தமிழர் எனும் அடையாளத்தோடு புதியகட்சி தொடங்க நினைத்தார் பாவேந்தர்.

புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் நினைவு நாள்
21.4.1964. இதையொட்டி தமிழ்த்தேசியர் கதிர்நிலவன் எழுதியுள்ள கட்டுரை.

தி.க.வும், வேண்டாம்! தி.மு.க.வும் வேண்டாம்! -புரட்சிக்கவிஞர்.
சுயமரியாதை இயக்கம் தொடங்கி திராவிடர்கழகம் வரை பெரியாரின் கொள்கைகளை தன் பாடல்வரிகளால் தமிழர்களை தட்டியெழுப்பியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பெரியார் வலியுறுத்திய ‘திராவிடர்’ எனும் அடையாளத்தை அவர் ஆதரித்து எழுதி வந்த போதிலும் ‘தமிழர்’ எனும் அடையாளத்தோடு புதிய கட்சி ஒன்றை தொடங்க வேண்டுமென்று விரும்பியுள்ளார். அவரிடம் நெருங்கிப் பழகியவர்களான அறிஞர் அண்ணா அவர்களும், பன்மொழிப்புலவர் அப்பாத்துரை அவர்களும் இதனை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
11.8.45இல் பேராயக்கட்சிக்கு பாடுபட்ட கவிஞர் நாமக்கல் இராமலிங்கனார் அவர்களுக்கு பேராயக்கட்சி சார்பாக ரூ10,000 பொற்கிழி வழங்கப்பட்டது. அப்போது நாமக்கல் கவிஞரைப் போலவே திராவிட இயக்கத்திற்குப் பாடுபட்டு வரும் கவிஞராகிய பாரதிதாசனுக்கும் பொற்கிழி வழங்கிடும் எண்ணம் திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்களுக்கும் ஏற்பட்டது.
அதன்படி 28.7.1946 ஆம் ஆண்டு அண்ணா அவர்களின் முயற்சியால் திராவிட இயக்கக் கவிஞனாகிய பாரதிதாசனுக்கு நிதியளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்துக் கட்சியினர் பங்கேற்பதாக அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி நீதிக்கட்சியின் முன்னாள் தலைவரும் சென்னை மேயருமாகிய என்.சிவராஜ், பொதுவுடைக்கட்சியைச் சேர்ந்த ப.சீவானந்தம், முன்னாள் நீதிக்கட்சியை சேர்ந்த கி.ஆ.பெ.விசுவநாதம், பேராயக்கட்சியை சார்ந்த செங்கல்வராயன், ம.பொ.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அந்த விழாவில் பெரியார் மட்டும் திட்டமிட்டு கலந்து கொள்ள வில்லை. அதற்கான காரணத்தை அப்போது தன்னைச் சந்தித்த சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ ஆசிரியர் சாரங்கபாணி என்பவரிடம் பெரியார் தெரிவித்துள்ளார். அப்போது “பாரதி தாசனுக்கு என்ன வந்தது? இரண்டுப் பாட்டுப் பாடிவிட்டால் புலவர். அவருக்கெல்லாம் பணமுடிப்பு. யாரை கேட்டுக்கிட்டு அண்ணாதுரை இப்படியெல்லாம் செய்யுறாரு?” என்று அவரிடம் புலம்பியிருக்கிறார். (1)
நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அறிஞர் அண்ணா அவர்களால் பாரதிதாசனுக்கு ரூ25000 பொற்கிழி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து அன்றைய நாளேடுகள் வரலாறு காணாத வகையில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றதாக செய்திகள் வெளியிட்டன.
அந்நிகழ்ச்சி முடிந்து தன்னிடம் பாரதிதாசன் கூறியதாக அண்ணா அவர்கள் 12.8.1968 அன்று மு.வரதராசனார் படத்திறப்பு விழா ஒன்றில் கூறியதை அப்படியே தருகிறோம். “பாரதிதாசனுக்கு பணமுடிப்பு கொடுத்தான பிறகு குதிரை வண்டியிலேறி திருவல்லிக்கேணிக்கு தங்கும் இடம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். அப்போது தந்தை பெரியாரிடத்தில் எனக்கும், பாரதிதாசனுக்கும் மனத்தாங்கல். அப்போது பாரதி தாசன் என்னிடம் சொன்னார். “நீ கொடுத்திருக்கிற இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நாம் தமிழர்களுக்கென்று ஓர் அரசியல் கட்சி தொடங்கலாம். நீயும் நானும் நடத்தலாமென்றும்” கூறினார். (2)
