என்ன இருந்தாலும் பஸ்ஸ ஓட்டாம நிறுத்தறது சரியில்ல என்பவர்களுக்காக இந்தக் கட்டுரை

தமிழகத்தில் அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 3-ஆவது நாளாக நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகச் சிலர் பேசிவருகின்றனர்.இதுகுறித்து த.ஜீவலெட்சுமி எழுதியுள்ள பதிவு….

போக்குவரத்துத் தொழிலாளர் ஊதிய ஓய்வூதிய நிலுவை உள்ளிட்டு அவர்கள் கோரிக்கை சார்ந்து வழக்குகள் ஆயிரக்கணக்கில் உயர்நீதின்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றை விசாரிக்க உரிய எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்குக் கூட தமிழக அரசு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்கவில்லை. எழுபது வயதில் ஓய்வூதியம் கிடைக்கப்பெறாமல் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் ஏராளமான ஊழியர்கள் இருக்கிறார்கள். தன் உழைப்பின் பலன் கிடைக்காமலேயே அல்லது கிடைத்ததா என அறியாமலே செத்துப்போன போக்குவரத்து ஊழியர்கள் ஏராளம். அவையெல்லாம் வழக்குகள் அல்ல, காலம் முழுவதும் உழைத்து ஓய்வெடுக்க வேண்டிய காலத்தில் தன்னுடைய பணம் தனக்குக் கிடைக்குமா தான் வாழ்வதெப்படி என கேள்வியோடு அன்றாடங்களை எதிர்கொள்ளும் மனிதர்களின் வலி.

போனஸ்,ஒப்பந்த அடிப்படையிலான ஊதிய உயர்வு,விடுப்பு ஆகிய எதுவும் போக்குவரத்து ஊழியர்களை முறையான காலத்தில் சென்றடைவதில்லை. காரணம் பணம் இல்லை.ஏன் இல்லை? அவர்களின் வைப்புநிதி உள்ளிட்ட சேமிப்புகளை காப்பீட்டில் முதலீடு செய்வதற்குப் பதிலாக இதே துறையில் முதலீடு செய்கிறேன் என கொள்ளையடித்த கடந்த கால ஆட்சியாளர்கள் அதிகாரிகளின் திருட்டு. தமிழகத்தில் ஓடுகிற அரசுப் பேருந்துகள் யாவும் அவுட் ஆப் கண்டிஷன் தான். பெரும் தொகையைக் கணக்கில் காட்டி வாங்கப்பட்ட சொகுசுப் பேருந்துகள் ஒரு மழைக்காலத்தைக் கூடத் தாங்க முடியவில்லையே.கடந்த ஒரு வருடத்தில் சந்தித்த போக்குவரத்து ஊழியர்களில் நீரிழிவுநோய்,இரத்தக் கொதிப்பு இல்லாதவர்கள் மிகச் சொற்பம். நண்பர்களே பாராலிஸ் அட்டாக்கினால் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்படுவோர் போக்குவரத்து ஊழியர்கள் தான். பணிச்சுமை,போதிய ஊதியமின்மை, வாகனங்களின் மோசமான கண்டிசன், ஆட்சியில் இருக்கிற கட்சியின் ஆதிக்கம்,பழிவாங்கல் நடவடிக்கை என தமிழக போக்குவரத்துத் துறைத் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் அனைத்திற்குமான கூடாரமாக இருக்கிறது.

தொழிலாளர்கள் வழக்கு பற்றிய செய்தி, அவர்களின் கோரிக்கை பற்றிய செய்தி,பேச்சுவார்த்தை என எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத நாம் தான் வேலைநிறுத்தம் என்றதும் பொதுநலவாதிகள் ஆகி குதிக்கிறோம்.

வேலைநிறுத்தம் செய்யாமல் அவர்கள் குடும்பத்தோடு பிச்சையெடுக்க வேண்டும் என விரும்புகிறோமா தெரியவில்லை. ஏனென்றால் அவ்வளவு போராட்டங்களை அவர்கள் எவ்விதப் பணிப்பாதுகாப்பும் இன்றி அன்றாடம் சந்தித்தும் நடத்தியும் வருகிறார்கள்.உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர் வழக்கு விசாரணைக்கு வரும் போது தமிழக அரசின் நிதித்துறைச் செயலர் சார்பாக பதிலளிக்கையில் டீசல் போடுவதற்கு நானூறு கோடி ஒதுக்கப்பட்டது தவிர இந்த ஆண்டு பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றனர். போக்குவரத்து துறை நிர்வாக இயக்குநர்கள் தங்களிடம் பணம் இல்லை சோர்ஸ் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றனர். இன்றைக்கு ஊழியர்களை எச்சரிக்கிற பணிநீக்கம் குறித்து மிரட்டுகிற தீர்ப்பன்கள் நீதிமான்கள் பல முறை உத்தரவிட்டும் நீதிமன்ற உத்திரவை செயல்படுத்தாத ஒரு அதிகாரியைக் கூட ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை. இவர்களின் சோ கால்டு பொதுநலனின் பேரில் ஏன் போக்குவரத்துத் துறை அமைச்சரை அழைத்து எச்சரிக்கவில்லை. எல்லாம் ஆளும் வர்க்கப் பாசமே. இங்கே நீதியைப் பெற வீதியில் இறங்குவது தவிர ஊழியர்களுக்கு வேறு வழியென்ன இருக்கிறது மக்களே?

இந்தச் சமூகத்தின் அன்றாட இயக்கத்தின் அச்சாணியாக இருக்கும் தொழிலாளிக்கு உரிய ஊதியத்தை பணிப்பாதுகாப்பை வழங்க வேண்டியது சமூகத்தின் தலையாய கடமை. பென்சன் இரத்து உள்ளிட்ட சமூகப்பாதுகாப்புத் திட்டங்களின் இரத்து நடவடிக்கையால் கைவிடப்படுகிற ஆதரவற்ற முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை நம்மைச் சுற்றியுள்ள சூழலை கூர்நோக்கினால் உணர முடியும்.

இப்படி தொழிலாளியை வஞ்சிக்கும் சமூகம் சிவில் சமூகம் என சொல்லிக் கொள்ளும் தகுதியை இழக்கிறது. நியாயமாக அவர்களுக்கு ஆதரவாக நாமும் களத்தில் போராட வேண்டும். அதை விடுத்து அவர்களைக் குறைபேசுவது ஆட்சியாளர்களின் திருட்டுக்கு நாம் துணை போவதாகவே அமையும்.

Leave a Response