இலங்கை ராணுவம் கொடூரமாக நடந்துகொண்டது – ராகுல்காந்தி பேச்சு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

பின்னர் சாந்தன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குத் தண்டனை 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

அதற்கு அடுத்த நாளே அதாவது 2014-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். மேலும் 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. இதை ஏற்று தமிழக அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

பின்னர் இந்த வழக்கை அப்போதையை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில் சி.பி.ஐ. விசாரணை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என 2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. இதையடுத்து முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க கோரி 2016-ம் ஆண்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. பின்னர் மீண்டும் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த வழக்கை ரஞ்சன் கோகாய், ஏ.எம்.சப்ரே, நவீன் சின்கா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஜனவரி 23-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி வாதிடும் போது, மாநில அரசின் தீர்மானத்துக்கு மத்திய அரசு மதிப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார். முருகன் உள்ளிட்ட 7 பேர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரபு தன்னுடைய வாதத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களை விடுவிக்குமாறு 2016-ம் ஆண்டு தமிழக அரசு அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்திடம் இந்த விவகாரத்தில் முடிவை நீங்கள் தான் எடுக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் தமிழக அரசு உத்தரவு குறித்து 3 மாதத்துக்குள் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிற நிலையில்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி கொலையாளிகளை நானும், பிரியங்காவும் மன்னித்துவிட்டோம்,” எனக் கூறிஉள்ளார்.

சிங்கப்பூரில் முன்னாள் ஐஐஎம் மாணவர்கள் மத்தியில் உரையாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம்,

உங்களுடைய தந்தையின் கொலையாளிகளை மனித்துவிட்டீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துப் பேசுகையில்,

கொலையால் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்தோம், காயம் அடைந்தோம். பல ஆண்டுகளாகக் கோபத்துடன் இருந்தோம். இருப்பினும், எப்படியோ நாங்கள் கொலையாளிகளை முற்றிலுமாக மன்னித்துவிட்டோம், உண்மையாக நாங்கள் அவர்களை மன்னித்துவிட்டோம்,” என கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “என்னுடைய தந்தை இறக்கப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியும். என்னுடைய பாட்டியும் இறக்கப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியும். அரசியலில் தவறான படைகளுடன் நீங்கள் குழப்பம் கொள்ளும் போதும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் ஸ்திரமாக போராடும் போது நீங்கள் உயிரிழக்க நேரிடும். அது மிகவும் தெளிவானது. என்னுடைய பாட்டியும் இறக்கப்போகிறேன் என கூறினார், என்னுடைய தந்தையும் இறக்கப்போகிறேன் என கூறினார்.

முன்னாள் பிரதமர்களின் பேரனாகவும், மகனாகவும் உங்களுடைய சிறப்பு உரிமையை நீங்கள் உணர்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய ராகுல் காந்தி, என்னுடைய பாட்டி படுகொலை செய்யப்பட்ட போது எனக்கு வயது 14 ஆகும். பதின்ம வயதில் என்னுடைய பாட்டியைக் கொன்றவர்களுடன் நான் பேட்மிண்டன் விளையாடுவது வழக்கம் ஆகும். என்னுடைய தந்தையும் கொலை செய்யப்பட்ட பின்னர் என்னுடைய வாழும் சூழலே மாறிவிட்டது. காலை தொடங்கி இரவு வரையில் என்னை சுற்றிலும் 15 பாதுகாவலர்கள்தான் இருந்தார்கள். 24 மணி நேரமும் 15 பாதுகாவலர்களுடனே இருக்க வேண்டிய நிலை உள்ளது. அதனை எதிர்க்கொள்வது என்பது மிகவும் கடினமானது, எனக் கூறிஉள்ளார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணத்தை டிவியில் பார்த்தபோது இரு விஷயங்களை நான் உணர்ந்தேன்.

ஒன்று, இலங்கை ராணுவத்தினர் ஏன் இத்தனை கொடூரமாக நடந்துள்ளனர் என்று,

மற்றொன்று, நான் மிகவும் மோசமானதாக உணர்ந்தேன், அவருக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வேதனை அடைந்தேன். வன்முறையைத் தாண்டி அவர் ஒரு மனிதர், அவருக்கும் குடும்பம் உள்ளது. குழந்தைகள் அவருக்காக அழுவர். நான் இதுபோன்ற வலியை அனுபவித்திருக்கிறேன் என்று கூறினார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி பேசும் வீடியோ காங்கிரஸ் கட்சியால் டுவிட்டரில் வெளியிடப்பட்டு உள்ளது.

Leave a Response