பிரபாகரன் மீது அபாண்டப்பழி சுமத்துவதா? ரணிலுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைப் பிரதமர் ரணில் தனியார்தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்ன கருத்துகளுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து பழ.நெடுமாறன்  வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச பணம் கொடுத்ததாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் பொறுப்பை வகிக்கும் ஒருவர் எத்தகைய ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டை கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

2002ஆம் ஆண்டில் நார்வேயின் முயற்சியின் பேரில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும், அப்போதைய பிரதமர் ரணிலும் கையெழுத்திட்டனர். தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து ராணுவம் அகற்றப்படும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்பது போன்ற அந்த உடன்பாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட எந்த அம்சத்தையும் ரணில் நிறைவேற்றவில்லை.

மேலும், இந்திய அரசின் ரா உளவுத் துறையோடு சேர்ந்து, புலிகள் இயக்கத்தை உடைப்பதற்கு ரணில் முயற்சி செய்தார்.

இதனால்தான், இலங்கையில் முன்பு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் ராஜபட்சவும், ரணிலும் போட்டி போட்டபோது, இருவருமே தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்பதால், தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழர்களை விடுதலைப்புலிகள் கேட்டுக் கொண்டனர். ரணில் தோற்கடிக்கப்பட்டார்.

அந்தக் கோபத்தில் இப்போது பிரபாகரன் மீது அபாண்டமான பழியைச் சுமத்துகிறார். இதை ஒருவரும் நம்பப் போவதில்லை என்றார்

Leave a Response