ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்குக் காரணமாகவும் முதலில் ஓபிஎஸ்ஸையும் இப்போது எடப்பாடிபழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை பாஜக மேலிடத்தின் துணையோடு ஆட்டிப்படைப்பது துகளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்திதான் என்பது பலரும் சொல்லும் குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரமாக அண்மையில் நடந்த ட்விட்டர் சண்டை அமைந்திருக்கிறது.
ஆர்கேநகர் தேர்தல் முடிவைத் தொடர்ந்து ஈபிஎஸ் அணியின் கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்களை நீக்க முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ட்விட்டரில்,
“காலம் கடந்து தினகரன் ஆதரவாளர்களை நீக்குவதால், எடப்பாடி – ஓபிஎஸ் ஆண்மை இல்லாதவர்கள் (Impotent)” என்று ஆர்எஸ்எஸ் பிரமுகரும், பாஜக பினாமி எடப்பாடி அரசின் எஜமானர் என்று கருதப்படுபவரும், சுப்பிரமணிய சுவாமியால் ‘மைலாப்பூர் லாபி’ என அழைக்கப்பட்டவருமான துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக IT Wing தலைவர் பிரசாத், ஆடிட்டர் குருமூர்த்தியை முட்டாள் (Idiot) என்று சொல்லி “அதிமுகவின் இந்த நிலைக்கு ஆடிட்டர் குருமூர்த்தி தான் காரணம்” என்றும், அதிமுக உள்விவகாரங்களில் தலையீட்டால் அதிமுக அமைச்சர்களுடன் ஆடிட்டர் குருமூர்த்தி பேசிய வீடியோக்களை வெளியிடுவோம்” என்றும் மிரட்டியுள்ளார்.
இந்திய அரசின் அதிகாரம் மிக்க இடத்தில் இருப்பவராகவும், தமிழக அரசைப் பின்னாலிருந்து நடத்தும் எஜமானராகவும் கருதப்படும் ஆடிட்டர் குருமூர்த்தியை – அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் எதிர்ப்பது மாபெரும் துணிச்சல் தான்!