ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்க- தமிழகத்திலிருந்து ஈழம் செல்ல விரும்புவோருக்கான அறிவுரை


இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்புவோருக்கு உடனடியாக வீடோ நிலமோ கிடைப்பதுதான் பெரிய சவாலாக இருக்கிறது. யாழ் தீபகற்பத்தில் ஒரு ஊரில் கூரை வீட்டில் வசிக்கிறார் கதிர்காமன் தயாபரன். இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் அவர் கட்டத் தொடங்கிய வீடு, பண வசதி போதாமல் கூரை இல்லாமல் வெறும் சுவர்களுடன் நிற்கிறது. இந்த வீட்டுக்காக தயாபரன் ஏற்கெனவே 3 லட்ச ரூபாய் கடன் வாங்கிவிட்டார். இந்திய அரசின் திட்டப்படி ஒரு வீடு கட்ட ரூ.5.5 லட்சம் தரப்படுகிறது. கட்டுமானச் செலவும் கட்டிடத் தொழிலாளர்களுக்கான ஊதியமும் அதிகரித்துவருவதால் வீடுகளை எங்களால் முடிக்க முடிவதில்லை என்கிறார் தயாபரன். (இலங்கை ரூபாயில் ரூ. 3 லட்சம் என்றால், அது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,40,000-தான் என்பது கவனிக்கத் தக்கது.)

தயாபரனின் பக்கத்து வீட்டுக்காரர் சின்னதுரை செல்வரத்தினத்தால் தன்னுடைய நிலத்தை இன்னமும் திரும்பப் பெற முடியவில்லை. தனது உயர் பாதுகாப்புப் பகுதிக்காக அவருடைய நிலத்தை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது. போர் உச்சகட்டத்தை அடைந்தபோதுகூட இலங்கையைவிட்டு வெளியேறாத அவராலேயே நிலத்தை மீட்க முடியவில்லை என்றால், இந்தியா போய்விட்டுத் திரும்பி வருகிறவர்களால் எப்படிப் பெற முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

பிறப்புச் சான்றிதழ்

தயாபரனின் மகள் தனுகியா (24) இந்தியாவில் இருக்கும்போது பிறந்தார். அவருடைய இந்திய பிறப்புச் சான்றிதழ்படி இலங்கையில் அவரைப் பதிந்துகொள்வதும் உரிய ஆவணங்களைப் பெறுவதும் பெரும் சிரமமாகிவிட்டது. ரூ.25,000 கொடுத்தால்தான் இலங்கைக் குடியுரிமை தருவோம் என்று அரசு கூறிவிட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பட்டயப் படிப்பைத் தொடர முடியவில்லையே என்ற கோபமும் அவருக்கு இருக்கிறது. என் வயதையொத்தவர்கள் இங்கு வேலை கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறோம் என்கிறார் தனுகியா.

இந்தியாவில் பட்டயப் படிப்பு முடித்து வாங்கும் சான்றிதழுக்கு இலங்கையில் உரிய அங்கீகாரம் பெறவும் பெரும் பணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ‘சிலோன் ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்’பின் தலைவர் எஸ். சூரியகுமாரி இதைத் தெரிவிக்கிறார். ஒரு பட்டயத்துக்கு அங்கீகாரம் பெற இலங்கை அரசுக்கு ரூ.37,000 கட்டணம் செலுத்த வேண்டும்! பல்வேறு சிரமங்களுக்கு இடையில் நீண்ட ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கிவிட்டு தாயகம் திரும்பும் இலங்கையர் விஷயத்தில் இலங்கை அரசு இன்னும் சற்று கனிவோடு நடந்துகொள்ளலாம், இதைப் போன்ற கட்டணங்களைக் குறைக்கலாம் என்று கூறுகிறார்.

“இந்திய அரசும் இலங்கை அரசும் இதுபோன்ற பிரச்சினைகளை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எளிதாக்குவதுகுறித்து விவாதித்து நல்ல முடிவுக்கு வர வேண்டும். குடும்பங்கள் மீண்டும் இணையவும் தாங்கள் வசித்த இடங்களுக்கே திரும்பி வாழ்க்கையைத் தொடரவும் உதவ வேண்டும். தேசிய அடையாள அட்டை, குடியுரிமைச் சான்றிதழ்கள் போன்றவை மனிதாபிமான அடிப்படையில் அதிக அலைக்கழிப்புகள் இல்லாமல் வழங்கப்பட வேண்டும். வாழ்க்கையைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை அரசு வழங்க வேண்டும்” என்கிறார் சூரியகுமாரி.

இதில் கொழும்பு, புதுடெல்லி மட்டுமல்லாமல், வடக்கு மாகாண கவுன்சில் நிர்வாகமும் தீவிரமாகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதையே அனைவரும் விரும்புகின்றனர். இதுவரை இம் மாதிரிப் பிரச்சினைகளில் வடக்கு மாகாண அரசு அதிக ஈடுபாடு காட்டவில்லை என்றே அவர்கள் கூறுகின்றனர்.

“எல்லோருமே எங்களைக் கைவிட்டுவிட்டதைப் போலத் தோன்றுகிறது; நாங்கள் உதவிக்கு ஆளின்றி நிராதரவாக இருக்கிறோம். இலங்கைக்குத் திரும்ப நினைப்பவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துவிட்டு வரவும்” என்கிறார் தனுகியா.

– (தமிழகத்திலிருந்து நாடு ஈழம் சென்ற தமிழ் அகதிகளின் நிலையை நேரில் கண்டு, ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழில் எழுதியுள்ளார் ‘மீரா’ சீனிவாசன். இதனை தமிழாக்கம் செய்துள்ளவர் சாரி. அதிலிருந்து ஒரு பகுதி)

Leave a Response