எட்டு ஆண்டுகள் பதவியில் இருந்த பாஜக மாணவரணி படுதோல்வி – ஆர் எஸ் எஸ் அதிர்ச்சி

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் தேர்தலில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அய்தராபாத் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலிலும் பா.ஜ.க. மாணவரணி ஏபிவிபி படுதோல்வி அடைந்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலோடு செயல்படும் பா.ஜ.க. அரசு கல்வி நிறுவனங்களின் மீதும், தலித்-சிறுபான்மையினர் மீதும் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அய்தராபாத் பல்கலைக் கழகமும் இதற்குமுன் கண்டிராத வகையில் ரோஹித் வெமுலா உள்ளிட்ட அய்ந்து தலித் ஆராய்ச்சி மாணவர்கள் மீது கொடூரத்தாக்குதலை தொடுத்தது. தன்னிச்சையாக மாணவர் பேரவைச் சட்டங்களைமாற்றுவது, போராடும் மாணவர் பேரவை நிர்வாகிகளுக்கு தாக்கீது அளிப்பது உள்ளிட்ட பழிவாங்கலில் ஈடுபட்டது. மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீது கடுமையான தாக்குதலை பல்கலைக்கழக நிர்வாகம் தொடுத்தது.இத்தகைய சூழலில் மாணவர் பேரவைத் தேர்தல் செப்.21 ஆம் தேதியன்று நடைபெற்றது.

இத்தேர்தலில், வகுப்புவாத மதவாத அமைப்புகளை வீழ்த்தி மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க சமூக நீதிக்கான கூட்டணி (அலையன்ஸ் ஃபார் சோஷியல் ஜஸ்டிஸ்- ஏஎஸ்ஜே) அமைக்கப்பட்டது. இதில் இந்திய மாணவர் சங்கம், பழங்குடி மாணவர் முன்னணி, முசுலிம் மாணவர் அமைப்பு, தலித் மாணவர் அமைப்பு, அம்பேத்கர் மாணவர் பேரவை ஆகியவை அணி அமைத்துப் போட்டியிட்டன.

ஏபிவிபி-யும், ஓபிசிஎப் அமைப்பும் அணி அமைத்துப் போட்டியிட்டன.இத்தேர்தலின் முடிவுகள் செப்.22 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. இதில் அனைத்து நிர்வாகப் பொறுப்புகளையும் சமூக நீதிக்கான கூட்டணி கைப்பற்றியது. பேரவைத் தலைவருக்கு போட்டியிட்ட அம்பேத்கர் மாணவர் பேரவையின் சிறீராக், ஏபிவிபி வேட்பாளரைவிட 170 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

துணைத் தலைவராக பழங்குடி மாணவர் முன்னணி-யின் லுனாவத் நரேஷ் 260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளருக்குப் போட்டியிட்ட ஆரிஃப் அஹமத் 409 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இணைச்செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட்ட முசுலிம் மாணவர் அமைப்பின் (எம்எஸ்ஃப்) முஹம்மத் ஆஷிக் 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கலாச்சாரச் செயலாளராக தலித் மாணவர் அமைப்பின் குண்டெட்டி அபிஷேக், விளையாட்டுச் செயலாளராக தலித் மாணவர் அமைப்பின் லொலம் ஸ்ரவன குமார் ஆகியோரும் ஏபிவிபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுக்குழுவின் 3 உறுப்பினர்களுக்கான தேர்தலில் அம்பேத்கர் மாணவர் பேரவையின் மஞ்சுளா (ஆராய்ச்சி) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற இரண்டுஇடங்களை இந்திய மாணவர் சங்கத்தின் தினாஞ்ஜலி டாம், சாரு நிவேதா ஆகியோர் கைப்பற்றினர். மொத்தமுள்ள 42 கவுன்சிலர் பதவியிடங்களில் சமூக நீதிக்கான கூட்டணி30 இடங்களையும், ஏபிவிபி – -ஓபிசிஃப் கூட்டணி 12 கவுன்சிலர்களையும் கைப்பற்றியது.

பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாகப் பொறுப்பில் இருந்த மதவாத அமைப்பான ஏபிவிபி படுதோல்வியைத் தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் பாஜக அணி தோல்வியுற்றுறிருப்பதால் ஆர் எஸ் எஸ் அமைப்பு அதிர்ச்சியடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response