சீமான் அவர்களுக்கு நன்றி – பாடலாசிரியர் தாமரை தன்வரலாற்றுப் பதிவு

தமிழ்த்திரையுலகில் புகழ்பெற்றிருக்கும் பாடலாசிரியர் தாமரை, திரையுலகுக்கு வந்து இன்றோடு இருபதாண்டுகள் நிறைவு பெறுகின்றன.அதையொட்டி அவர் எழுதியிருக்கும் பதிவு…

16.12.17. இருபதாண்டுப் பாடல் பணி.
Twenty and Counting !.

இந்த ஆண்டு தொடங்கி பல மாதங்களாகவே இந்த செய்தியைப் பதிவு செய்துவிட வேண்டும் என்று முயன்றேன். அடுத்தடுத்துத் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. இன்றைக்கு எப்படியாவது ஒருவரி செய்தியாவது தெரிவித்து விடவேண்டும் என்று இந்தப் பாதிராத்திரியில் எழுதுகிறேன்.

ஆம், நான் பாடல் எழுத வந்து இந்த ஆண்டோடு 20 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன 😊. இந்த செய்தியை நேயர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
1997 இல் இயக்குநர் சீமானின் ‘இனியவளே’ திரைப்படத்தில் ‘தென்றல் எந்தன் நடையைக் கேட்டது தத்தோம் தகதோம்’ என்ற பாடலோடு என் திரைப்படப் பாடல் பணி தொடங்கியது. இசை திரு தேவா அவர்கள். சீமான் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தது அவருடைய உதவி இயக்குநர் திரு மோகன் அவர்கள்.

பாடல் பதிவு செய்யப்பட்டாலும் படம் வெளிவந்தது 1998 இல்.

1997 தொடங்கி 2017 வரை இடைவெளியில்லாத இருபதாண்டுகள்.
இதையே என் வாழ்வாதாரமான பணியாக்கிக் கொண்டேன். அதற்கு முன் ஏழாண்டுகள் பார்த்த பொறியாளர் பணியிலிருந்து முழுவதுமாக விலகிக் கொண்டேன். தமிழ்ப்பற்று, திரைப்படப் பாடல்கள் மேலான ஈர்ப்பு, எழுத்தார்வம், இலக்கிய நாட்டம் ஆகியவற்றைக் காரணமாகச் சொல்லலாம்.

அறியா வயதில் ( 6-7 ) வானொலியில் கேட்ட திரைப்படப் பாடல்கள், ” நானும் இதுபோல் ஒருநாள் எழுத வேண்டும் ” என்று மனதிற்குள்ளேயே தீர்மானம் கொள்ள வைத்திருந்தது. உறைபனி என்றால் அதுதான் !. உருகி, பின்னாட்களில் என்னை விரட்டி விரட்டி ஓட வைத்திருக்கிறது.

1994,95 களில் சென்னை வந்து முதல்முறை வாய்ப்புக்காக முயன்ற போது எண்ணம் ஈடேறவில்லை. கோவைக்குத் திரும்பிச் சென்று விட்டேன். கதை, கவிதை, கட்டுரைகளில் ஆர்வம் காட்டினேன். நிறைய பரிசுகள் பெற்றேன். அவை மேலும் எனக்கு நம்பிக்கையூட்ட மீண்டும் 97இல் முயன்றேன். வென்றேன்.

திரைப்படப் பாடல்கள் எழுதும் முதல் தொழில்முறைப் பெண்பாடலாசிரியர் இந்தியாவிலேயே நான்தான் என்று சொல்கிறார்கள். எனக்கு முன் எழுதிய பெண்கள் வேறு துறைகளில் இருந்து கொண்டு எழுதியதால் இந்தப் பெருமை எனக்கு !.

இதுவரை தோராயமாக 500 பாடல்கள் எழுதியிருக்கக் கூடும். தனிப்பாடல்கள், தொலைக்காட்சிப் பாடல்கள், மொழிமாற்றப் பாடல்கள், வெளிவந்தவை, வராதவை என அனைத்தும் சேர்த்துதான் !. எல்லாவற்றையும் சேமித்திருக்கிறேன், ஆனால் தொகுத்து ஆவணப் படுத்தவில்லை. இந்த இருபதாண்டு முத்திரையை ஒட்டி அந்தப் பணி மெதுவாகத் தொடங்கியிருக்கிறது. நண்பர்கள், தீவிர ரசிகர்கள் சிலர் தாங்களாகவே இதைச் செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

குறிப்பாகச் சொல்ல வேண்டியது, பாடல் எழுத வருமுன்பே, ஆபாசமாக எழுதுவதில்லை, ஆங்கிலம் கலந்து எழுதுவதில்லை என்ற உறுதியோடுதான் வந்தேன். இன்று வரை அதில் உறுதியாக இருக்கிறேன். அதனால், பலப்பல பாடல்களை இழந்திருக்கலாம். ஆனால் எழுதிய வரை தரமான பாடல்களாக இருக்கின்றன.

