சூரப்பாவையும் பன்வாரிலாலையும் திரும்பப் பெற வேண்டும் – பெ.மணியரசன் காட்டம்

சூரப்பாவையும் பன்வாரிலாலையும் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர பெ.மணியரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்….

தமிழ்நாடு அரசின் உயர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கன்னடரான எம்.கே. சூரப்பா என்பவரை துணைவேந்தராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 05.04.2018 அன்று அமர்த்திய செயல், இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தமிழர்களுக்கு உரிமை இல்லை என்ற பா.ச.க.வின் ஆரியத்துவா கருத்தை நிலைநாட்டுவதாகவே உள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரி என்பவரை 22.03.2018 அன்று துணை வேந்தராக பன்வாரிலால் அமர்த்தினார். அதற்கு முன், தமிழ்நாடு இசைப் பல்கலைக் கழகத்திற்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா என்பவரை துணை வேந்தராக்கினார், பன்வாரிலால்! பணியமர்த்தப்பட்ட எல்லோருக்கும் உள்ள “கூடுதல்” தகுதி, இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். – ஆரியத்துவ ஆதரவாளர்கள் என்பதே!

தமிழ்நாட்டில் உள்ள 10 அரசுப் பொறியியல் கல்லூரிகள், 17 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 554 தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆகியவை அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்குகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்திற்குத் தகுதியான கல்வியாளர் தமிழினத்தில் கிடைக்கவில்லையா? தகுதியான கல்வியாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், தமிழர்களுக்கு அந்த உரிமை மற்றும் அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு, அயல் இனத்தாரை தொடர்ந்து துணை வேந்தர்களாக பா.ச.க. ஆட்சி அமர்த்துகிறது.

துணை வேந்தராக வெளி மாநிலத்தவரை பணியமர்த்தினால், அதன் வழியாக பல்கலைக் கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் பேராசிரியர்கள், விரிவுரையாளகள், அலுவலகப் பணியாளர்கள் தொடங்கி மாணவர்கள் வரை – வெளி மாநிலத்தவரைச் சேர்க்கும் அபாயம் இருக்கிறது என்பதையும் தமிழர்கள் உணர வேண்டும்.

இந்த அதிகாரப் பறிப்புக்கு – உரிமைப் பறிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முதலமைச்சர் எடப்பாடி அரசுக்கு அக்கறையும் இல்லை; ஆற்றலும் இல்லை! இந்தியாவில் தமிழ்நாடு – இன அடிப்படையில் ஒதுக்கப்பட்ட – உரிமைப் பறிக்கப்பட்ட (Apartheid) மாநிலமாக வைக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கூறி வருகிறது.

இக்கூற்றுக்கு இன்னொரு சாட்சியமாகத்தான் எம்.கே. சூரப்பா என்ற கன்னடரை பா.ச.க. ஆளுநர் பன்வாரிலால், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தர் ஆக்கியிருக்கிறார்.

தமிழ்நாட்டு பொறியியல் அறிஞர்களிடம், பேராசிரியர்களிடம் இல்லாத திறமைகள், கல்விப் புலமைகள், சூரப்பாவிடம் இருக்கின்றனவா? இல்லை! ஏற்கெனவே பணியாற்றிய இடங்களில் அலுவலகத்திற்கு முறையாக வராதவர் என கண்டிக்கப்பட்டவர் இவர். பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்குப் புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கியபோது, ஐந்து ஆண்டுகளாக அதைக் கிடப்பில் போட்டதன் காரணமாக கட்டுமானச் செலவு பல மடங்கு அதிகரிக்க இவரே காரணம் என இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரால் குற்றம்சாட்டப்பட்டவர் சூரப்பா!

தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மறுத்து கன்னட இனவெறியோடு செயல்படும் கர்நாடகத்திற்கு பரிசளிப்பதுபோல், தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் எம்.கே. சூரப்பாவை தமிழ்நாட்டில் துணை வேந்தர் ஆக்கியிருக்கிறார் பன்வாரிலால்!

சூரப்பாவை துணை வேந்தர் பணியிலிருந்து விடுவித்து திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென்றும், பல்வேறு கண்டனங்களுக்கு அன்றாடம் உள்ளாகிவரும் தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலாலைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இக்கோரிக்கை நிறைவேறும் வகையில், தமிழர்கள் தன்மான அடிப்படையில் தாயக உரிமை காக்கும் முறையில் சனநாயகப் போராட்டங்களை நடத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response