தமிழறிஞர் மா.நன்னன் மறைவையொட்டி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை….
மூத்த தமிழறிஞர் – முனைவர் மா.நன்னன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி இடிதாக்குவது போலவும், காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலவும் தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்துகிறது. தமிழ் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட திரு. நன்னன் அவர்கள் தனது 94 வயதில் மறைந்திருக்கிறார்.
இன்னும் பல்லாண்டுகள் அவர் நம்மோடு வாழ்ந்து, தமிழ் வளர்ச்சிக்கு மென்மேலும் தொண்டாற்றும் வாய்ப்பை இயற்கை பறித்துவிட்டதே என்ற துயரம் ஏற்படுகிறது. அந்தளவுக்கு, அவர் காலத்திற்கேற்ற வகையில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் துணைநின்று, எளிய மக்களும் இனிய தமிழைப் பயின்று, பிழையின்றிப் பயன்படுத்த ஊக்கப்படுத்தியவர்.
சிறப்பான பல இலக்கிய நூல்களைப் படைத்தளித்த முனைவர் மா.நன்னன் அவர்கள் தொலைக்காட்சி, கணினி என காலத்திற்கேற்ற ஊடகங்கள் வாயிலாக, தமிழ் மக்கள் அனைவரும் செம்மொழிச் சிறப்பு சிதையாவண்ணம் தாய்மொழியைப் பயன்படுத்தப் பழக்கப்படுத்தியவர்.
மாணவர்களுக்குப் பாடம் எடுப்பதுபோல மக்கள் அனைவருக்கும் தொலைக்காட்சி வாயிலாகத் தமிழ்ப் பாடம் எடுத்து, எழுத்தறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதியமுறையை உருவாக்கியவர். மேலும், திரு. நன்னன் அவர்கள் பாடத்திட்டக்குழு, பாடநூற்குழு, பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு ஆகியவற்றில் இடம்பெற்றதுடன், தமிழ் வளர்ச்சி இயக்குநராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக்த்தில் பயின்ற காலத்தில், பக்தி இலக்கியங்களைக் பழுதறக் கற்றிருந்தபோதிலும், பகுத்தறிவு இயக்கத்தின்பால் ஈர்ப்பு கொண்டு, தமிழ்மொழி மீது ஏற்பட்ட காதலாலும், திராவிட இயக்கத்தின் மீதான பற்றின் காரணத்தாலும், திருஞானசம்பந்தன் என்ற தனது பெயரை நன்னன் என மாற்றிக் கொண்டவர். வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு மிக்க தமிழறிஞராக, திராவிட இயக்க செயற்பாட்டாளராக, மேடைகளில் தி.மு.க. கரைவேட்டியுடன் பங்கேற்கக்கூடிய கொள்கைப் பற்றாளராகத் திகழ்ந்தவர் நன்னன் அவர்கள்.
தலைவர் கலைஞர் அவர்களை என்றும் மதிக்கும் தொண்டராக, அன்புக்குரிய நண்பராக, மொழிகாக்கும் உரிமைப்போரில் உற்ற தோழனாகத் திகழ்ந்தவர். கழகத்தால் உருவாக்கப்பட்ட திராவிட மறுமலர்ச்சி மாமன்றத்தின் பொறுப்பினை திரு. நன்னன் அவர்களிடம் தலைவர் கலைஞர் வழங்கினார். திராவிட இயக்கக் கொள்கைகளையும், தமிழ்மொழியின் சிறப்பையும் கழகத்தின் இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் பொறுப்பினையும் அவரிடம் தலைவர் கலைஞர் வழங்கினார்.
இளைஞரணி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, அதன் தொடர்ச்சியான பயணங்களில் எல்லாம் பலமுறை திரு. நன்னன் அவர்கள் கொள்கை வகுப்பெடுத்து, தமிழ் உணர்வு ஊட்டியது இன்றும் என் நெஞ்சில் பசுமையாக நினைவில் உள்ளது. அவர் ஊட்டிய உணர்வு இளைஞரணியின் விரைவான பயணத்திற்குத் துணை நின்றது.
தலைவர் கலைஞர் தலைமையிலான கழக ஆட்சியில் திரு. நன்னன் அவர்களுக்கு தந்தை பெரியார் விருது, திரு.வி.க. விருது உள்ளிட்ட பல உயர் விருதுகள் வழங்கப்பட்டன. அண்மையில் நன்னன் அவர்களை அவரது இல்லம் சென்று சந்தித்து, முரசொலி பவளவிழா மலரை வழங்கினேன். அந்த இனிய நினைவுகள் இன்னும் இதயத்தை விட்டு அகலாத நிலையில், அவர் இந்த உலகை விட்டு மறைந்து விட்டார் என்ற செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
முனைவர் நன்னன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழ்ச் சான்றோர்களுக்கும், கழக முன்னோடிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் மீது கொண்ட பற்றும், பிடிப்பும் மாறாமல், தமிழ்மொழி சிறக்கவும் திராவிடக் கொள்கைகள் நிலைக்கவும் பணியாற்றிய திரு. நன்னன் அவர்களின் இழப்பு இனத்திற்கும் இயக்கத்திற்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு. அந்த இழப்பினை ஈடுசெய்யும் வகையில், அவர் வழியில் நடைபோடுவதே நாம் அவருக்கு செலுத்தும் சீரிய அஞ்சலியாக அமையும்.