தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே – மாவீரர்நாள் இன்று

மாவீரர்நாள் நவம்பர் 27

அந்தப் பாடல் மணியோசையுடன் ஆரம்பமாகும்.

“தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்று பாடல் ஒலிக்க ஆரம்பித்த சில வினாடிகளிலேயே கண்கள் நிறைந்து கண்ணீர் பெருகத் தொடங்கிவிடும். ‘அந்த உணர்வை வார்த்தைகளால் விபரிக்க முடியாது’ என்று எழுதுவது மிகையுணர்ச்சி அற்ற சத்தியமான வாசகம். உடல் கண்ணீரின் கடலாகவும், நெருப்புக் கொப்பறையாகவும் தனக்குள் பொருதத் தொடங்கிவிடும். இந்த அற்ப லௌகீகமான உலகத்தின் மீது கடும் கசப்பும் சுயவெறுப்பும் கொதித்தெழும் கணங்களும் அவைதாம்!

மெழுகுவர்த்திகளைக் கைகளில் ஏந்தி கண்ணீர் பெருக்கி நிற்கிறோம். ஏற்றப்பட்ட ஈகை தீபங்களை காற்று அசைக்கிறது. கல்லறைகள் மீதில் விழுந்து கதறுகிற உறவுகள். தொட்டு வணங்குகிற குழந்தைகள். மலர்கள். சரண மாறுதல்களின்போது உண்டாகும் மௌன இடைவெளிகளில், மெல்லிய இருமல் சத்தங்கூட பேரோசையாய் ஒலிக்கும். அதுவொரு கூட்டுத் துக்கம்.

இழக்கப்பட்ட நிலத்தின் மீது பாயும் கண்ணீராறு.
உங்களைப் பெற்றவர் உங்கள் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம்- அன்று
செங்களம் மீதினில் உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருமுகம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

என்ற வரிகளைக் கேட்கும் ஒவ்வொரு தடவையும் எனதிந்த வாழ்வை நொந்திருக்கிறேன். எதிலாவது மோதிக்கொண்டு செத்துப்போக வேண்டும்போல தோன்றியிருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளாக, எத்தனையோ தடவைகள் இந்தப் பாடலைக் கேட்டுவிட்டேன். காலம் அந்த உன்மத்தத்தை மாற்றவோ ஆற்றவோ இல்லை.

மாவீரர்களுக்கான இந்தப் பாடலை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களும் முள்ளிவாய்க்கால் பேரூழியை அடுத்து இலங்கை இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டார். இன்றுவரை அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விபரங்கூடத் தெரியாது. ஆனால், இந்தப் பாடலில் அவர் உயிரோடு இருக்கிறார். என்றென்றும் இருப்பார்.

-தமிழ்நதி

Leave a Response