பாசத்தின் வெளிப்பாடு கண்ணீர் – சிநேகன் காணொலி பேச்சு

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் பாடலாசிரியர் சிநேகன் காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு வாக்களித்த ஆதரவாளர்கள், உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள், பிக் பாஸ் ரசிகர்கள், என்னுடைய தோழமை உறவுகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

உங்கள் ஆதரவால் மட்டுமே 100 நாட்கள், வேறொரு களத்தில் இருந்தேன். அதற்கு சாகும் வரை நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

ஆரவ் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு மேடையிலும் வாழ்த்து சொன்னேன், தற்போதும் வாழ்த்து சொல்கிறேன். காரணம், என் குடும்பத்தில் ஒரு சகோதரன் வெற்றி பெற்றிருக்கிறான். அதில் எந்தவித வருத்தமும் எனக்கில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வரும்போது எனக்கொரு சிறு அச்சம் இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நிறைய அழுதுகொண்டே இருக்கிறேன். எதற்கெடுத்தாலும் எமோஷன் ஆகுறேன் என்றார்கள். நான் கிராமத்துக்காரன். பாசத்தை கண்ணீரின் மூலமாகத் தான் வெளிப்படுத்த முடியும். எங்களுக்கு வார்த்தைகள் இல்லை உணர்வுகள் மட்டும். உணர்வுகளை எந்தமொழி கொண்டும் மொழிபெயர்க்க முடியாது. அதன் வெளிப்பாடுதான் கண்ணீர் என்பது எனக்குத் தெரியும். மக்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சத்தோடு வெளியே வந்தேன்.

ஆனால், இன்றைக்கு எனது ஆதரவாளர்கள், தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் எதிரொலியாக ஊடகப் பதிவுகளைப் பார்க்கும் போது மெய்சிலிர்த்துப் போய் நிற்கிறேன். அனைவரது வருத்தங்கள், ஆதங்கங்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. சில இடத்தில் தொலைக்காட்சியைப் போட்டு உடைத்திருக்கிறார்கள், பஸ் மறியல் செய்திருக்கிறார்கள் என்று கேட்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு அன்பு வைக்க நான் என்ன செய்தேன்?. கிராமத்துக்காரனாக, விவசாயி மகனாக சமகால வாழ்க்கையை வாழ முயற்சி செய்தேன். அங்கு நானாக வாழ்ந்திருக்கிறேன்.

சிநேகன் கட்டிப்பிடிப்பதற்காகவே உள்ளே சென்றிருக்கிறான் என்று சொன்னார்கள். ஒன்று தெரியுமா, ஒரு பெண்ணைத் தொடுவதற்குக் கூட, அந்தப் பெண் நம் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அப்போது தான் நெருங்கி வர முடியும். அவ்வளவு எளிதாக ஒரு பெண்ணைத் தொட்டுவிட முடியாது நண்பர்களே. அவர்கள் அந்த ஆதரவு என்னிடமிருக்கிறது என்று நம்பினார்கள். அன்பின் வெளிப்பாடாக தான் அரவணைத்தேன். தாயும், குழந்தையும் அரவணைக்கும் அன்புதான் அங்கு நடந்தது. அதையும் விமர்சனம் செய்தீர்கள். எனக்கு விமர்சனமும், தோல்விகளும் புதிதல்ல. பழகிப்போனது. காரணம், விமர்சனங்களும், தோல்விகளும்தான் இந்த உயரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. வெற்றி, விமர்சனம், தோல்வி இதை எல்லாம் சமமாகப் பார்த்தவன்.

நிறைய ரணங்களை அனுபவித்தவன். இந்த தோல்வியைக் கண்டெல்லாம் துவண்டு போக மாட்டேன். சிநேகனைக் காணவில்லை என்று செய்திகள் வெளியான போது ஒரு பக்கம் சிரிப்பாகவும், மற்றொரு பக்கம் ஆதங்கமாகவும் இருந்தது. அய்யோ நம்மை தேடுகிறார்களே இவர்கள் என்று. அதற்கான பதிவு தான் இது.

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. 100 நாட்கள் தனியாகவே இருந்தோமே, ஒரிரு நாட்கள் ஓய்வில் இருக்கலாம் என்று தான் அமைதியாக இருந்தேன். ரொம்ப நல்லாயிருக்கேன், மகிழ்ச்சியாக இருக்கேன். அதற்கு காரணம், ஊடகங்கள் வாயிலாக வரும் அன்பின் எதிரொலி. வெற்றியடைந்தால் கூட இது தெரியாமல் போயிருக்கோம் என்ற ஐயப்பாடு இருக்கிறது. உங்கள் அனைவரது ஆதரவு இருக்கும் வரை ஊர்க்குருவி மாதிரி மேலே பறந்து கொண்டுதான் இருப்பேன். தயவு செய்து வருத்தப்படாதீர்கள், வேறு எந்த விபரீதமான முடிவுக்கும் போக வேண்டாம். யாரையும் திட்டாதீர்கள், அனைவருமே நம் சகோதரர்கள்.

உங்களது ஆதரவைத் தொடர்ந்து கொடுங்கள். கூடிய விரைவில் அனைவரையும் சந்திப்பேன். என் மக்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். காரணம், நான் மக்கள் கவிஞன். கிராமத்துக்காரன். எங்கு நட்டாலும் முளைப்பேன், அந்த நம்பிக்கை இருக்கிறது. உங்கள் ஆதரவால் இன்னும் பல மடங்கு அந்த நம்பிக்கை பெருகியிருக்கிறது. நன்றி

இவ்வாறு சிநேகன் பேசியிருக்கிறார்.

Leave a Response