கமல் கட்சிக்கு நிதி எங்கிருந்து வருகிறது? – கமல் சொன்ன பதில் என்ன?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் சுற்றுப்பயணம் செய்து கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து அவர்கள் மத்தியில் பேசினார்.

மார்ச் 11,2018 காலை ஈரோட்டில் பயணத்தைத் தொடங்கிய அவர் தனியார் விடுதியொன்றில், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் பேசியவற்றிலிருந்து….,

அரசியலில் வெற்றி பெற சினிமாவில் பெற்ற புகழ் மட்டும் பயன்படும் என்று நான் நினைக்கவில்லை. மக்களின் அன்பும், எனது நேர்மையும் அரசியல் பயணத்தில் கை கொடுக்கும்.

மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். நானும் மக்களில் ஒருவன்தான். மக்கள் விரும்புகிற பாதையில் நானும் பயணிக்கிறேன். அரசியலில் வெற்றிடம் இருப்பதாகக் கூறினாலும், அந்த இடத்தைப் பிடிக்கிற திட்டம் எதுவும் இல்லை. ஆனால் மக்கள் நலனே எனது கட்சியின் கொள்கையாக உள்ளது. மக்கள் முன்னால் செல்கிறார்கள். நான் அவர்களுக்குப் பின்னால் செல்கிறேன். மக்களின் மனதில் என்ன உள்ளது என்று அறிந்து கொள்ளவே இந்தப் பயணம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைக் கொலை செய்தவர்களை நான் மன்னித்துவிட்டேன் என்று ராகுல்காந்தி கூறி இருப்பது, அவருடைய மனிதநேயம். ஆனால் நாம் கேட்பது சட்டத்தளர்வு. மனிதநேயத்துக்கும், சட்டத்தளர்வுக்கும் வேறுபாடு உள்ளது. எனவே சட்டத்தளர்வு செய்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்பது நமது கோரிக்கை.

தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி குறித்து நான் நேர்மையாக என்னுடைய விமர்சனங்களை வைத்து வருகிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக 3வது தலைமுறையாக மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் மாறி மாறி வந்தாலும், அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபடுகிற மக்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு.

நான் அரசியல் கட்சி தொடங்கியதற்கு கிறிஸ்தவ மிஷனரிகள் நிதி உதவி செய்வதாகவும், எனக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் வருகிற தகவல்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. இதுதொடர்பான கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.

ஈரோட்டில் தந்தை பெரியார் வாழ்ந்த இல்லத்திற்கு சென்று வந்தேன். அது எனது தந்தையின் வீடு என்கிற மனப்பான்மையிலேயே சென்று வந்திருக்கிறேன்.

மீனவர்களையும், விவசாயிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்கும் கமல்ஹாசன், அவர் சார்ந்த திரைத்துறைகளை சேர்ந்த குறைகளைக் கேட்காதது ஏன் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டிருக்கிறார்.

சரக்கு மற்றும் சேவை வரியால் திரைத்தொழில் பாதிப்படையும் என்ற முதல் எதிர்ப்பு குரலை ஒலித்தது நான்தான். பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி போன்ற சட்டங்கள் ராகுல்காந்தி கூறியதுபோல் குப்பையில் போட வேண்டியதுதான்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் தனியாக நடந்து செல்லும் நாள் சுதந்திரநாள் என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால் இன்று தமிழகத்தில் நண்பகல் 12 மணிக்குக்கூட தனியாக ஒரு பெண் செல்ல முடியாத நிலைதான் உள்ளது.

திரைப்படத்தில் இனி நடிப்பீர்களா என்று பலர் கேட்கிறார்கள். நிச்சயமாக தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படங்களை முடிக்கும் வரை நடிப்பைக் கைவிட மாட்டேன்.

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

Leave a Response