பாகமதி – விமர்சனம்

அருந்ததி, பாகுபலி ஆகிய படங்களில் அனுஷ்காவுக்குக் கிடைத்த வரவேற்பே இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

பயமுறுத்துவதற்காகவே பேய்படங்கள் எடுத்தார்கள் அப்புறம் பேய்கள் பழிவாங்கின, அதற்கப்புறம் எல்லாப் பேய்களும் மக்களைச் சிரிக்க வைத்தன.

பாகமதியில் வருகிற பேய் ஒரு தவறான அரசியல்வாதியை மக்களிடம் அடையாளம் காட்டி அவரால் பாதிக்கப்படவிருந்த எட்டு கிராமங்களைக் காப்பாற்றுகிறது.

படம் முழுக்க நிறைந்திருக்கும் அனுஷ்கா, ஐஏஎஸ் அதிகாரியாகவும், ராணி பாகமதியாகவும் மிரட்டியிருக்கிறார். அரசியல் தலைவராக மலையாள நடிகர் ஜெயராம் நடித்திருக்கிறார். அவரே சொல்லும்வரை அவரைப் பற்றித் தெரியாமல் பாதுகாக்க மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் அசோக்.

சிபிஐ அதிகாரியாக வரும் ஆஷாசரத் தோற்றத்திலும் நடிப்பிலும் கவர்கிறார்.

தெலுங்குப் படங்களுக்கே உரிய இரத்தம் தெறிக்கும் கொலைகள் படம் நெடுக இருக்கின்றன.

படத்தில் நடக்கும் பேயாட்டங்கள் அனைத்தும் அனுஷ்காவின் அநீதிக்கெதிரான ஆட்டங்கள் என்று சொல்லியிருப்பது சிறப்பு.

ஒரே பங்களாவுக்குள் பெரும்பகுதிப் படத்தை முடித்துவிட்டார்கள்.

பேய்ப்படங்களில் என்ன மாதிரிக் காட்சிகள் இடம்பெறுமோ அவையனைத்தும் அட்சரம் பிசகாமல் இப்படத்திலும் இடம் பெற்றிருக்கின்றன.
பேய்ப்படம் போலச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அரசியல்வாதிகளில் பாதிக்கப்படுகிற மக்களுக்காகப் பேசும்படம் இது.

Leave a Response