திரைப்பாடல்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் என் பாடல்கள் சமூகத்தைக் கெடுப்பதாக இருந்து விடக் கூடாது என்கிற தனிப்பட்ட பொறுப்புணர்வுதான் காரணம் !.

இந்த இருபதாண்டுகளைச் சாதாரணப் போராட்டமாகக் கருத முடியாது. ஓட்டம், ஓட்டம், ஓட்டம்தான்.. வாய்ப்புத் தேடுவது, கிடைத்ததில் எழுதுவது, எழுதுவதில் வெற்றி பெறுவது, வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது, கொள்கைகளில் உறுதியாக இருப்பது என எதுவுமே எளிதானது இல்லை.

நெருங்கிய நண்பர்கள் கிடையாது, நட்புப் பேண நேரமிராது, பொழுதுபோக்குகள் கிடையாது, போக்கப் பொழுது இராது, தனிமை, அமைதி தேவைப்படும், தனக்கான தன் நேரம் என்று எதுவுமே கிடைக்காது, தொடர்ந்து அறிவைப் புதுப்பித்துக் கொள்தல், ஊரோடு உறவினரோடு கூடியிருக்க முடியாது என இது வேறு ஓர் உலகில் வேறு ஓர் உயிரினமாகத்தான் வாழ வேண்டியிருந்தது ..

இப்போது நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது, நான்தானா என்று ! 😮.
அறிந்து கொண்ட பெரிய தத்துவம் :
‘ ஒன்றை அடைய வேண்டுமென்றால் ஒன்றை இழக்க வேண்டும், எல்லாமே குறைவின்றி வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது’.

தனித்துவமான இந்தத் துறையில் பணியாற்ற முதன்மையான தேவை ஆதரவான வீடு. வீட்டுச் சுமைகள் இல்லாதிருந்தால் சிறப்பாகப் பணியாற்றலாம். எனக்கு அது கிடைக்கவில்லை. அனைத்து சுமைகளும் என் தோளில். பொருள் ஈட்டுவதிலிருந்து, குழந்தை வளர்ப்பது, வீட்டின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வது வரை எதிலும் ஆசுவாசமற்ற ஓயாத உழைப்பு !. அதிகம் எழுத முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். இருபதாண்டுகளாக நான் பட்ட துயரங்களை, அடைந்த மன அழுத்தங்களை, தனியாக வேறொரு புத்தகமாகத்தான் எழுத வேண்டும்.

பிரபல இயக்குநர்கள் இசையமைப்பாளர்கள் முதல் புதியவர்கள் வரை அனைவரிடமும் பணியாற்றுகிறேன். மிகுந்த மரியாதையோடு நடத்தப் படுகிறேன். திரைத்துறையில் எனக்கு எந்த நெருக்கடியும் கிடையாது. அதிகம் விரும்பப்படும் பாடலாசிரியராக இருக்கிறேன். அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகள் எழுதி விட்டால் வெள்ளி விழா கொண்டாடி விடலாம் 😊.

முதல் படத்தில் சம்பளம் கிடையாது. இரண்டாவது படமான ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ இல் பெற்ற 3000/- தான் என் முதல் சம்பளம் !. முதல் பாடல் வெளிவரும் முன்பே இயக்குனர் விக்ரமன் தன் படத்தில் ‘மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா’ என்ற பாடலை எழுத வாய்ப்புத் தந்தார். இதுவே என் இரண்டாவது பாடல்.

திருப்புமுனைப் பாடலான வசீகரா 2000வது ஆண்டில் எழுதினேன். அதன்பிறகு இயக்குநர் கௌதம் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரோடு இன்றுவரை பணியாற்றுகிறேன்.

இருபதாண்டுகள் பணி, பாடல் பங்களிப்பை ஒட்டி பிபிசி தொலைக் காட்சியில் ஆவணப்படம் ஒன்று எடுக்க இருக்கிறார்கள்.
என் தந்தையார் இல்லை என்பது பெரும் துயரத்தைத் தருகிறது. இருந்திருந்தால் இந்த 20 ஆண்டுகளை எப்படிப் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றிருப்பார் என்று நினைத்துப் பார்க்கிறேன். தமிழ் ஆசிரியரான என் தாயாருக்குப் பெருமை சேர்த்திருப்பதாக நம்புகிறேன். நான் செய்யும் தனித்துவமான பணி பற்றி சமரன் உணர ஆரம்பித்திருக்கிறான்.

இனியும் என் பணி சிறப்பாகத் தொடரும். என்னைத் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்திய இயக்குநர் சீமான் அவர்களுக்கும் இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி ! 🙏…..

பி கு : அரிய இந்தப் புகைப்படம் முதல் பாடல் பதிவின் போது ஏவிஎம் ஒலிக் கூடத்தில் எடுக்கப்பட்டது.

Leave a Response