அடுத்து, திராவிட இயக்கத்தாரால் போற்றப்படும் அப்பாத் துரையார் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் தன்னிடமும் இதே கருத்தை பாரதிதாசன் கூறியதாக தெரிவித்துள்ளார். அண்ணா தனிக்கட்சி தொடங்கி விட்ட காலம். 1950ஆம் ஆண்டு கோவையில் நடந்த முத்தமிழ் மாநாட்டிலே நாவலர் சோமசுந்தர பாரதியார் தி.மு.க. பெயரை மாற்றி தமிழர் முன்னேற்றக்கழகம் என்று பெயர் சூட்டும் படி வேண்டு கோள் விடுத்தார். பாரதி தாசனும் அக்கருத்தை ஆதரித்துப் பேசினார். அண்ணாவோ திராவிடத்திற்கு ஆதரவாகவே பேசினார். தி.மு.க.வில் தமிழுக்கென்று தனிக்குழுமம் அமைக்கும் கோரிக்கையையும் நிராகரித்தார். அப்போது பாரதிதாசன் என்னிடம் சொன்னார். “நமக்குத் தி.க.வும் வேண்டாம். தி.மு.கவும் வேண்டாம். தமிழர்க்கென்று தனிக்கழகம் ஒன்று அமைப்போம். நீ வந்து விடு!” என்று சொன்னார். (3)
பாரதிதாசன் உயிர் மூச்சாகிய தமிழ், தமிழர் எனும் அடையாளத்தோடு கட்சி தொடங்க வேண்டும் என்கிற விருப்பம் நிறைவேறாத காரணத்தாலோ என்னவோ தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் (1958க்குப் பிறகு) நாம்தமிழர் இயக்கம்- சி.பா.ஆதித்தனார், தமிழ்த் தேசியக் கட்சி- ஈ.வெ.கி.சம்பத், தமிழரசு கழகம்- ம.பொ.சிவஞானம் மற்றும் திராவிடர் கழகத்திற்கு “தமிழர் கழகம்” என்று பெயர் சூட்டுமாறு போராடிய அண்ணல் தங்கோ ஆகியோரோடும் நெருக்கமாக உறவு கொண்டிருந்தார்.
ஒரு முறை அண்ணல் தங்கோ அவர்கள் தனது நண்பராகிய இராம.தமிழ்ச்செல்வனை அழைத்துக் கொண்டு சென்னை தி.நகர் இராமன் சாலையில் உள்ள பாரதிதாசன் வீட்டிற்குச் சென்றார். அப்போது “வா! அண்ணலே” என்று கூறியபடி அவரை பாரதிதாசன் தழுவினார். அப்போது திடீரென எதிர்பாராமல் அண்ணல் தங்கோவை முத்தமிட்டார். அப்போது பாரதிதாசன் “அண்ணல்! பெரியாரும், அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள்!. தமிழினத்தை திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றனின் தனித்தமிழ்நாடு என்ற குறிக்கோளே வெற்றி பெறும்! அன்று தமிழகம் உன்னை நினைக்கும்” என்று கூறியுள்ளார். (4)
திராவிட இயக்க அரசியலில் இருந்து கொண்டே தமிழ்த்தேசிய அரசியலை பாரதிதாசன் முன்னெடுத்ததையும், இறுதிக் காலத்தில் திராவிடமே தமிழ்த்தேசியத்திற்கு தடைகற்கள் என்பதை அவர் உணர்ந்ததையும் மேற்குறித்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
தமிழ்த்தேசியமே தமிழருக்கு விடுதலையை பெற்றுத் தரும் என்கிற புரட்சிக் கவிஞரின் தீர்க்கப் பார்வையை என்னவென்பது! ஆம்! இது தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்காலம். இந்திய, திராவிட மாயை ஒழிந்து தமிழகத்தில் இனி தமிழ்த் தேசியமே வெற்றி பெறும் என்பதை புரட்சிக்கவிஞரின் நினைவு நாளில் உரத்துச் சொல்வோம்!
நன்றி:
1. இனியன் சம்பத் பதிப்பகம் வெளியிட்ட “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்.
2. முருகு இராசாங்கம் எழுதிய “பாரதிதாசன் பொற்கிழி” நூல்
3. கவிஞர் முருகு சுந்தரம் எழுதிய “பாரதி தாசன் ஒரு பல்கலைக் கழகம்” தொகுப்பு நூல்.
4. செ.அருள்செல்வன் எழுதிய “தூய தமிழ்க்காவலர் கு.மு.அண்ணல் தங்கோ” நூல்.

Leave a Response