தமிழ்நாட்டின் மீது மோடி அரசின் அடுத்த தாக்குதல்
தமிழகத்தின் இரயில்வே திட்டங்களுக்கு மோடி தலைமையிலான அரசு போதுமான நிதியை ஒதுக்காமல் எப்படி எல்லாம் வஞ்சிக்கிறது என்பதை அரசு கொடுத்துள்ள புள்ளி விவரங்கள், நிதி ஒதுக்கீடுகள் மூலமாகவே அம்பலப் படுத்தி உள்ளார், தட்சிண இரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் ( TREU ) செயல் தலைவர் ஆர்.இளங்கோவன்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை புதிய பாதைகள், அகலப் பாதைகள், இரட்டைப் பாதைத் திட்டங்கள் ஆகியவைதான் மிகவும் முக்கியமானவை ஆகும்.
தமிழகத்தில் புதிதாகப் போடப்படும் பாதை திட்டங்களுக்குத் தேவைப்படும் தொகை ரூ.11,000 கோடி. இவ்வாண்டு இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை வெறும் ரூ.49 கோடி மட்டுமே! சென்றாண்டு ஒதுக்கீடு செய்ததை விட இவ்வாண்டு 139 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு, தமிழகத்திற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அகலப் பாதைத் திட்டங்களுக்குத் தேவையான தொகை ரூ.2,500 கோடி. இவ்வாண்டு ஒதுக்கியது வெறும் ரூ.228 கோடி மட்டுமே! சென்ற ஆண்டு ஒதுக்கீடு செய்ததை விட, இவ்வாண்டு 198 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இரட்டைப் பாதைத் திட்டங்களைப் பொறுத்தவரை, தமிழகத்திற்கு மொத்தத் தேவை ரூ.4,500 கோடியாகும். மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கி இருப்பது வெறும் ரூ.300 கோடிதான். இதுவும் சென்ற ஆண்டு ஒதுக்கீட்டை விட 27 கோடி ரூபாய் குறைவு.
மேலே குறிப்பிட்ட மூன்று முக்கியத் திட்டங்களுக்கும், சென்ற ஆண்டு ஒதுக்கியதை விட மொத்தம் 364 கோடி ரூபாய் இவ்வாண்டு குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் இவற்றையெல்லாம் ஒருக்காலும் மறக்கக்கூடாது. உரிய நேரத்தில் சரியான பதிலடி தர வேண்டும்.