ஆயா வடை சுட்ட கதை- திரைப்பட விமர்சனம்


ஓர்அடுக்குமாடிக்குடியிருப்பில் வீட்டுக்குவீடு செய்தித்தாள் போடும் இளைஞன், அங்குள்ள மகிழ்ந்துகளைக் கழுவித்துடைக்கும் இளைஞன் இவர்களுக்கு இரண்டுநண்பர்கள். இவர்கள் நால்வரும் சேர்ந்து போதைப்பொருள் கடத்தும் கூட்டத்திடம் இருந்து பெரும்பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள் என்கிற ஒற்றைவரிக்கதைதான் ஆயாவடைசுட்டகதை.
நாயகனாக நடித்திருக்கும் அவிதேஜ் மற்றும் அவருடைய நண்பர்கள், எந்நேரமும் ஒன்றுகூடிப் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் செயல்களைக் காட்டிலும் பேசுவதும் குடிப்பதும் அதிகமாக இருக்கிறது. ஒரு கடுமையான நேரம் என்றபோதும்கூட திருடுவது எனும்போது பதறும் மத்தியதரவர்க்கத்தின் பிரதிபலிப்பாக இந்த இளைஞர்களைப் படைத்திருக்கிறார் இயக்குநர்.
இந்தக்கதையில் நாயகிக்கென்று தனியாக இடம்இல்லையென்றாலும் படத்துக்கு நாயகி தேவைதானே. அதற்காகவே சுபுர்ணா இருக்கிறார். பாடல் காட்சி மற்றும் ஒருசில காட்சிகளில் வந்து தான் இருப்பதைக் காட்டிக்கொள்கிறார். அந்த அடுக்குமாடிக்குடியிருப்புக்குப் போதைப்பொருள் கடத்தும் கூட்டம் வரும்போதே கதையின் போக்கு புரிகிறது. அதுபோலவே தவறாமல் நடக்கிறது. அந்தக்கூட்டமும் அவர்கள் செய்யும் சேட்டைகளும் சிரிப்பை வரவழைக்கும் என்று நினைத்துத்தான் எடுத்திருக்கிறார்கள்.
ரெண்டுநாள் டைம் குடுங்கண்ணே என்று அடிக்கடி கேட்கும் அடியாள் ஒருவர்தான் கொஞ்சம் சிரிக்கவைக்கிறார். போகும்போதுதான் வருமா? வம்போதுதாண்ணே போகணும் என்கிற வசனம் முதல்முறை கேட்கும்போது நன்றாக இருக்கிறது. அதை மறுபடி மறுபடி வைத்திருக்கவேண்டுமா? அந்த அடுக்குமாடிக்குடியிருப்பிலேயே பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலதிகாரி ஒருவர் இருக்கிறார்.
எந்நேரமும் வீட்டிலேயே இருக்கும் அவர் நாயகனைக் கன்னத்தில் அறைந்து திட்டுவதும் அங்கு வரும் நாயகியிடம் உடனே வழிவதும் என்று பொருத்தமாகச் செய்திருக்கிறார். டிரெயினிங் எடுத்துச் செய்கிற போலிஸ் வேலையைவிட திருடனை மிரட்டிப் பணம்பறிப்பது நல்லா இருக்கே என்று அவர் சந்தோசப்படும் நேரத்தில் காவலதிகாரிகளின் போக்கைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவு பெரிய அடுக்குமாடிக்குடியிருப்பில் கதையில் வருகிற முக்கியப்பாத்திரங்களைத் தவிர வேறு யாரும் நடமாடுவதே இல்லை.
நான்கு இளைஞர்கள் கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருப்பது மட்டுமல்ல இரவுநேரங்களிலும் அவர்கள் நடமாட்டத்தை யாரும் கண்டுகொள்வதே இல்லை என்பது பொருத்தமாக இல்லை. அதேபோல அந்தக் குடியிருப்புக்கு போதைப்பொருள்கடத்தும் கூட்டம் பொய் சொல்லிவிட்டு வருகிறார்கள். யாரும் சந்தேகப்படவில்லை. அதுமட்டுமின்றி மென்பொருள்துறையில் பணியாற்றுபவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் முகத்தை மழித்துக்கொண்டு கொஞ்சம் உடைகளிலும் மாற்றம் செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. கடைசியில் அவர்கள் காவல்துறையில் மாட்டிக்கொள்ளும் காட்சி ரசிக்கவைக்கிறது.
கதை மற்றும் திரைக்கதையில் பல குறைகள் இருந்தாலும் அவற்றைத் திரைக்கதையில் இழையோடும் நகைச்சுவை உணர்வு விஞ்சிவிடும் என்று இயக்குநர் பனிந்திராபாபு நம்பியிருக்கிறார் போலும்.
சமிர் சிவா ஆகியோரின் இசையில் ஆயாவடைசுட்டகதை உட்பட பாடல்கள் படத்தோடு ஒன்றியிருக்கின்றன.

Leave a Response