காவிரி தீர்ப்பு – கர்நாடக முதல்வரின் கருத்து

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி வழக்கில் நடுவர் மன்றத்தில் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை கொடுக்க சாத்தியம் இல்லை. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் ஆதாரம் மூலம் 20 டி.எம்.சி. தண்ணீர் பெற முடியும் என்று கர்நாடகம் வாதிட்டது.

கர்நாடகத்தின் இந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் 10 டி.எம்.சி. தண்ணீர் உற்பத்தி ஆவதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இதனால் 10 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்திற்கு மிச்சமாகியுள்ளது. அதுமட்டுமின்றி பெங்களூரு நகர குடிநீர் தேவைக்கு 4.75 டி.எம்.சி. தண்ணீர் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். மொத்தத்தில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் கர்நாடகத்திற்கு நிவாரணம் கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பில் யாருக்கும் வெற்றியும் அல்ல-தோல்வியும் அல்ல.

கூட்டாட்சி தத்துவத்தின்படி சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இடர்ப்பாட்டு காலத்தில் அதற்குரிய பங்கீட்டை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Leave a Response