காவிரிச் சிக்கல் – பெங்களூருவில் பின் வாங்கிய குஷ்பு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது….

நாட்டில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் தான் பாலியல் வன்புணர்வுகள் அதிக அளவில் நடந்து வருகிறது.அவை குறித்து பா.ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார்கள்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைத் தடுக்க மத்திய அரசு தவறி விட்டது.

நாட்டில் நடக்கும் பாலியல் வன்புணர்வுகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசாமல் இருப்பது ஏன்? காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். உண்மையில் பெண்கள் இல்லாத நாட்டை பா.ஜனதாவினர் உருவாக்க நினைக்கிறார்கள்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை, முக்கியத்துவமும் இல்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்ததைவிட தற்போதைய பா.ஜனதா ஆட்சியில், வன்புணர்வு, வன்புணர்வு முயற்சி சம்பவங்கள் அதிகரித்து விட்டன.

நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க. சார்பில் 3 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெற்றி பெற சாத்தியமில்லை.

தமிழக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அ.தி.மு.க. கட்சித் தலைவர்களால் தீர்க்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது கர்நாடகத்தில் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இருப்பதால், அதுபற்றி நான் பேச விரும்பவில்லை.

இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

காவிரிச் சிக்கலில் கர்நாடகமும் இந்திய அரசும் தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்துவருகிறது. அகில இந்தியக் கட்சியில் இருப்பவர்கள் யாரும் இதுபற்றிப் பேசுவதில்லை. குஷ்புவும் அதற்கு விதிவிலக்கல்ல என்று தெரிகிறது.

Leave a Response