ஆபாச இணையதளங்களுக்கு எதிரான படம்

கொஞ்சம் சமூகப்பிரச்சனைகள், கவர்ச்சி உள்ள படங்கள் தணிக்கைச் சான்றிதழ் பெற திணறத்தான் செய்கின்றன. அப்படி திணறி வர முடியாமல் போன படம் எக்ஸ் சோன் என்ற பெயரில் சென்சாருக்கு வந்த இந்திப் படம்.

மேல்முறையீடு வரை சென்றும் கடைசி வரை வெளி வர முடியாமலே போய்விட்டது. அதேசமயம், இப்போது எக்ஸ் வீடியோஸ் என்ற படத்திற்கு ஏ சான்றிதழும் சென்சார் போர்டு பெண் உறுப்பினர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருப்பது இந்தித் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் வீடியோஸ் படம் தமிழ் இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது. இயக்குநர் ஹரியின் உதவியாளர் சஜோ சுந்தர் இயக்கியுள்ளார்.

அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

எக்ஸ் சோனுக்கு கிடைக்காத சான்றிதழ் எக்ஸ் வீடியோஸுக்கு கிடைத்தது எப்படி? படத்தின் இயக்குநர் சஜோ சுந்தரைக் கேட்டோம்…

நான் மையப்படுத்தியிருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்துகளை, வெறுமனே உடலைக் காட்டி பணம் பண்ண எடுக்கப்பட்ட படம் அல்ல இது.

படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு வேண்டுமானால் ஆபாசப் படங்கள் கொண்ட தளத்தின் பெயரில் இருக்கலாம்.

ஆனால் குறிப்பாக சொல்லப்போனால் அந்தத் தளத்திற்கே ஆப்பு வைக்க எடுக்கப்பட்ட படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அழகான பெண்களின் உடலமைப்பைக் குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாஃபியாவுக்கு எதிரான படம் இது. இந்த படத்தை சென்சார் போர்டிலுள்ள பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள்.

இன்று அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது என்று பாராட்டினார்கள். எக்ஸ் சோன் என்ன கதையம்சத்தோடு எடுக்கப்பட்ட படம் என்பது எனக்குத் தெரியாது. பண்பாடு, கலாச்சாரத்திற்கு ஏற்ப ஒரு படம் எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு ஏன் தடை வரப்போகிறது?

அதனால் எக்ஸ் சோன் படத்தை எக்ஸ் வீடியோஸ் படத்தோடு ஒப்பிட்டு சென்சாரைக் குறை சொல்ல வேண்டாம்.

நான் தேவைப்படும் இடங்களில் மட்டுமே கிளாமர் வைத்துள்ளேன். அது படம் பார்க்கும் யாருக்கும் தவறாகத் தெரியாது என்று மட்டுமில்லாமல், சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்கள் என்றும் தோன்றும்.

எக்ஸ் வீடியோஸ் விரைவில் இந்தி, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response