என்னைச் சுற்றிலும் தமிழ்முத்த இதழ்கொண்ட பூக்கள் – பழனிபாரதி நெகிழ்ச்சி

கவிஞர் பழனிபாரதியின் முகநூல் பதிவிலிருந்து…

இன்று அதிகாலை என் மின்னஞ்சலைத் திறந்தபோது…
‘ஹார்வர்ட் தமிழ் இருக்கை’ இயக்குனர்களில் ஒருவரான
அய்யா அ. முத்துலிங்கம் அவர்களிடமிருந்து ஒரு மடல்.

“பழநிபாரதி அவர்களுக்கு
வணக்கம். நலம்தானே.

முப்பது மாதங்களுக்கு முன்னர் தங்களிடம் ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ஒரு கீதம் அமைத்து தரும்படி கேட்டேன். ஒருவித மறுப்பும் தெரிவிக்காமல் உடனேயே அதைச் செய்து தந்தீர்கள். பின்னர் அது இசையமைக்கப்பட்டு, காணொளியாகவும் மாறி பல இணையதளங்களில் வெளியானது. ஹார்வர்ட் தமிழ் இருக்கையின் அடையாளக் கீதமாக அங்கீகரிக்கப்பட்டு பல கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்பட்டது.

இன்று ஹார்வர்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறிவிட்டது. அதன் இலக்காகிய ஆறு மில்லியன் டொலர்களை திரட்டிவிட்டபோதும் இன்னும் நிதி வந்து குவிந்த வண்ணமே உள்ளது. ஹார்வர்ட் நிர்வாகிகள் இப்படி ஓர் உலகளாவிய எழுச்சியை கடந்த 382 வருட ஹார்வர்ட் வரலாற்றில் கண்டதில்லை. பிரமித்துப்போய் நிற்கிறார்கள்.

இதை ஆரம்பித்து வைத்து பங்குகொண்ட உங்களை மறுபடியும் நினைத்து நன்றி பாராட்டிக் கொள்கிறேன். உங்கள் பெயர் ஹார்வர்ட் தமிழ் இருக்கையோடு இணைந்து என்றென்றும் வாழும். மறுபடியும் நன்றி.

மிகுந்த பிரியத்துடன்

அ.முத்துலிங்கம்
10. 03 .2018”

என்னைச் சுற்றிலும்
தமிழ்முத்த இதழ்கொண்ட பூக்கள்…
தலைக்கு மேல்
தமிழிசை பாடும் பறவைகள்…

மருத்துவர்கள் திரு. திருஞானசம்பந்தம், ஜானகி ராமன், அ.முத்துலிங்கம், பேராசிரியர் மு.ஆறுமுகம், பால் பாண்டியன் அனைவருக்கும் நன்றி…

‘தாயே தமிழே வணக்கம்!
உன் உறவே உயிர் மெய் விளக்கம்!’

Leave a Response