தானா சேர்ந்த கூட்டம் -விமர்சனம்

அக்ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘ஸ்பெஷல் 26′ படத்தின் ரீமேக் தான் இந்த தானா சேர்ந்த கூட்டம்.

ரீமேக் தானே என்று அலட்சியமாக விட்டு விட்டாரா விக்னேஷ் சிவன் என்று தெரியவில்லை. விக்னேஷ் சிவன் , அனிருத் எல்லாருமே நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்று தான் சொல்லனும். சொடக்கு மேல சொடக்கு பாடலை தவிர வேற எதுவும் இருந்த மாதிரி தெரியலை படத்தில். மூச்சுக்கு நூறு முறை தானா சேர்ந்த கூட்டம்னு சூர்யா எதுக்கு படம் முழுக்க சொல்லிட்டு இருக்காருன்னு தெரியலை .

சூர்யா தவிர வேற யாரோட கேரக்டர்லயும் எந்த ஒரு தெளிவும் இல்லை. சிபிஐ அலுவலகத்தில் வேலை செய்யும் தம்பி ராமையா 1980-களில் தன் மகன் சூர்யாவை சிபிஐ அதிகாரியாக்க நினைக்கிறார். இதான் கதை ஆரம்பம் . முழு கதையையும் எண்பதுகளிலேயே சினிமாத்தனமான கதையாக முடித்திருக்கிறார்கள்.

ரம்யாகிருஷ்ணனுக்கு நல்ல வாய்ப்பு. ஆனால் சீரியல் கதாப்பாத்திரமாக தான் பார்க்கமுடிந்தது. கீர்த்தி சுரேஷ்னு ஒரு ரோல் . அவர் கடைசியில் என்ன ஆனார்னு டைரக்டர் மறந்துட்டார் சூர்யா, ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி, ஆர்.ஜே பாலாஜி என எல்லாருடைய நடிப்பும் சிறப்பு தான். ஆனால் கதைக்கு ஒன்றவில்லை.

திறமை இருந்தும் வேலை கிடைக்காத வருத்தத்தில் சூர்யா மனம் நொந்து போக, மறுபுறத்தில் சூர்யாவின் நண்பனான கலையரசனுக்கும் போலீஸாகும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பணம் இல்லாத ஒரே காரணத்தால் போலீசாக வேண்டும் என்ற அவரது கனவு கலைந்து விடுகிறது.

ஊழலை ஊழலால்தான் அழிக்க முடியும் என்ற சிந்தனையோடு சில சித்து வேலைகளைச் செய்து, சிபிஐ அதிகாரிகளை ஆட்டம்காண வைக்கிறார் சூர்யா. ஆனால் இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா என்றால் ஒரு நமுட்டு சிரிப்பு சிரிச்சிட்டு போய்கிட்டே இருக்கனும்.

சூர்யாவின் அரசியல் பன்ச் வசனங்கள் , இரட்டை அர்த்த வசனம், ஆபாச சைகை எல்லாம் கொஞ்சம் முகம் சுளிக்க வைத்தது.

செந்தில் பெட்ரோமேக்ஸ் லைட் காமடியும் கொஞ்சம் சலிப்பு தட்டிவிட்டது.

ஒருத்தன் பணக்காரனா இருக்க ஒரு கோடி பேரை பிச்சைக்காரனா ஆக்குறானுங்க’, ‘நெஞ்சுல நேர்மையும், செய்யுற செயல்ல நியாயமும் இருந்ததுன்னா நாம எதுக்குமே பயப்படத் தேவையில்லை’ போன்ற வசனங்கள் நெஞ்சில் நிற்கின்றன.

சூர்யா தனக்கென ஒரு போலி CBI கும்பலை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை ஏமாற்றுபவர்களையும், அரசாங்க வேலைகளில் இருந்து வேலை செய்யாமல் லஞ்சம் வாங்குபவர்களையும் ஓட விடுகின்றார். அதற்கு உறுதுணையாக ரம்யாகிருஷ்ணன், செந்தில், சத்யன் என ஒரு கூட்டம்.

பழைய தினத்தந்தி, பெல்ஸ் போட்டு ஹீரோ-ஹீரோயின் ஆடும் பாடல்கள், கோல்ட் ஸ்பாட், சில்க் சுமிதா, ரசிகர் மன்ற போஸ்டர்களை வைத்தே அந்தக் காலகட்டத்தைக் காண்பித்திருப்பது சிறப்பு.. கூட்டம் தானாக சேரும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்டுள்ள படம்! ஒரு முறை பார்க்கலாம்.
-ப்ரியா குருநாதன்

Leave a Response