அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை – வாகன ஓட்டிகள் வயிற்றில் பால்வார்த்த நீதிபதி

அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மோட்டார் வாகனச் சட்டம் 1988- பிரிவு 3-ன்படி உரிய வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எந்த நபரும் பொது இடத்தில் வாகனம் ஓட்டக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனை, அல்லது ரூ.500 அபராதம் விதிக்கப்படும். போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

இன்று (செப்டம்பர் 1-ந்தேதி) முதல் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அசல் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய பலர் பிடிபட்டனர். அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

இதை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி துரைசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.மேலும், திடீரென்று இப்படி ஒரு முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் நீதிபதி துரைசாமி கூறியுள்ளார். வாகனச் சட்ட பிரிவு 139-ன் படி ஓட்டுநர்கள், அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்பதற்காக, வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.

இதே விசயத்துக்காக ட்ராபிக்ராமசாமி முறையீட்டின்போது, ‘அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்’ என்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியிருந்தார்.

Leave a Response