பா.ஜ.க. தமிழகத்தில் விலை போகாத சரக்கு என்பதால், பெரியார் பிறந்த மண்ணில் காலூன்றும் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நோட்டாவைவிடக் குறைந்த வாக்குகளையே பெற்று தேசிய அவமானத்தைச் சுமந்து பவனி வருகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் (டிசம்பர் 25,2017) இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:
சுயேச்சை வேட்பாளராக நின்று வென்றுள்ளார், ஆளும் அ.தி.மு.க.வினரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் அவர்கள். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில், குறிப்பாக ஆளும் அ.தி.மு.க.வையும், பா.ஜ.க.வையும், தி.மு.க.வையும் தோற்கடித்துள்ளார் என்பது செய்தியாக உலாவரும் இந்நேரத்தில்,
அத்தேர்தல் நடைபெற்ற முறை, இரண்டாம் முறையாக ஒத்தி வைத்த அந்த இடைத்தேர்தலில் எந்தக் குற்றத்திற்காக – எதற்காக அந்த இடைத்தேர்தல் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டதோ அந்த 89 கோடி ரூபாயை அத்தொகுதியில் தற்போது தமிழக அமைச்சர்களாக உள்ளவர்கள் விநியோகம் செய்தார்கள் என்பதை வருமான வரித்துறை வெளியிட்டதோ, அதற்கான வழக்கு விசாரணை அதே முறை மீண்டும் திரும்பாத நிலையை ஏற்படுத்திவிட்டு, இரண்டாம் முறை தேர்தல் நடைபெற அறிவிக்கப்பட்டது.
இம்முறை நடந்த தேர்தலில், ஆளும் இரண்டு கோஷ்டிகள் மத்தியில் உள்ள மோடி அரசின் மறைமுக முயற்சியில் அவசர அவசரமாக இணைக்கப்பட்டு, முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம் அவர்களுக்கு (அ.தி.மு.க. அணிக்கு) அவசரமான விசாரணையில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
ஆனால், இம்முறை முந்தைய தேர்தல் நடவடிக்கைகளையும் தாண்டி, பணச் சுனாமியே அத்தொகுதியில் சுழன்று அடித்துள்ளது.
வாக்காளர்களுக்கு ஆளும் தரப்பினராலும், அவர்களை எதிர்த்த சுயேச்சையாலும் ஏராளமாக சுமார் ரூ.6,000, ரூ.4000 என்றும் மற்றும் பல நவீன யுத்திகளுடனும் பணம் விநியோகிக்கப்பட்டது என்று புகார்கள் பகிரங்கமாக பரஸ்பரம் கூறப்பட்டதுடன், சில இடங்களில் கையும் களவுமாகப் பண விநியோகம் நடந்தபோது பிடிபட்ட செய்திகளும் வந்தன.
இரட்டை இலை என்றால் ஏதோ வெற்றிச் சின்னம் என்ற மாயை, அக்கட்சியின் விலக்கப்பட்ட உறுப்பினரின் வெற்றியின்மூலம் அகற்றப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாகச் சுட்டிக்காட்டப்படவேண்டியது, அத்தொகுதி மக்கள் ஆளுங்கட்சிகளுக்கு தங்கள் கோபத்தை, வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளதை யாரும் மூடி மறைத்துவிட முடியாது.
மாநில உரிமைகளை டில்லியிடம் அடகு வைத்து மண்டியிட்டு, டில்லி சரணம் பாடும் ஆளும் அ.தி.மு.க. அரசுமீதும் – அவ்வரசையும், அக்கட்சியையும் பொம்மலாட்டத்து பொம்மைகளாக்கிடும் மத்திய பா.ஜ.க., மோடிமீதும் தங்கள் தீராக் கோபத்தைக் காட்டியுள்ளனர்.
பணத்திற்காகவே ஓட்டு என்றால் – அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கவேண்டுமே!
வெறும் பணத்திற்காக மட்டுமே ஓட்டு என்றால், அதிகம் வாரி இறைத்ததாகச் சொல்லப்பட்ட ஆளும் அ.தி.மு.க.தானே வெற்றி பெற்றிருக்கவேண்டும். முடிவு அப்படி அமையவில்லை என்பதால், தமிழகத்தில் அவர்களது ஆட்சி தொடர இனியும் எவ்வித தார்மீக உரிமையும், ஜனநாயக உரிமைப்படி கிடையாது. இது வெறும் அ.தி.மு.க. உட்கட்சிப் பிரச்சினையல்ல; ஏற்கெனவே தற்போதுள்ள மாநில அரசு, பெரும்பான்மையை இழந்துள்ளதோடு, மக்களின் ஆதரவினையும் இழந்த ஒன்றாகும்.
தாங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய (நீட்) இரண்டு மசோதாக்கள் மத்திய அரசிடம் அப்படியே ஓராண்டாக கிடப்பில் உள்ளதுபற்றி கேட்டு வாதாடும் உரிமையைப்பற்றி பேச முடியாத, சரணாகதி அரசாகவே இருப்பது தமிழக வரலாற்றில் முன்னெப்பொழுதும் காணாத ஒன்று நம் மாநிலத்தில்!
பா.ஜ.க. தமிழகத்தில் விலை போகாத சரக்கு என்பதால், பெரியார் பிறந்த மண்ணில் காலூன்றும் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நோட்டாவைவிடக் குறைந்த வாக்குகளையே பெற்று தேசியப் பெருமையை சுமந்து பவனி வருகிறது!
ஆர்.கே.நகர் தொகுதி ஏற்கெனவே அ.தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதி. தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதி அல்ல. எனவே, அதற்குப் புதிய இழப்பு ஏதும் ஏற்படவில்லை. பண நாயகச் சூழ்நிலையில்!
கொள்கையை முன்னிறுத்தி, பண விநியோகம் செய்யாமல் தேர்தலை சந்தித்து தோல்வியுற்றாலும் அந்தத் தோல்வி – மரியாதையை இழக்கும் தோல்வியாகாது என்ற தி.மு.க.வின் நிலைப்பாட்டை ஜனநாயகவாதிகள் வரவேற்கவே செய்வர்.
என்றாலும், அடிமட்டத்தில் ஒவ்வொரு தொகுதி நிலவரத்தையும் ஆழமாகப் பரிசீலித்து, யதார்த்தத்தை உணரவேண்டிய கடமையும், திட்டமிட்ட செயலாற்றும்பொறுப்பும் தி.மு.க.வை வருங்காலத்தில் நிச்சயம் பலப்படுத்தும்.
தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் அதன் கடமையைச் செய்யாததால், இந்த பணச் சுனாமியால் காணாமற்போனவை தேர்தல் ஆணையமும், மத்திய அரசும்தான்.ஜனநாயகப் பறிமுதல் தொடரக்கூடாது! இதைத்தான் நாட்டோர் இத்தேர்தல் முடிவுகள்மூலம் உணரவேண்டும்! இந்த ஜனநாயகப் பறிமுதல் தொடரக்கூடாது! என்பதே அனைவரின் விருப்பமாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் கி.வீரமணி.