ஆந்திராவில் ஏழு தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலையா?

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடம் திருப்பதி மலைப்பகுதியையொட்டி உள்ளது. இங்குள்ள மலை அடிவாரத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. நேற்று இந்த ஏரி வழியாக சென்றவர்கள் ஏரிக்குள் 7 பேரின் உடல்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் அது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக ஒண்டிமிட்டா காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் அந்த ஏரிக்கு விரைந்து சென்றனர். அங்கு 7 ஆண்களின் உடல்கள் மிதந்து கொண்டிருந்தன. அவற்றை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒண்டிமிட்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மலைப்பகுதியில் செம்மரங்கள் அதிகமாக உள்ளன. செம்மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க வனத்துறையினரின் ரோந்தும் தீவிரமாக உள்ளது. எனவே இரவு நேரத்தில் செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் அங்கு வந்த வனத்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்று ஓடியபோது ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.

செம்மரக்கட்டை கடத்தும் கும்பலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். எனவே இறந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன், செம்மரங்களை வெட்டி கடத்திச் செல்லும் கும்பல் அதிரடிப்படையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 23 பேர் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்போதும் ஆந்திரக்காவல்துறையினரால் இவர்கள் இறந்திருக்கலாம் என்றும் சுட்டுக்கொன்றால் சிக்கல் வருகிறது என்பதால் ஏரியில் மூழ்கடித்து கொன்றுவிட்டார்கள் என்றும் பேசப்படுகிறது.

Leave a Response