கேளுங்கள் தமிழர்களே, கேப்பையில் நெய் வடிகிறது


கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இயங்கி வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆய்வக அறிவியல் விஞ்ஞானி பி. சுந்தரராஜன் நேற்று (அக். 12) பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் “அணுசக்தியும் சுற்றுச்சூழலும்” எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசும்போது சொன்ன கதை இது (தினமணி, அக். 13, 2017, நெல்லை பதிப்பு, பக்.6)

கடந்த “2004ஆம் ஆண்டு தொடங்கி 2013 வரையில் தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 1,200 மாதிரிகள் (ஜனவரி முதல் டிசம்பர் வரை) சேகரிக்கப்பட்டன. கூடங்குளம் அணு உலை வளாகம், அதன் சுற்றுப்பகுதி கிராமங்கள் என 4 திசைகளிலும் சுமார் 32 கி.மீ. தொலைவுக்கு சென்று காற்று, நீர், மண் என மூன்று படிமங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல, 2013 இல் அணு உலை இயங்கிய பிறகு கடந்த 4 ஆண்டுகளும் தொடர்ச்சியாக அதே இடங்களில் ஆண்டுதோறும் 1,200 மாதிரிகள் எடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.”

காற்று, மண், தண்ணீர் மாதிரிகளில் “இயற்கையான கதிரியக்கம் மட்டுமே இருந்தது. மேலும், காற்றை மையமாக கொண்டு உயிர் வாழும் உயிரினங்களுக்கு எந்தக் கெடுதலும் இல்லை. இதேபோல, மண்ணை ஆதாரமாக கொண்டு விளையும் அனைத்து வகைப் பயிர்களுக்கும் பாதிப்பு இல்லை. கடல் நீரை ஆதாரமாகக் கொண்டு வாழும் மீன், நண்டு உள்ளிட்ட அனைத்து கடல் வாழ் உயிரினங்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. மாறாக மூன்று நிலைகளிலும் ஆதாரமாகக் கொண்டு உயிர்வாழும் அனைத்து உயிரினங்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளது.”

கேப்பையில் நெய் வடிகிறது என்றே வைத்துக்கொள்வோம்:

[1] அணுமின் நிலையங்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, உயிரினங்களின் பெருக்கத்துக்கு அவை உதவுகின்றன என்கிற உலகமகா “உண்மையை” ஐயா சுந்தரராஜனும் பிற அணுசக்தி அறிவியலாளர்களும் முன்னரே அறிந்திருக்கவில்லையா? 1948-ஆம் ஆண்டிலிருந்தே இந்தியா முழுவதும் அணுமின் நிலையங்கள் அமைத்து ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களே?

[2] இதுதான் “உண்மை” என்றால், ஏராளமான நேரத்தையும், மக்கள் பணத்தையும் செலவு செய்து மீண்டும் கூடங்குளம் பகுதியில் ஆய்வு செய்ய வேண்டியத் தேவை என்ன?

[3] இதுதான் அழுத்தந்திருத்தமான “உண்மை” என்றால், ஐயா சுந்தரராஜன் போன்றோருக்கு இனி வேலை இல்லையே? அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு முக்கியமான வேலைகளுக்குப் போகலாமே? இனி அணுமின் நிலையங்களில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையங்கள் எங்கேயும் வேண்டாமே?

[4] அணு உலையில் வேலை பார்க்கும் சாதாரண ஊழியர்களை பத்து கி.மீ. தூரத்தில் உள்ள டவுன்ஷிப்பில் தங்கவைக்க வேண்டாமே? உயர்நிலை அதிகாரிகள் இன்னும் தூரத்திற்குப் போய் பதுங்கியிருக்கத் தேவையில்லையே? எல்லா அணுஉலை ஊழியர்களும், உயர் அதிகாரிகளும் இன்றிலிருந்து அணுஉலை வளாகத்திலேயே தங்கி, வாழ்ந்து, வேலை பார்த்து ஆடிப்பாடலாமே?

[5] 32 கி.மீ. கணக்கு ஒன்றைச் சொல்கிறாரே ஐயா சுந்தரராஜன்? அது என்ன? ஏன் 32 கி.மீ. சுற்றளவுக்குள் இவரது ஆய்வுகள் செய்யப்பட்டன? அணு உலையிலிருந்து 32 கி.மீ. சுற்றளவுப் பகுதி ஆபத்தானது என்பதால்தானே? அல்லது 32 என்பது சமற்கிருதத்தில் புனிதமான எண்ணா?

காற்றை, மண்ணை, கடல் நீரை மையமாகக் கொண்டு ஆய்வுகள் பல நடத்தியிருக்கும் ஐயா சுந்தரராஜன் போன்றோர் எங்களுடன் கூடங்குளம், இடிந்தகரை போன்ற ஊர்களுக்குள் வந்து மக்களுக்கு நேரும் புற்றுநோய், கருச்சிதைவு, ஊனமானப் பிறப்புக்கள் பற்றி ஆய்வு செய்யத் தயாராக இருக்கிறார்களா?

சுப. உதயகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

Leave a Response