சித்தார்த்தின் நீண்டநாள் கனவு நவம்பர் 3 ஆம் தேதி நனவாகிறது

சித்தார்த்தின் எடாகி என்டர்டெயின்மென்ட்டும், வயாகாம் மோஷன் பிக்சர்ஸும் இணைந்து தயாரித்திருக்கும் படம் அவள். இந்தப் படத்தை மணிரத்னத்திடம் பணியாற்றிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியிருக்கும் இந்தப்படத்தின் கதையை இயக்குநர் மிலிந்த்ராவுடன் இணைந்து சித்தார்த்தும் எழுதியிருக்கிறார்.

இப்படம் பற்றி சித்தார்த் பேசும்போது,

நானும் மிலிந்தும் பதினேழு வருடங்களாக நண்பர்கள். நாங்கள் இருவரும் மணிரத்னம் சாரிடம் ஒரே நாளில் தான் உதவி இயக்குநராகச் சேர்ந்தோம். இந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து எழுதிய ஒன்று. நாங்கள் ஹாரர் படங்களுக்குத் தீவிர ரசிகர்கள். நம் ஊரில் எல்லோரும் பேசுகிற மாதிரி ஒரு ஹாரர் படம் பண்ண வேண்டும், மக்களை உட்கார வைத்துப் பயமுறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை, கனவு எல்லாம். அது இப்போது நனவாகி உள்ளது.

மிலிந்த்ராவ் இந்தப் படத்திற்குப் பிறகு நன்றாக பேசப்படுவார். அதேபோல, படத்தின் கதாநாயகி ஆன்ட்ரியா மிகப்பெரிய பலம். ‘தரமணி’ படத்திலேயே பார்த்திருப்பீர்கள். அதுல்குல்கர்னிக்கும் இது முக்கியமான படமாக இருக்கும் நானும் அதுல் குல்கர்னியும் 12 வருடம் கழித்து சேர்ந்து நடித்திருக்கிறோம்” என்று படக்குழுவை அறிமுகப்படுத்தினார் சித்தார்த்.

இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி மூன்று மொழிகளிலும் திரைக்கு வரவிருக்கிறது.

Leave a Response