மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்துக்கு இந்துத்துவ சக்திகளே காரணம் – சீமான் குற்றச்சாட்டு

திருச்செந்தூரில் பிப்ரவரி 11 அன்று வீரத்தமிழர் முன்னணி நடத்திய திருமுருகப்பெருவிழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. 1967ஆம் ஆண்டில் தொல்லியல் ஆய்வாளர் ஜி.எஸ்.கை என்பவர் கன்னியாகுமரி முதல் உத்திரபிரதேசம் வரை, தான் கண்டறிந்த சுமார் 75,000 த்திற்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகளை ஆய்விற்காக கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள தென்னிந்தியத் தொல்லியல் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். எழுத்துவடிவ கறுப்புப் படங்களாகவும், அச்சுக்களாகவும் படியெடுத்து அனுப்பப்பட்ட அந்த தமிழ் கல்வெட்டுகள் யாவும் கேட்பாரற்று பராமரிப்பின்றி தமிழ் பகைவர்களால் தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வருவதாக அங்கு ஆய்விற்கு செல்லும் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், ஆய்விற்காக செல்லும் ஆய்வாளர்களுக்கு அந்த கல்வெட்டின் படிகள் மறுக்கப்படுகிறது எனவும் கூறியிருக்கிறார்கள். எனவே, அந்தக் கல்வெட்டுகளைக் காக்கும் பொருட்டு தமிழக அரசானது உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வீரத்தமிழர் முன்னணி வலியுறுத்துகிறது.

2. தமிழர் இறை முத்தமிழ் முருகனின் புகழ்பாடும் ‘தைப்பூசத் திருநாளை’ விடுமுறை நாளாக அறிவிக்கக்கோரியும், குறிஞ்சாங்குளத்தில் அன்னை காந்தாரிக்குக் கோயிலமைக்கக் கோரியும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், இந்துசமய அறநிலையத்துறைக்கும் மனுகொடுத்து 8 மாதங்களுக்கு மேலாகிறது. இதுவரை அந்த மனு குறித்து அரசின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இந்த அலட்சியப்போக்கை வீரத்தமிழர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இப்போக்குத் தொடரும்பட்சத்தில் சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் வீரத்தமிழர் முன்னணி பேரறிவிப்பு செய்கிறது.

2. ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை அவமதிக்கும் வகையில் தரமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி கொச்சைப்படுத்திய பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா சர்மாவையும், வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய ஜீயரையும், இவ்விவகாரத்தில் அரசியல் செய்ய முயன்ற மதத்துவேசிகளையும், இந்துத்துவா வெறியர்களையும் வீரத்தமிழர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தோடு கலவரத்தை ஏற்படுத்தி மக்களை பிரித்தாள முயலும் இப்போக்கினை இந்துத்துவா அமைப்புகளும், மத அடிப்படைவாதிகளும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், இதனைத் தொடரும்பட்சத்தில் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் வீரத்தமிழர் முன்னணி கடுமையாக எச்சரிக்கிறது.

3. வைணவ வழிபாட்டை மேற்கொண்டு தமிழிலக்கியம் பாடிய தமிழர் மூதாதை எங்கள் ஆண்டாள் பெருமாட்டியை பார்ப்பனீயப்படுத்தலை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது. ஆகையினால், அவரைச் சொந்தம் கொண்டாடும் போக்கினை பாரப்பனீயம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அவர் முழுக்க முழுக்கத் தமிழர் பேரடையாளம் எனவும் வீரத்தமிழர் முன்னணி இப்பெருவிழாவின் மூலம் பறைசாற்றுகிறது. மேலும், அவருக்குத் தமிழிலேயேதான் வழிபாடு செய்யாது சமஸ்கிருதத்தில் வழிபாடு செய்வது அவரை அவமதிப்பதாகும் எனவும் வீரத்தமிழர் முன்னணி உரத்துச் சொல்கிறது.

4. சமஸ்கிருத அகராதி எனும் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பெற்றபோது அதற்கு எழுந்து நிற்காது அவமதித்த காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த இளைய பீடாதிபதி விஜயேந்திரரையும், அவரது செயலுக்கு நியாயம் கற்பிக்க முயன்ற சங்கர மடத்தையும் வீரத்தமிழர் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதோடு, அச்செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

5. தமிழர்களின் தொன்மக் கலை அடையாளங்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிப்ரவரி 2ஆம் தேதியன்று ஆயிரங்கால் மண்டபத்தில் தீப்பிடித்து எரிந்து கோயிலும், அதனுள்ளே உள்ள கடைகளும் சேதமாகியுள்ளது. அது நடந்தேறியபோது தீயினை அணைக்கப் போராடிக்கொண்டு இருந்த அவ்வேளையில், அங்கு கூடிய இந்து முன்னணியினர், கோயிலின் நிர்வாகத்திலிருந்து அரசு நிர்வாகம் வெளியேற வேண்டும் என முழக்கமிட்டது மிகுந்த உள்நோக்கம் உடையது. மேலும், இதே கருத்தினை பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா சர்மா போன்றவர்களும் கூறியிருப்பதன் மூலம் இவ்விபத்திற்கு பின் இந்துத்துவா சக்திகள் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

6. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சுற்றுச்சுவர், கன்னியாகுமரியிலுள்ள ஆழ்வார் கோயில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 17க்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோயில்களும், அதன் அடையாளங்களும் முற்றிலுமாக அடையாளமற்று அழிக்கப்பட்டிருப்பதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டு மாமன்னன் இராசேந்திரச்சோழன் காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மானம்பாடி என்ற ஊரில் உள்ள நாகநாதசாமி திருக்கோவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடித்து தரைமட்டமாக்கப்பட்டதும் நடந்தேறியுள்ளது. இதற்கான எந்தக் காரணத்தையும் இந்து சமய அறநிலையத்துறையினர் இதுவரை கூறவில்லை. இது திட்டமிட்ட தமிழர் வரலாற்று அழிப்பு கொடுஞ்செயலாகும். இதனை வீரத்தமிழர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், அப்புறப்படுத்தப்பட்ட சிலைகளைக் கொண்டு உடனடியாக நாகநாத சாமி கோயில் உட்பட இடிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் எனவும் தமிழக அரசை வீரத்தமிழர் முன்னணி வலியுறுத்துகிறது.

7. மறம்வீழ்த்தி அறம்காத்த மானத்தமிழ் மறத்தி எங்கள் முப்பாத்தா கண்ணகி பெருமாட்டியின் நினைவாக திகழ்கின்ற தேனி பொட்டிபுர மேற்குத்தொடர்ச்சி மலையில் இயற்கையைச் சீரழிக்கும் பேராபத்து மிக்க நியூட்ரினோ திட்டம் செயல்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கைவிடவேண்டும் எனவும், அம்மலைகளை தமிழர்களின் வரலாற்றை பேசும் கண்ணகிகோட்ட மலையாக அறிவித்து, அந்த இயற்கை சூழலின் கட்டுப்பாட்டை தமிழக அரசு கையில் எடுக்கவேண்டும் எனவும் வீரத்தமிழர் முன்னணி வலியுறுத்துகிறது.

8. தமிழர்களின் ஆதி நிலமான குமரிக்கண்டத்தோடு மிக நெருங்கியத் தொடர்புடைய கன்னியாகுமரியில் அமைந்திருக்கிற தமிழ்மறையோன் திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் படகுப் போக்குவரத்தினை சீர்செய்ய வேண்டும் எனவும், குமரியின் முனையில் அமைந்திருக்கும் ‘குமரி அம்மன்’ கோயிலின் பெயர் ‘பகவதி அம்மன்’ என்று திரிக்கப்பட்டு அழைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வீரத்தமிழர் முன்னணி தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும், தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகனின் சிலையானது உலகெங்கும் பரவி வாழ்கின்ற தமிழர்களின் பேராதரவோடும், பொருளாதாரப் பேருதவியோடும் தமிழர் இறையியல் நகரமான குமரியில் வீரத்தமிழர் முன்னணியால் நிறுவப்படும் என நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப்படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணி பேரறிவிப்பு செய்கிறது.

9. தமிழர்களின் ஆதீநாகரீகமானது குமரிக்கண்டத்தில் இருந்து கபாடபுரத்தின் வழியாக கடந்துவந்த கதையை இன்றும் பெருமையோடு சொல்லிக்கொண்டு இருப்பது ‘திருச்சீரலைவாய்’ எனும் திருமுருகன் கோயிலாகும். இந்தக் கோயிலில் இராஜகோபுரத்தின் முக்கிய நுழைவாயிலானது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இன்றளவும் இருக்கிறது. மேலும், கடந்த காலங்களில் செந்திலாண்டவர் திருக்கோயில் என்று இருந்த நுழைவாயிலின் பெயர் ‘சுப்ரமணியசாமி திருக்கோயில்’ என மாற்றப்பட்டிருக்கிறது. எனவே, கோயிலின் முதன்மை வாயிலின் வழியாக பொதுமக்கள் வழிபட வரும் வகையில் திறக்கப்படவேண்டும் எனவும், வழிபாட்டில் பணம் பறிக்கும் பார்ப்பனீயத் தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வீரத்தமிழர் முன்னணி வலியுறுத்துகிறது.

10. பழங்கால இலக்கிய ஆவணங்கள், தமிழர் வரலாற்று ஆவணங்கள் மற்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அங்குவாட் கோயில்களில் கண்டெடுப்பட்ட முருகன் சிலை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டே தமிழர் இறை முருகனின் திருவுருவப் படத்தை நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி வரைந்து வெளியிட்டது. அதற்கு எதிராக அவதூறு பரப்பிவரும் இந்துத்துவா வெறியர்களின் அநாகரீகமானச் செயலை வீரத்தமிழர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், வீரத்தமிழர் முன்னணி வெளியிட்ட அவ்வுருவப்படத்தையே முருகப்பெரும்பாட்டனின் உருவப்படமாக உலகெங்கும் கொண்டு சென்று நிறுவுவோம்

எனவும் இந்நாளில் வீரத்தமிழர் முன்னணி சூளுரைக்கிறது.

Leave a Response