பாடலில் இடம்பெற்றுள்ள அனிதா உருவப்பட சுவரொட்டியை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

இந்தப் படத்தில் நானே படேகர் வில்லனாக வருகிறார். சமுத்திரக்கனி, கியூமா குரோஷி, அஞ்சலி பட்டீல், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Leave a Response