எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கவில்லை – கி.வீரமணி தகவல்

சென்னை பெரியார் திடலில் 14.9.2017 அன்று நடை பெற்ற நவோதயா எதிர்ப்புச் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது உரையில் கூறியதாவது,,,,

நவோதயா கல்வி அறிமுகமான அந்தக் கால கட்டத்திலேயே 1986ஆம் ஆண்டிலேயே எதிர்த்ததும், எரித்ததும் திராவிடர் கழகமே.

நவோதயா என்பது வருண பேதம் வர்க்கப் பேதத்தை மய்யமாகக் கொண்டது.

தொடர்ந்து சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை மத்தியில் உள்ள பிஜேபி அரசு மேற்கொண்டிருப்பதும், நாமும் சளைக்காமல் களத்தில் நின்று போராடுவதும் வழமையான ஒன்றாகவே ஆகிவிட்டது.

நாம் தீயணைப்பு வீரர்கள் – தீயணைப்புப் பணியில் ஈடுபடும் தோழர்கள் நேரம் காலம் பார்க்க முடியுமா? தீ விபத்து எங்கு நடக்கும் எப்பொழுதும் நடக்கும் என்று முன் கூட்டியே அனுமானிக்க முடியுமா?

அதே போல்தான் மத்தியில் இருக்கக்கூடிய பிஜேபி அரசு தனது மதவாத – சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செய்து கொண்டே இருக்கிறது.

இந்த நேரத்தில் நமது இனத்தைச் சேர்ந்தவர்கள், திராவிடர் இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கையால் பலன் பெற்றவர்கள் கூட எதிரிகளின் கண்ணி வெடி களில் சிக்கிக் கொள்வது வேதனை யளிக்கக் கூடியதாகும்.

இராமனுக்கு வானரப் படையாக இருந்து இலங்கைக்குச் சென்று தீ வைத்தவன் கூட நம் இனத்தைச் சேர்ந்த அனுமான் தானே! அனுமார்களும், விபூஷணர் களும் தானே நம் இனத்தைக் காட்டிக் கொடுத்தனர்.

தந்தை பெரியார் சொல்லுவார் விபீஷணர்களுக்கு என்ன பட்டம் தெரியுமா? சிரஞ்சீவி என்னும் பட்டம். ‘சிரஞ்சீவி’ என்றால் என்றைக்குமே நிலையாக இருக்கக் கூடியவர்கள், நம் இனத்தைக் காட்டிக் கொடுத்தால் அவர்களுக்குப் பட்டம் சிரஞ்சீவி! (விபிஷணனுக்கு ஆழ்வார் பட்டம் கொடுக்கப்படவில்லையா?

அறிஞர் அண்ணா அவர்கள் அழகாகவே சொன்னார். விதைக்காது விளையும் கழனிக்குப் பெயர்தான் ஆரியம் என்பார். அதன் மூலபலத்தோடு போர் புரிவதுதான் தந்தை பெரியார் போர் முறை என்றும் அண்ணா சொன்னார். அந்தப் பணியைத்தான் நாம் செய்தாக வேண்டும்.

ஒரு பக்கம் ‘நீட்’ இன்னொரு பக்கம் நவோதயா! மத்திய இணை அமைச்சராக இருக்கக் கூடியவர் நவோதயா தேவை – அவசியம் என்று சொல்லுகிறார் – இரண்டு நாள்கள் கழித்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் இன்னும் இரு வாரங்களில் தமிழ்நாட்டில் நவோதயா தொடங்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கிறார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்று நாம் சிந்திக்க வேண்டாமா?

நீதிபதிகளை மதிக்கிறோம் – ஆனால் அவர்கள் கூறும் அத்தனையையும் ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

நாளை அண்ணா அவர்களின் பிறந்த நாள்; அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது குறுகிய காலம்தான். ஆனாலும் அந்தக் குறுகிய காலத்தில் அவர் செய்த சாதனைகள் பல.

