மோடியை ஓட ஓட விரட்டியது சாதனையா? வேதனையா? – ஓர் அலசல்

2014 ஆம் ஆண்டு மே 24 ஆம் நாள் மோடியின் வாழ்வில் மறக்க முடியாத நாள். அன்றுதான் இந்தியஒன்றியத்தின் பிரதமராக அவர் பொறுப்பேற்றார்.

அசைக்கமுடியாத பலத்துடன் ஆட்சி அமைத்த அவருக்கு, ஆட்சியின் நான்காம் ஆண்டை நிறைவு செய்யவிருக்கிற இந்நேரத்தில் இன்றைய நாள் (ஏப்ரல் 12,2018) மீண்டும் மறக்க முடியாத நாளாக அமைந்துவுட்டது.

தான் ஆட்சி செய்யும் ஒன்றியத்துக்குள் உள்ள ஒரு மாநிலம், தம்முடைய அடிவருடிகள் ஆளும் மாநிலமான தமிழகத்தில் இவ்வளவு எதிர்ர்ப்புகள் இருக்கும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.

தமிழகத்தில் அவர் வருகையையொட்டி, அதிமுக தவிர தமிழகத்திலுள்ள அத்தனை கட்சிகளும் கறுப்புக்கொடி போராட்டத்தில் இறங்கின.

திமுக தலைவர் கருணாநிதி இல்லம் தொடங்கி தமிழக்மெங்கும் ஏராளமான வீடுகளில் கறுப்புக்கொடி பறக்கிறது.

விமான நிலையம் வரும்போதே இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் நிலையத்துக்குள்ளேயே வந்துவிட்டார்கள் என்று செய்தி.

நிலையத்துக்கு வெளியே உயிரையும் துச்சமாக மதித்து பிரமாண்ட விளம்பரப்பலகை மேல் கறுப்புக்கொடியை ஏந்திய போராளிகள்.

ஹெலிகாப்டரில் பயணம் செய்தால் வான்வெளியெங்கும் கறுப்பு பலூன்கள்.

ஐஐடியின் சுற்றுச்சுவரை உடைத்துப் பாதை அமைத்து அதில் பயணம் செய்தால் அங்கும், கறுப்புக்கொடியுடனும் எதிர்ப்புப் பதாகைகளுடனும் மாணவர்கள்.

மோடி வருகைக்கு என்னுடைய எதிர்ப்பு என்று ஈரோட்டில் ஓரிளைஞர் தன் உயிரையே கொடையாகக் கொடுத்து அதிர வைக்கிறார்.

சமூக வலைதளங்களைத் திறந்தால் கறுப்புக் கொடிகளும் எதிர்ப்புக் குரல்களும் ஏராளம்.

மோடியே திரும்பிப்போ என்கிற ஹேஷ்டேக், சென்னை, தமிழ்நாடு, இந்தியா ஆகியனவற்றைத் தாண்டி உலக அளவில் டிரெண்டாகிறது.

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் நாட்டின் பிரதமரையே ஓட ஓட விரட்டிய மாநிலம் என்கிற பெயர் பெற்றது தமிழகம்.

இது பெருமையா? என்றால் இல்லை. வேதனை. வந்தாரை வாழவைக்கும் எண்ணம் கொண்டதுதான் தமிழ்நாடு.

செல்விருந்து அனுப்பி வருவிருந்து நோக்கிக் காத்திருக்கும் பண்பாடு கொண்டதுதான் தமிழ்ச்சமூகம்.

நாங்கள், ஏன் நாட்டின் பிரதமராகிய உங்களை ஓட ஓட விரட்டுகிறோம் என்று சற்றே சிந்தியுங்கள்.

நீங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே அணுகுகிறீர்கள். சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்தும் நாசகாரத் திட்டங்களை எங்கள் மேல் திணிக்கிறீர்கள்.

தமிழை அழித்து இந்தியையும் சமக்கிருதத்தையும் அவ்விடத்தில் வைத்துப் பார்க்கத் துணிந்தீர்கள்.

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவை நீட்டை நீட்டி தூக்கில் தொங்கவிட்டீர்கள்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் நெல்லை விளைவிப்பதற்குப் பதிலாக எங்கள் விவசாயிகளின் உடல்களையே உரமாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையிலும் பல்லாண்டுகளாகப் போராடி எங்களுக்குக் கிடைத்த மிகச்சொற்ப நீதியையும் நிலைநாட்டி மேலாண்மை செய்யாமல் அடிக்கிறவனுக்கு ஆதரவாகவே நடந்துகொள்கிறீர்கள்.

ஒரு பூனை கூட நான்கு சுவற்றுக்குள் அடைத்துவிட்டால் அதைவிடப் பன்மடங்கு பலம் கொண்ட மனிதனையே அடித்து வீழ்த்தும் பலம் பெறும் என்பது எதார்த்தம்.

அப்படித்தான் தமிழ்நாடு மாறிவிட்டது. நான்காண்டுகளாக நீங்கள் துரத்தத் துரத்த ஓடிக்கொண்டேயிருந்தோம். இப்படியே ஒடினால் அதலபாதாளத்தில் விழவேண்டும் என்பதாலேயே திரும்பிப் பார்த்திருக்கிறோம்.

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.உங்கள் செங்கோல் வளையாமல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, எங்கள் அடிப்படைத் தேவையை நிறைவேற்றித் தந்தீர்களென்றால் உங்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு தர நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

Leave a Response