தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் – பழ.நெடுமாறன் திட்டவட்டம்

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக சமஸ்கிருதத்திலான கணபதி பாடல் இசைக்கப்பட்டது. விழா நிறைவில் தேசியகீதம் பாடப்பட்டது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக,

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

சென்னை ஐஐடி – யில் இன்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடுவதற்கு பதில் சமசுகிருதத்தில் மகா கணபதி பாடல் பாடப்பட்டுள்ளது இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சகல மதங்களைச் சார்ந்த மாணவர்கள் படிக்கும் கல்வி நிலையத்தில் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த இறைவணக்கப் பாடலைப் பாடுவது மிகத் தவறானது.

தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்திலும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாட வேண்டும். அதற்கு மாறாக சமசுகிருதத்தை திணிக்கும் திட்டத்துடன் கணபதி பாடல் பாடப்பட்டது வேண்டாத விளைவுகளுக்கு வழி வகுக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response