ஒன்று தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டல். இரண்டு – சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம். மூன்று – தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை – இருமொழிக் கொள்கை, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான் – இந்திக்கு இடமில்லை என்ற நிலையை முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் உருவாக்கினார்கள்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தும், மருத்துவர்களின் கட்டளையை மீறியும் முதல் அமைச்சர் அண்ணா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி – சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டதற்கான விழா!

‘மருத்துவர்கள் கட்டளையையும் மீறி இந்த நிகழ்ச்சியில் நான் பங்கு பெறுகிறேன். தாய்த்திரு நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது பற்றிய விழாவில் நான் கலந்து கொள்ளாவிட்டால் இந்த உடல் இருந்து எனக்கு என்ன பலன்?’ என்று பேசினார்.

அப்பொழுது அண்ணா அவர்கள் சொன்ன ஒரு கருத்து மிகவும் முக்கியமானதாகும். மத்தியில் ஓர் ஆட்சி இந்த மாநில ஆட்சியைக் கலைக்க விரும்புவதாக எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களால் முடியாதா என்றால் கண்டிப்பாக முடியும்.

அதே நேரத்தில் நான் குறுகிய காலத்தில் சாதித்த இந்த மூன்று சாதனைகளில் கைவைக்க அவர்களுக்குத் துணிவு வராது. அந்த அச்சம் இருக்கும்வரை – இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆண்டு கொண்டுள்ளான் என்று பொருள்’ என்று சொன்னார்களே – அதனை அண்ணா பெயரில் கட்சி வைத்துக் கொண்டவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இப்பொழுது நடப்பதும் தேவாசுரப் போராட்டம்தான் – ஆரியர் திராவிடர் போராட்டம்தான்.

நாம் புராணத்தைப் படித்திருக்கிறோம்.

பாற்கடலில் அமுதம் கிடைத்தது பற்றி; மேரு மலையை மத்தாகக் கொண்டு வாசுகி என்னும் பாம்பை மத்தினைக் கடையும் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனராம். வீராதி வீரர்களான தேவர்கள் ஆலகால விஷத்தை உடைய பாம்பின் வால்பக்கம்தான் நின்றனர்.

கொடிய விஷம் கக்கும் பாம்பின் தலைப் பக்கம் நின்று அசுரர்கள் கடைந்தார்கள். அமுதம் கிடைத்தது. நியாயமாக 50 சதவீத அமுதத்தை அசுரர்களுக்குக் கொடுக்க வேண்டும் அல்லவா? 50 சதவீதம் பிரச்சினை அப்பொழுதே வந்திருக்கிறது போல!

என்ன செய்தார்கள்? மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்க, முழு அமிர்தத்தையும் தேவர்கள் தட்டிப் பறித்துக் கொண்டனர் என்பது புராணம்.

நம்மாள் பலகீனமடைந்து வழுக்கி விழுவது மோகினி அவதாரத்திடம்தானே! அன்று மோகினி – இன்று பதவி – அது தானே இப்பொழுது நடந்து கொண்டுள்ளது – மறுக்க முடியுமா?

தமிழ்நாடு அரசுக்கு இந்தக் கூட்டத்தின் வாயிலாக ஒரு முக்கியமான வேண்டுகோள்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். தமிழ்நாட்டுக்கு நவோதயா தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். அவர்களும், ஜெயலலிதா அவர்களும் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் திறக்க இசையவில்லை. அவர்களது பெயர்களை சொல்லிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு நவோதயாவுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது.

அம்மா அரசு, அம்மா அரசு என்று அடிக்கடி சொல்லுகிறார்கள். அவர்கள் நம்பிக்கைப்படியே பார்த்தாலும் நவோதயாவை அனுமதித்தால் அம்மாவின் “ஆவி’’ மன்னிக்காது – மன்னிக்கவே மன்னிக்காது என்று பேசினார் கி.வீரமணி.

Leave a Response