அண்ணா பல்கலைக்கு கன்னட துணைவேந்தரா? – கி.வீரமணி கண்டனம்

அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஒரு கன்னட மாநிலத்தவரா?

மாநில உரிமைப் பறிப்பு – சமூக அநீதியை எதிர்த்து அனைத்துத் தரப்பினரும் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை….

அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஒரு கன்னட மாநிலத்தவர் துணைவேந்தராக நியமிக்கப்படவிருப்பது என்பது மாநில உரிமைப் பறிப்பு, சமூக அநீதியானது; இதனை எதிர்த்து அனைத்துத் தரப்பினரும் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

*இதைவிட தலைக்குனிவு தமிழ்நாட்டிற்கு வேறு இருக்க முடியாது!*
அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு (சுமார் இரண்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர்) தேடல் குழுக்கள் மாற்றப்பட்டும், நீட்டப்பட்டும் கடைசியில் வெளிவரும் செய்தி, இதற்கு ஒரு கன்னட மாநிலத்தவர் துணைவேந்தராக நியமிக்கப்படவிருக்கிறார் என்பதாகும். *இது உண்மையானால், இதைவிட தலைக்குனிவு தமிழ்நாட்டிற்கு வேறு இருக்க முடியாது!*

ஏற்கெனவே தமிழ்நாடு நுண்கலைப் பல்கலைக் கழகத்திற்கு அமெரிக்காவிலிருந்து வந்த பார்ப்பன அழுத்தத்தால் கேரளப் பார்ப்பனர் ஒருவர் துணைவேந்தராக நியமனம் – தகுதி வாய்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த புஷ்பவனம் குப்புசாமிகளுக்கு இடமில்லை அத்தேர்வில் என்பது வெட்கமும், வேதனையும் அடையவேண்டிய ஒன்று.

அதேபோல, அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக ஆர்.எஸ்.எஸ்.காரரான, ஆந்திரப் பார்ப்பனர் ஒருவரை ஆளுநர் – தமிழக அமைச்சரவையின் மவுன சம்மதத்துடன் நியமனம் செய்யப்பட்டுள்ளது மிகுந்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

*மறைமுகமாக சேற்றை வாரி இறைக்கும் வன்கொடுமை அல்லவா?*
இப்போது அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், இங்குள்ள தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எவருக்குமே தகுதியில்லாததுபோல் கருதி, இப்படி ஒரு கன்னடப் பேராசிரியர் நியமனம் என்றால், அதன் பொருள் என்ன? இது தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள், கல்வி அறிஞர்கள்மீது மறைமுகமாக சேற்றை வாரி இறைக்கும் வன்கொடுமை அல்லவா?

இப்போக்கினைத், தொடர்ந்து ஆளுநர் கையாளுவதும், தமிழக ஆளுங்கட்சி அதற்கெல்லாம் வாய்மூடி, கைதட்டி, மவுனசாமிபோல் இருப்பதும் அரசிலமைப்புச் சட்ட உரிமைப்படி நியாயம்தானா? இதை அனைத்துக் கட்சிகளும், கல்வி அமைப்புகளும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும்.

மற்றொரு முக்கிய செய்தி: தேடல் குழு ( Search Committee ) என்ற குழுவில் ஏன் பிற மாநிலங்களிலிருந்து நீதிபதிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்களைப் போடவேண்டும்? இதற்குமுன் எப்போதும் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் நியமனங்களில் நடந்திராத நடைமுறை – இந்த அநீதி – மாநில உரிமைகளைப் பறிப்பதோடு, தமிழ்நாட்டு நீதிபதிகள், கல்விச் சான்றோர் – எவர்மீதும் நம்பிக்கை இல்லை என்று சொல்லாமற் சொல்லும் இழிவான நிலை அல்லவா?

இதனையும் தடுத்து நிறுத்த ஜனநாயகத்திலும், அரசியலமைப்புச் சட்ட மாநில உரிமைகள் காப்பதிலும் அக்கறை கொண்ட அனைத்துத் தரப்பினரும் தங்கள் எதிர்ப்பையும், வன்மையான கண்டனத்தையும் எழுப்பிட வேண்டும்.
இந்தப் போக்கு இனியும் தொடரக்கூடாது!

Corruption என்பது – வெறும் பணம் பெறுவது என்பது மட்டுமல்ல; *தவறான நடவடிக்கையையும் உள்ளடக்கிய அந்த அமைப்பின் மாண்பையும் கெடுப்பது என்பதும் சேரும்.* எனவே, பழைய முறை – பணம் வாங்கிக் கொண்டு என்பதற்குப் பதிலாக – புதிய முறை – அத்துமீறியது அல்லது மாநில மரபு நெறி, கல்வித் துறையின் சமூகநீதிக்கு எதிரான போக்கு என்பதும்கூட உள்ளடக்கம் ஆகும்.

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை, 5.4.2018

Leave a Response