தமிழர்களைப் போல முஸ்லிம்களையும் அழிக்க சிங்களர்கள் திட்டம் – ஜவாஹிருல்லா எச்சரிக்கை

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பயங்கரவாதிகளின் தொடரும் வன்முறைகள்

கலவரத்தை முன்னின்று நடத்தும் பொது பல சேன தலைவர் ஞானசேரா உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைதுச் செய்ய வேண்டும்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை….

1983ல் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் நடத்திய இனக்கலவரங்களை ஞாபகமூட்டும் வகையில் இலங்கையில் கடந்த சில தினங்களாக முஸ்லிம் சிறுபான்மையினர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. முதலில் அம்பாறை பகுதியிலும் பிறகு கண்டி மாவட்டத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டும் பெரும் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

அம்பாறை தொடங்கி கண்டி வரை

அம்பாறையில் ஒரு உணவகத்தில் கொத்து ரொட்டியில் ‘ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்தை’ கலப்பதாக பொய்யைப் பரப்பி ஒரு பெரும் கலவரம் சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. பேருந்தில் வந்த வன்முறைக் கூட்டம் பள்ளிவாசல் உட்பட முஸ்லிம்களின் உடமைகளைத் தாக்கி பெரும் கலவரத்தில் ஈடுபட்டது. இந்தக் கலவரம் ஒய்வதற்குள் கண்டி திகன பகுதியில் முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதல் நடைபெற்றது.

கண்டி திகன பகுதியில் ஒரு வாகன விபத்து நடைபெற்றது. இந்தச் சூழலில் குடிபோதையிலிருந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் குமாரசிங்க என்ற அப்பாவி சிங்கள ஆட்டோ ஒட்டுனரைக் கடுமையாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி 10 நாட்கள் கழித்து மரணம் அடைந்தார் இதனை ஒரு சாக்காகப் பயன்படுத்தி சிங்கள பேரினவாதிகள் கண்டி திகன பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் கடைகள் மீது திட்டமிட்ட வன்முறை தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு முஸ்லிம் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பயங்கரவாதி ஞானசார தேரர்

திகண, தெல்தெனிய உட்பட கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட வன்முறைகள், ஆர்ப்பாட்டங்களுக்கு சிங்கள பவுத்த பிக்குகளே தலைமையும் வகித்தனர்.
கலவரத்தை தூண்டிய பிக்கு பயங்கரவாதிகள்
பொது பலசேனா என்ற சிங்கள பயங்கரவாத அமைப்பின் பொதுச்செயலர் ஞானசார தேரர், மட்டக்களப்பு சுமணரத்ன தேரர் இருவரும் கண்டிக்கு பயணம் செய்த பின்னரே வன்முறைகள் வெடித்திருக்கின்றன.

கண்டியில் நடைபெற்ற முஸ்லிம் விரோத கலவரத்தை கண்டித்து கிழக்கு மாகணத்தில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்த மார்ச் 6 அன்று இலங்கை அரசு அவசர நிலையை பிரகடணம் செய்துள்ளது.

இதன் பிறகும் கூட கண்டி திகன அருகில் மிஹிகின்ன பகுதியில் உள்ள பள்ளிவாசல் பேராதனியாவில் உள்ள எழுகூடா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் கடைகள் மற்றும் வீடுகள் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.

தொடர்ச்சியாக பள்ளிவாசல்களும், முஸ்லிம் வணிக நிறுவனங்களும் பெரும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்பு படைகள் இதனை தடுப்பதற்கு பதிலாக வேடிக்கை பார்த்து வருகின்றன.

இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பிற்கு பிறகு அங்கு வாழும் மற்றொரு சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு கலவரங்கள் நடைபெற்று வந்துள்ளன. முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரங்களும் சிங்கள பயங்கரவாதிகளால் முடுக்கி விடப்பட்டுள்ளன..

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசர நிலை எவ்வகையிலும் உதவவில்லை. இந்த அறிவிப்பிற்கு பிறகும் முஸ்லிம்கள் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். எனவே உடனடியாக ஞானசேரா உட்பட கலவத்தின் மூல ஊற்றாக செயல்படும் பயங்கரவாதிகளை இலங்கை அரசு கைதுச் செய்ய வேண்டும் என்று கோருகின்றோம். சர்வதேச சமூகம் இதற்கான அழுத்தத்தை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கை பெரும்பான்மை சிங்கள பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மற்றொரு சிறுபான்மை சமூகமான தமிழர்களுடன் புரிந்துணர்வு ஏற்படுத்தி கூட்டாக அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

இவண்
எம் எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Leave a Response