திலகர்- திரைப்பட விமர்சனம்


வெள்ளூர் என்றால் வேல் கம்பு என்று சொல்லுமளவுக்கு திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமம் வெள்ளூர்அந்தஊரிலுள்ளலவர்கள் வெட்டு குத்துக்கு அஞ்சாதவர்கள்.
அந்த ஊரின் முக்கியப்புள்ளியாக இருக்கும் கிஷோருக்கு இந்தநிலையை மாற்றவேண்டும் என்று ஆசை. பழியுணர்ச்சி காரணமாக ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு செத்துப்போவது இனிமேலாவது தடுக்கப்படுவேண்டும் என்று நினைக்கிறார். அவருடைய எண்ணம் ஈடேறியதா என்பதுதான் படம். தேவர்மகன் பட கமலை நினைவுபடுத்துகிற வண்ணம் கிஷோரின் வேடத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் பெருமாள்பிள்ளை.
கிஷோரின் அரிவாள்மீசையும் உடல்மொழியும் கமலை ஒத்திருக்கிறது. எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுகிற அந்த மக்கள்கூட்டத்தின் முன்னால் சிக்கல்களை நிதானமாக அணுகுகிறார். அவருடைய பாத்திரப்படைப்பு நன்றாக இருப்பதோடு தன் நடிப்பால் அதைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறார் கிஷோர். ஒருகட்டத்தில் அவர் மரணமடைகிறபோது இனிமேல் அவர் வரமாட்டாரா என்று நினைக்கவைத்துவிடுகிறார்.
வெட்டு குத்துக்கு அஞ்சாத குடும்பத்தில் கிஷோருக்குத் தம்பியாகப் பிறந்தவர் நாயகன் துருவா. கோழி அறுப்பதைக்கூடப் பார்க்கச் சகிக்காதவராக இருக்கிறார். தானுண்டு தன்படிப்புண்டு என்று இருக்கிறார். ஆற்றில் இறங்கிக்குளிக்கக்கூட அஞ்சி, கரையில் உட்கார்ந்து செம்பில் தண்ணீர் மொண்டு குளிக்கிறவர் அவர். அண்ணன் கிஷோர் கொலை செய்யப்பட்டதும், அம்மாவும் அண்ணியும் பொண்டுகப்பய என்று பேசுவதாலும் அண்ணனை இழந்த வெறியாலும் தலைகீழாக மாறுகிறார்.
தாடி மீசையுடன் உருவத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் நல்லவேறுபாடுகாட்டியிருக்கிறார் துருவா. அண்ணனின் கொலைக்குக் காரணமானவர்களைக் கொன்று எரித்து அந்தச்சாம்பலை ஊரெல்லாம் தூவிக்கொண்டு வருகிற இடத்தில் பிரமாண்டமாக உயர்ந்து நிற்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மிருதுளாவுக்குப் பெரிதாக வேலையில்லை. நீ என்னை மறந்துவிடு என்று சொல்வதற்காக துருவா செல்லும்போது அவரை முந்திக்கொண்டு என்னை மன்னிச்சுடு திலகர் என்று மிருதுளா சொல்வது எதிர்பாராதது.
அந்தமக்கள் கூட்டத்தில் உள்ள பெண்களின் மனநிலையை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் பூஇராமு, சிறப்பாக நடித்திருக்கிறார். தன்முனைப்பை மட்டுமே வைத்துக்கொண்டு அதன்காரணமாக தங்கள் வாழ்க்கையை மட்டுமின்றி தங்கள் சந்ததியினரின் வாழ்க்கையையும் வீணடிப்பவர்களுக்கு எடுத்துக்காட்டான வேடம் அவருடையது.
நாயகன் துருவாவின் அம்மாவாக நடித்திருக்கும் சுஜாதாமாஸ்டரின் வேடம் அந்தமக்கள் கூட்டத்தின் பெண்குலத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. என் வயிற்றில் வந்து இப்படி ஒரு புள்ள பொறந்துடுச்சே என்று வருந்துவதும், எதிரிகளைக் கொன்று எரித்து அந்தச்சாம்பலை ஊரெல்லாம் தூவிவிட்டு துருவா வரும்போது, வசனமே பேசாமல் அதைப் பெருமிதத்துடன் வரவேற்கும் காட்சியிலும், கடைசியில் கிளிப்பிள்ளையை நான் கொன்றுவிட்டேனே என்று கலங்குகிற இடத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் எம்.நாராயணன் ஒளிப்பதிவு செய்திருப்பதோடு சின்னவேடத்தில் நடித்துமிருக்கிறார். கதையில் அவருக்கென்று எந்தப்பங்கும் இல்லாமல் போய்விட்டது. அவ்வப்போது வாகனஓட்டியாக மட்டுமே வந்துபோகிறார். இசையமைப்பாளர் கண்ணன் படத்துக்குப் பலம். வாழைமரங்கள் வெட்டப்பட்டுக்கிடக்கும்போதும் கிஷோரின் மரணத்தையொட்டி வருகிற மனசெல்லாம் ரணம் என்கிற பாடலும் சிறப்பு.
பின்னணி இசையும் பொருத்தமாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதிமக்களின் வாழ்க்கை என்று வெளிப்படையாகக் காட்டியிருப்பதன் மூலம் தென்தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை அப்படியே படம்பிடித்துக்காட்ட இயக்குநர் நினைத்திருக்கலாம். அந்த வாழ்க்கையிலிருந்து மாறி மனிதநேயத்தோடு வாழவேண்டும் என்று சொல்லவும் செய்திருக்கிறார். அதற்காக, நீ போலிஸ், திலகர் இன்ஜினியர் இப்படியே எல்லாரும் படிச்சு பெரியஆளாகணும் என்று கிஷோர் வசனம் பேசுவதும், ஊரெல்லாம் பயப்படுகிற அளவுக்கு வளர்ந்து நிற்கிற நேரத்தில் துருவா, ஒவ்வொரு நாளும் பயந்துகிட்டே இருக்கேன் என்று கதறுவதும் நல்லபொறிகள்.
குறிப்பிட்ட சாதியை அடையாளப்படுத்திவிட்டு அவர்கள் செய்கிற செயல்களைக் காட்டும்போது அந்தச்சாதியினரின் பெருமைகளாக அவை மாறும் ஆபத்து இருப்பதை இயக்குநர் உணராமல் போனது ஏனோ?
இயற்கையையும் நேசித்து மனிதநேயம் மட்டுமின்றி உயிர்நேயத்தோடு வாழ்ந்த இனம் என்கிற பெருமைக்குரிய இனத்தின் ஒரு பகுதியான மக்கள்கூட்டம், நீர்க்குமிழிகள் போன்று உடனே உடைந்துவிடக்கூடிய தன்முனைப்பை மட்டுமே பெரிதுபடுத்தி ஒருவரையருவர் வெட்டிக்கொல்கிறார்கள் என்பதும் அது அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர்கிறது என்று காட்டியிருப்பதும் வரவேற்புக்குரியதாக இல்லை.
கடைசியில் பத்துவயதுப்பையன் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது வரவேற்புக்குரியது. இந்தக்கருத்தைச் சொல்வதற்காக வன்செயல்களை விளக்கமாகக் காட்சிப்படுத்தியிருப்பதைக் குறைத்திருக்கவேண்டும்.

Leave a Response