குஜராத் தேர்தலில் “வென்றது” மோடியா? ராகுலா?
ஆம். வெற்றி ராகுலுக்குத்தானே. வாக்கு வங்கி அரசியலில் ஒரு அரசியல் ஆய்வாளன் பார்க்க வேண்டிய தரவுகளை நேர்மையாகப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியும்.
1)பா ஜ க வின் அசுரப்பிடியில் 22 ஆண்டுகளாக இருக்கும் மாநிலத்தில் அது பெற்றிருக்கும் ஆக குறைவான 99 இடம் என்பது இதுவே முதல் முறை. 1995ல் 117 இடங்களுடன் துவங்கியது அதன் சித்து விளையாட்டு. சென்ற தேர்தலில் 115 ( 2012).
2)மோடி&ஷா கூட்டணி குஜராத் தேர்தலுக்காக ‘ கொட்டிய பணம்’ பழைய கதை. காங் வார்டு செயலாளர் கூட பல லட்சங்கள் விலை போயினர்.
3)ஹர்திக் பட்டேல், அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி ஆகியோரின் இளம் கூட்டணியை முறியடிக்க ஷா நிகழ்த்திய உள்ளடி சாதி அரசியல் பெருங்கதை. அதை முறியடித்த அவர்களது பெரும் வாக்கு வித்தியாசத்திலான ‘ வெற்றி’ , குறிப்பாக ஜிக்னேஷ் ன் 20000 வாக்கு வித்தியாச ‘ வெற்றி’பா ஜ க வின் படுதோல்வி.
4) அடுத்த தோல்விக்குறி வாக்கு சதவீதம்.பா ஜ க ‘ நிலை நிறுத்தப்பட்டு’ (contained and sealed ) 49% பெற, காங் கூட்டணி 39% இருந்து 45.5% வளர்ந்து இருக்கிறது. அதாவது 6% வாக்குகளுக்கு மேல் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. ஆனாலும் பா ஜ க வெற்றி எப்படி?
இந்தக் கேள்வி முக்கியமானது . அரசியல் ஆய்வாளர்களின் அரிச்சுவடியில் electoral swing உருவாக்க 5 முதல் 6 சதவீதம் போதும் . இயல்பாக அப்படித்தான் நடக்கும். ஆனால் இங்கு அது தடுக்கப்பட்டதில்தான் மாஃபியா வேலையின் பணபலம், மிரட்டல் இன்னபிற. நான் ஈ வி எம் ஐ குற்றம் சொல்வதில்லை.
வெறும் பணமும், மிரட்டலும் இதை சாதித்து விடுமா? இல்லை. இதில்தான் ‘குஜராத் கொள்ளையரான ‘அகமதாபாத் ,சூரத், வதோதரா முதலாளிகளுக்காக ஜிஎஸ்டி யில் உச்ச சதவீதம் 28% ல் இருந்த பெரும்பான்மையாக அவர்களை பாதிக்கும் பொருட்கள் கீழாக தள்ளப்பட்டு 5% வரை ,தேர்தல் அறிவிப்பை தள்ளி வைத்து , அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டது. இதை முறையாக ஆராய்ந்தால் ஒரு ‘ஸகேமே ‘ சிக்கும்.
இந்த ஜாலத்தால்தான் நகர்புற தொகுதிகளில் வாக்கையும், வெற்றியையும் தக்க வைத்துக் கொண்டது பா ஜ க.
5) குஜராத் வெற்றி பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றின் பாதிப்பு இல்லவே இல்லை என்பதற்கான அடையாளம் என்று முழங்குகிறார்கள் பா ஜ க வினரும், அவர்களது கூட்டாளிகளான ‘ஊடக அறம் தம் உயிரெனக் கருதும் ‘ஊடகவியாலாளரும்.
ஆனால் உண்மை சுடரும் நெறுப்பாய் அவர்கள் முன்னால். காங்கிரஸுக்கு ஆதரவாய் பெயர்ந்திருக்கும் அந்த 6% பேர்தான் மோடி நடவடிக்கையால் பாதிப்பிற்குள்ளான கிராமப்புற மற்றும் முறை சாரா தொழிற் தொகுதியினர். இதை மறுக்கட்டும் அந்தக் கூட்டம். உங்கள் தேர்தல் கையூட்டுப் பணத்தால் ஈடு செய்ய முடியாத “ இழப்பைச்” சந்தித்தவர்கள். அதனால்தான் இத்தனை தடைகளை மீறி எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள்.
குஜராத் போன்ற ஒரு மாநிலத்தை , ஏற்கனவே சிறுபான்மை இஸ்லாமியருக்கெதிரான கொடுரங்களை ‘ஈர மனமின்றி ‘ கடந்து வாழப் பழகிய இந்துத்துவ முதலாளியர் கூட்டத்தையும், மத, சாதி நோய்மை கொண்ட கூட்டத்தினரையும் ‘ தக்க வைப்பதில்’ வெற்றி பெற்றிருக்கலாம் மோடியும் , அந்தக் கூட்டமும், ஆனால் இந்திய ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளும் குஜராத் அல்ல .
2019ல் குஜராத் மாடல் தேர்தல் பிரச்சார முறை மற்றும் இன்னபிற ஜாலங்களோடு வாருங்கள் மோடி, காத்திருக்கிறது உங்களுக்கான “தோல்விப் பரிசு”. இங்கு ஆறு சதவீதமல்ல வேறு சதவீதம்.
ராகுலுக்கு குஜராத் தோல்வியல்ல வெற்றிப் பயணத்தின் முதல் எட்டு. 2019ல் ராகுல் பிரதமராவதை உங்களால் தடுக்க முடியாது சங்கிகளே.
சங்கிகளே அரசியலறிந்த நாள்முதல் வாழ்நாள் முழுதும் காங்கிரஸ் மீதான விமர்சனத்தோடு மட்டுமே அரசியல் பேசிய என் போன்ற எண்ணற்றோரை காங்கிரஸ் ஆதரவு சக்திகளாக ‘பேச’ செய்தது உங்களது ‘இந்துத்துவா’ மட்டுமே.
ராகுல் உங்கள் வெற்றிப்பயணம் தொடரட்டும். – சுபகுணராஜன்